'தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது; அதை முற்றிலும் ஒழித்தே தீர வேண்டும். அதற்காக சர்வாதிகாரியாக கூட மாறுவேன்' என்று முதல்வர் ஸ்டாலின்
கூறியுள்ளார். மேலும், போதைப் பொருள் சாப்பிடுவதால், மூளை செயல்பாடு குறைகிறது; மந்த நிலை ஏற்படுகிறது. தனிமையை விரும்புதல், சுய கட்டுப்பாட்டை இழத்தல், பழக்கவழக்கங்கள் மாறுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மனதளவில் பாதிப்பு ஏற்படுவதோடு, இதயத்தின் செயல்பாடு நின்று போதல், பக்கவாதம் பாதித்தல் போன்ற பாதிப்புகளும் உருவாகும் என்றும் பட்டியலிட்டுள்ளார்.
இவை அனைத்தும், போதைப் பொருள் சாப்பிடுவதால் மட்டும் வருவதில்லை... அரசால் நடத்தப்படும், 'டாஸ்மாக்' கடைகளில் விற்கப்படும் மதுவை அருந்துவதாலும் ஏற்படும் என்பதை, முதல்வர் மறந்து விட்டார்.
ஏற்கனவே தமிழகத்தில் பாதி பேர், அந்த நிலைமைக்கு தான் தள்ளப்பட்டு உள்ளனர். பள்ளி மாணவ - மாணவியர் கூட சீருடையிலேயே மது அருந்துவது போல, சமூக வலைதளங்களில் காட்சிகள் வந்த வண்ணம் உள்ளன.
டாஸ்மாக் மதுக் கடைகளில் விற்பது ஆரோக்கிய பானம் அல்ல; அதுவும் போதை மருந்து தான். எனவே, மற்ற போதைப் பொருட்களை ஒழிப்பதோடு நில்லாமல், டாஸ்மாக் கடைகளையும் நிரந்தரமாக மூடி, நல்ல சமுதாயத்தை உருவாக்க முதல்வர் முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment