பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்த ஹிந்தி படத்தை, தமிழக தியேட்டர்களில் திரையிட வினியோகஸ்தராகி உள்ளார், முதல்வரின் மகன் உதயநிதி; அதில், தவறு ஏதுமில்லை. ஆனால், ஹிந்தி பற்றி இவர்கள் வாய் கிழிய பேசுவது தான் வேடிக்கையாக உள்ளது.'ஹிந்தியை எந்த வடிவத்திலும் நுழைய அனுமதிக்க மாட்டோம்' என்று, வீர வசனம் பேசியவர் கருணாநிதி. இவர் உள்ளிட்ட ஹிந்தி எதிர்ப்பாளர்களின் பேச்சை நம்பி, போராட்டத்தில் ஈடுபட்டு, சிதம்பரத்தில்ராஜேந்திரன் என்ற மாணவன் உயிர்நீத்தான். 'ஹிந்தி தெரியாது போடா' என்ற, 'ஹேஷ்டேக்' வெளியிட்டு, அல்ப சந்தோஷம் அடைந்தவர்களும் தி.மு.க.,வினர் தான்.
தி.மு.க., முன்னர் எதிர்க்கட்சியாக இருந்த போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், ஆளும் மத்திய அரசையும், இவர்கள் எத்தனை கேள்வி கேட்டனர்? ஹிந்தி திணிப்பை ஏற்க மாட்டோம்என்றெல்லாம் பிடிவாதம் பிடித்தனர். ரயில் நிலையங்களில் எழுதப்பட்ட ஹிந்தி எழுத்துகளையும் அழித்தனர். சமீபத்தில் ஒரு பேட்டியில், தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதி, 'நாங்கள் நினைத்தால், தமிழகத்தில் ஹிந்தி பிரசார சபா என்ற ஒன்றே இருக்காது' என, வீர வசனம் பேசினார். 'ஹிந்தி படித்தால் பானி பூரி தான் விற்க முடியும்' என்றும் கேலி செய்தனர்.
இப்போது, ஹிந்தி படத்தை வெளியிடும் உரிமை பெற்றுள்ள உதயநிதி, 'நாங்கள் ஹிந்தி கற்பதை எதிர்க்கவில்லை; திணிப்பதையே எதிர்க்கிறோம்' என்கிறார்.
தமிழக மக்களை, இவர்கள் எந்த அளவுக்கு ஏமாளிகளாக நினைக்கின்றனர் என்பது கண்கூடு. இன்று ஹிந்தி திரைப்படத்தை வினியோகம் செய்வதற்காக சப்பைக்கட்டு கட்டுபவர்கள், நவோதயா பள்ளிகளை ஏன் அனுமதிக்கவில்லை... அரசு பள்ளிகளில் ஹிந்தியை ஒரு பாடமாக வைத்து, விருப்பம் உள்ளவர்கள் கற்கலாம் என்று ஏன் சொல்லவில்லை... பணம் வருகிறது என்றால், கொள்கையை குழி தோண்டி புதைக்க, தி.மு.க.,வினர் தயங்க மாட்டார்கள் என்பது நுாற்றுக்கு நுாறு உண்மை.
நேரத்திற்கு ஏற்றபடி இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டால், 'நெஞ்சு பொறுக்குதில்லையே... இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால், நெஞ்சு பொறுக்குதில்லையே...' என்ற, பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.
No comments:
Post a Comment