அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் எனவும், பழனிசாமி, பன்னீர்செல்வம் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் எனவும், பொது செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி இருந்தனர். ஆட்சியில் இருந்த வரை, பிரச்னை இல்லாமல் சென்றது.சட்டசபை தேர்தலுக்கு பின், பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே அதிகார மோதல் உருவானது.
பன்னீர்செல்வம்
கட்சி அதிகாரத்தை முழுமையாக கைப்பற்ற நினைத்த பழனிசாமி தரப்பு, பொதுக்குழுக் கூட்டத்தை, ஜூலை 11ல் கூட்டியது. அதற்கு தடை விதிக்கக் கோரி, பன்னீர்செல்வமும், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.ஆனால், திட்டமிட்டபடி பொதுக்குழுவை கூட்டிய பழனிசாமி அணியினர், கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமியை தேர்வு செய்தனர். ஒருங்கிணைப்பாளராக இருந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களையும், கட்சியில் இருந்து நீக்கினர்.
அதற்கு பதிலடியாக பன்னீர்செல்வம் தரப்பும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்குவதாக பன்னீர்செல்வம் அறிவித்தார். புதிய இணை ஒருங்கிணைப்பாளராக, தன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை நியமித்தார். மேலும், பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலர்களை நீக்கி விட்டு, புதிய மாவட்ட செயலர்களையும் நியமித்தார்.
இருவருக்கும் இடையே இந்த சண்டை நீடித்த நிலையில், பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய பன்னீர்செல்வம் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றம் சென்றார். விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றமே விசாரிக்கும் என கூறி திருப்பி அனுப்பியது.
இதன் தொடர்ச்சியாக, அந்த மனுக்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தன.பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், அ.தி.மு.க., நிர்வாகிகள் சார்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத், பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் வாதம், 11ம் தேதி நிறைவடைந்தது. வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதி தள்ளி வைத்திருந்தார்.
பொதுக்குழு செல்லாது
இச்சூழ்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். இதற்கு 30 நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். தனித்தனியே பொதுக்குழு, செயற்குழுவை கூட்டக்கூடாது. பொதுக்குழுவை கூட்ட தனி ஆணையரை நியமிக்க வேண்டும். அ.தி.மு.க.,வில் ஜூன் 23க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும். ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் செல்லாது. பழனிசாமியை பொது செயலாளராக தேர்வு செய்தது செல்லாது. புதிதாக கூட்டப்பட உள்ள பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதில் சிக்கல் என்றால், பழனிசாமி நீதிமன்றத்தை நாடலாம். என தீர்ப்பு வழங்கினார்.
அடுத்தக்கட்ட நடவடிக்கை
உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பாக பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆலோசனைக்கு பிறகு பழனிசாமியின் ஆதரவாளர்களான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கே.பி.முனுசாமி கூறியதாவது: தீர்ப்பின் முழுவிவரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடத்திய பொதுக்குழுவை போலவே கடந்த இரு பொதுக்குழுவும் நடத்தப்பட்டது. இதற்கு வந்த அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும், கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றினர். இந்த உத்தரவால் எங்களுக்கு பின்னடைவு என்பதற்கான கேள்வியே எழவில்லை. 2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பழனிசாமிக்கு ஆதரவாக அவரை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். நீதிபதியின் உத்தரவை எப்படி எடுத்துச்செல்வது என்பதை எங்களது நிர்வாகிகள் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment