சமூக வலைதளங்கள் துவங்கி, செய்தி இணையதளங்கள் வரை எதை திறந்தாலும், அவற்றில் பெரிய அளவில் செய்யப்படுபவை, 'ஆன்லைன்' சூதாட்ட விளம்பரங்களே.'ஆன்லைன் சூதாட்டத் தில் பங்கேற்க விரும்புவோர், அதற்காக எவ்வளவு தொகையை செலுத்தினாலும், சூதாட்ட நிறுவனம் சார்பில் அதிகபட்சமாக, 1,500 ரூபாய் 'போனஸ்' வழங்கப்படும் என்றும், அதை வைத்து அதிக நேரம் விளையாடலாம்; அதிக பணம் சம்பாதிக்கலாம்' என்றும் விளம்பரத் தில் வலை விரிக்கப்படுகிறது.
இதற்கு மயங்கி, 'ஆன்லைன் ரம்மி' என்ற சூதாட்டத்தை விளையாடத் துவங்குவோர், தங்களின் பணத்தை இழந்து அவதிக்கு ஆளாகின்றனர். இந்த சூதாட்டத்தில் பணப் பரிமாற்றம், இணையதளம் வாயிலாக வே நடக்கிறது என்பதால், எவ்வளவு பணத்தை இழந்தோம் என்ற நினைவு கூட இல்லாமல், இளைஞர்கள் தொடர்ந்து விளையாடி, அரும்பாடுபட்டு ஈட்டிய வருமானத்தை இழந்து தவிக்கின்றனர்.சூதாட்டம் என்பது, மது, புகையை விட மோசமான போதை; மீள முடியாத புதை மணல் என்பது உலகம் அறிந்த உண்மை. நம் நாட்டில் சூதாடினால், சூதாட்ட பொதுச் சட்டம், 1867-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சிக்கிம், கோவா, டையூ டாமன் யூனியன் பிரதேசம் போன்றவற்றில் மட்டுமே, சூதாட்டத்துக்கு தடை இல்லை.
அங்கு, அதிகளவில் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியரை கவர்வதற்காக, தனிச்சட்டம் இயற்றப்பட்டு, சூதாட்டம் நடத்தப்பட்டு வருகிறது; மற்ற மாநிலங்களில் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக, தமிழக விளையாட்டுச் சட்டத்தின் கீழ், பணம் வைத்து சீட்டாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஆன்லைன் ரம்மி விளையாட்டையும் தடை செய்ய வேண்டியது, தமிழக அரசின் அத்தியாவசிய கடமை. இந்த விஷயத்தில், பொதுமக்கள் உள்ளிட்ட யாருடைய கருத்தையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, விரைவில் ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பாக, அவசர சட்டம் இயற்ற வேண்டியது அவசியம்.
இல்லையெனில், தினமும் ஆயிரக்கணக்கானவர்களின் நிம்மதியையும், பணத்தையும் பறிக்கும் எமனாக, ஆன்லைன் சூதாட்டம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment