Thursday, August 4, 2022

இது ஒரு கனாக்காலம் . . நீதிதேவனுடன் ஒரு சந்திப்பு . . ! ! !

 **********************************

நீதிமன்ற கூண்டில் கலங்கிய கண்களுடன் இளம் வயது பெண் நிற்கிறாள் . நீதிபதியின் முன்னால் அரசு வழக்கறிஞர் நிறகிறார் . அந்த அறை முழுவதிலும் அமர்ந்திருக்கின்ற வழக்கறிஞர்களின் முகங்களில் அந்த வழக்கின் முடிவை தெரிந்து கொள்கின்ற ஆவல் தென்படுகிறது . நீதிபதியின் முகத்தில் தென்படுகின்ற கோபத்தின் மூலம் வழக்கின் தன்மையை ஓரளவிற்கு அங்கிருந்தோர் புரிந்து கொண்டனர் .
நீதிபதி
*****
நீங்கள் கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் அந்த பெண் ஒப்படைத்து விட்டார் . . அரசின் முடிவு என்ன ?
அரசு வழக்கறிஞர்
**************
அவரது பிறந்த ஜாதியையே . .இறுதி வரையிலும் அவரது ஜாதியாகக் கொள்ளப்படும் . ஒருவரது வாழ்க்கையின் இடைப்பகுதியில் அவரது ஜாதியை மாற்றம் செய்வதற்கான வழிமுறகள் எதுவும் சட்டங்களில் கிடையாது .
நீதிபதி
*****
அது தெரியும் . . வழிமுறைகள் ஏதாவது இருந்தால் உங்களிடம் ஆலோசனை கேட்டிருக்க மாட்டேன் . அந்தப் பெண்ணின் கோரிக்கையை நானே செய்து கொடுத்திருப்பேன் .
அரசு வழக்
*********
கலப்புத் திருமணம் என்பது இன்று பரவலாக நடைபெறுகின்ற விஷயம் . இதில் கணவனின் ஜாதியை மனைவிக்கு குறிப்பிடுவதோ . . மனவியின் ஜாதியை கணவனுக்கு குறிப்பிடுவதோ . . சரியான தீர்வாக அமையாது என்பது எனது தனிப்பட்ட கருத்து .
நீதிபதியின் முகத்தில் புன்முறுவல் தென்படுகிறது. அனவரின் முகத்தையும் பார்க்கின்ற நீதிபதி . .
நீதிபதி
*****
இந்த வழக்கு கொஞ்சம் சிக்கலான வழக்காகத் தோன்றுகிறது . அதனால்தான் மிகவும் யோசிக்க வேண்டிய நிலைக்கு நான் தள்ளப் பட்டுள்ேளன். இந்தப் பெண்ணின் கோரிக்கையில் நியாயம் உள்ளது . ஆனால் அந்த நியாயத்தை தருகின்ற வகையில் சட்டங்கள் இல்லை . அதற்காக அந்தப் பெண்ணின் கோரிக்கையை என்னால் நிராகரிக்க முடியாது . எனது அடுக்கடுக்கான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அரசு பதில் தந்தாக வேண்டும்.
என்று கூறிவிட்டு . . அரசு வழக்கறிஞரை நீதிபதி பார்க்கிறார் .
அரசு வழக்
*********
அனைத்து வகையிலும் எனது ஒத்துழைப்பை நீதிமன்றத்திற்குத்தர நான் தயாராக உள்ேளன் . .
நீதிபதி
*****
திருமண வயதை அடைந்தவர்களினால் . . அவர்களின் சுய விருப்பப்படி செய்து கொள்கின்ற திருமணத்தை அனைவரும் ஏற்றாக வேண்டும் - என்று அரசியல் சட்டம் கூறுவதை அரசினால் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்ள முடிகிறது . . ?
அ . வ
*****
அம்மாதிரியானவர்களுக்கு அனைத்து வகையிலும் அரசின் ஆதரவு கொடுக்கப் படுகிறது
நீதிபதி
*****
கலப்பு மணம் செய்பவர்களுக்கும் அரசு ஆதரவு தடையில்லாமல் கிடைக்கிறதா ?
அ . வ
*****
நிச்சயமாக
நீதிபதி
*****
இந்த பெண் கலப்புத்திருமணம் செய்ததை இவரது பெற்றோரினால் ஏற்றுக்கொள்ள முடியாதென்று பகிரங்கமாகக் கூறியது உண்மையா ?
அ. வ
*****
உண்மைதான் . . கலப்பு மணத்தம்பதிகளின் பெற்றோர்களில் பெரும்பாலோர் கலப்புத் திருமணத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதுதான் தற்போதுள்ள உண்மை நிலை . .
நீதிபதி
*****
கலப்புமணத்தை அரசியல் சட்டம் ஆதரிப்பதுடன் . . அதை எதிர்ப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை யென்றும தெளிவாகக்கூறுகிது . அப்படி எதிர்ப்பவர்களின்மீது இதுவரை ஏதாவது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதா ?
அ . வ
*****
வருகின்ற புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் படுகிறது .
நீதிபதி
*****
காவல்நிலையத்தில் வைத்து கலப்புத் தருமணத்தை ஏற்றுக் கொள்ள பகிரங்கமாக மறுத்து . . அரசியல் சட்டத்தை அவமதிக்கின்றவர் களின்மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதா ?
அ . வ
*****
இதை எப்படி சட்ட அவமதிப்பாகக் கருத முடியும்?
நீதிபதி
******
ஒருவருடைய சுய உரிமையை அரசியல் சட்டம் ஆதரிக்கின்ற நிலையில் . . சில தனிநபர்கள் அதை பகிரங்கமாக எதிர்ப்பதை எந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் . . ? எங்கேயோ நடக்கின்ற ஏதேதோ சம்பவங்களுக்காக " அரசியல் சட்ட அவமதிப்பு " வழக்குகள் பதிவாகின்ற போது . . காவல்துறையிடமே சட்டத்தை மதிக்க முடியாது என்று கூறுகின்றவர்களின் மீது வழக்கு தொடர முடியாதா . . ?
சற்று அதிர்ச்சியுடன் . .
அ . வ
*****
மனனிக்கவும் . . இப்படிப்பட்ட செயல்களுக்கு எதிராக இதுவரையிலும் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை . .
நீதிபதி
*****
கலப்புத் திருமணம் தொடர்பான அரசின் நிலையில் எனக்கு ஏறபட்ட சந்தேகம் என்னவென்று உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா ?
ஆம் என்று அரசு வழக்கறிஞர் தலையசைக்கிறார்.
நீதிபதி
*****
இந்தப் பெண்ணை இவருடைய பெற்றோரும் உறவினர்களும் ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு . . இவர் கீழ் ஜாதி ஆணை கலப்புத் திருமணம் செய்தது காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவருடைய கணவன்தான் இவருக்கிருக்கின்ற ஒரே துணை . எந்த அடிப்படையில் இந்தப் பெண் உயர்ஜாதியென்று கூறமுடியும் . . ?
அ . வ
*****
பிறந்த ஜாதியிலிருந்து ஒருவரை இன்னொரு ஜாதிக்கு மாற்றம் செய்வது சாதாரண விஷயமல்ல . . இதே மாதிரியாக பாதிக்கப் பட்ட கலப்புத் திருமணத் தம்பதிகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது - என்பதை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் . . !
நீதிபதி
*****
பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை தேவையில்லை . . பாதிக்கப் பட்ட தன்மை எப்படி ? என்பதுதான் தேவை . .
அரசு வழக்கறிஞர் மௌனமாக நிற்கிறார் .
நீதிபதி
*****
இந்தப் பெண் தீண்டாமையினால் பாதிப்புள்ளாகி உள்ளதால் . . கீழ் ஜாதியினரின் இடஒதுக்கீட்டில் இவருக்கு இடமளிக்க வேண்டுமென்று - நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது . . அரசின் நிலை என்ன ?
அ . வ
*****
இவருடைய ஜாதி இடஒதுக்கீட்டு பட்டியலில் இல்லை .
நீதிபதி
*****
பட்டியலில் இடம்பெறுகின்ற ஜாதியை எந்த வரைமுறையின்படி தயாரிக்கிறீர்கள் ?
அ . வ
*****
தீண்டாமையினால் பாதிக்கப் பட்டுள்ள ஜாதிகளினை . . அதற்கான கமிஷன் விசாரித்து தேர்வு செய்கிறது . அதை அரசு பரிசீலனை செய்து . . முடிவு செய்கிறது .
நீதிபதி
*****
தீண்டாமைக்கான அரசின் விளக்கம் என்ன ?
அ . வ
*****
உயர்ஜாதியினர் அனுபவிக்கின்றஉரிமைகளினை பெறவிடாமல் இன்னொரு ஜாதியினரை தாழ்வாக மதிப்பிட்டு . .அவர்களினை தனிமைப்படுத்தி . . புறக்கணிப்பது .
நீதிபதி
*****
இந்தப் பெண்ணின் சொந்த ஜாதியினரும் உறவினர்களும் . . இவர் பிறந்த ஜாதியினர் அனுபவிக்கின்ற உரிமைகளினை இவருக்குத்தர மறுப்பதாக - இந்தப் பெண்ணால் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது . அந்த உரிமைகளினை பெற்றுத்தந்து . . இந்தப் பெண்ணுடன் அவரது பிறந்த ஜாதியினரை இவரது திருமணத்திற்கு முன்னால் இருந்த பழைய நிலைமையில் . . இவருடன் நெருக்கமாக பழக வைக்க அரசினால் முடியமா ?
அ . வ
*****
விருப்பில்லாதவர்களினை எந்த அடிப்படையில் நிர்பந்திக்க முடியும் ?
நீதிபதி
*****
அரசினால் முடியாதென்றால் . . இந்தப் பெண் தீண்டாமையினால் பாதிக்கப் பட்டுள்ளது உண்மை என்பது நிரூபணம் ஆகிறது - என்பதை புரிந்து கொள்ளுங்கள் .
அ . வ
*****
கல்வி நிலையிலும் பொருளாதார நிலையிலும் தீண்டாமையினால் பாதிக்கப்பட்டவர்கள் உயர்நிலையை அடைந்தால்தான் தீண்டாமையை ஒழிக்க முடியும் .
நீதிபதி
*****
உங்கள் விளக்கம் இந்தப் பெண்ணின் குழந்தைகளுக்குததான் பொருந்தும் . . இந்தப் பெண்ணிற்கு பொருந்தாது . . கல்வியிலும் பொருளாதார வசதியிலும் ஒருவர் உயர் நிலையை அடையும்போது அவருடைய சந்ததியை தீண்டாமையினால் பாதிப்பில்லாமல் பாதுகாக்கலாம் என்பதே உண்மை . ஆனால் . . இந்தப் பெண்ணின் பெற்றோர் உயர்ஜாதியில் உள்ளனர் . தீண்டாமையினால் பாதிக்கப் பட்டுள்ள இந்தப் பெண்ணை எந்த வழிமுறையில் மேம்படுத்துவது ? என்பதுதான் நீதிமன்றத்தின் முன்னால் வைக்கப் பட்டிருக்கின்ற கேள்வி . . !
அரசு வழக்கறிஞர் மௌனமாக நிற்கிறார் .
நீதிபதி
*****
உயர்ந்த ஜாதியினரால் கீழ்ஜாதியினர் ஒதுக்கி வைக்கப்படுவதைப்போல . . அதே ஜாதி உணர்வுகளினை காரணமாகக்கொண்டு . . பெற்றோர்களினால் ஒதுக்கித் தள்ளப்படுகின்ற குழந்தைகளினை "தீண்டாமையினால் பாதிக்கப் பட்டவர்களாகக் கருதுவதில் பெரிய வித்தியாசம் இருப்பதைப்போலத் தோன்றவில்லை" .
அ . வ
*****
தாங்கள் அவ்வாறு முடிவு செய்வதில் எனக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லை . .
கோபத்துடன் . .
நீதிபதி
*****
இந்த அளவிற்கு சந்தேகங்கள் எழுப்பிய பிறகும் அதை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை ?
அ . வ
*****
மன்னிக்கவும் ! எனக்கும் இந்தப் பெண்ணின் வயதில் குழந்தைகள் இருக்கின்றனர் . இந்தப் பெண்ணைப்போல எனது மகள் முடிவெடுத்திருந்தால் . . அந்த முடிவிற்கு நான் நிச்சயமாக சம்மதித்திருப்பேன் . இந்த வழக்கில் வாதாடுகிறேன் என்பதற்காக . . என்னை மனிதாபமில்லாதவன் என்று கருத வேண்டாம் . . !
நீதிபதியின் முகத்தில் மகிழ்ச்சி தென்படுகிறது .
நீதிபதி
*****
உங்களுடைய தனிப்பட்ட உணர்வுகளின்மீது எனக்கு எவ்வித சந்தேகமும் கிடையாது .
அ . வ
*****
இது இடஒதுக்கீட்டுக் கொள்கை தொடர்பான வழக்கு . ஒவ்வொரு அமைப்புகளும் இந்த வழக்கின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ! அதனால்தான்அரசின் நிலையை மிகவும் தெளிவாகக் கூறுகிறேன் . .
நீதிபதி
*****
அரசின் நிலையைக் குறித்து நீதிமன்றத்திற்கு கவலையில்லை . அரசின் நிர்வாகம் சரியாக செயல்பட்டிருந்தால் . . இந்தப் பெண் இங்கே வந்நிருக்க மாட்டாள் .
அரசு வழக்கறிஞர் மௌனமாக நிற்கிறார் .
நீதிபதி
*****
இந்த வழக்கு இடஒதுக்கீட்டுக் கொள்கை சம்பந்தமானது என்று கூறினீர்கள் !
அ . வ -"ஆம் " என்று தலையசைக்கிறார் .
நீதிபதி
*****
இடதுக்கீட்டுக் கொள்கையால் இதுவரையிலும் எத்தனை நபர்கள் பயன்பெற்றார்கள் ? என்று கூற முடியுமா . .
அ . வ
*****
சிறிது கால அவகாசம் தந்தால் அரசிடம் கேட்டு தெரிவிக்கிறேன் .
நீதிபதி
*****
இன்னொரு சந்தேகம்கூட . . தீண்டாமையால் பாதிக்கப் பட்டவர்களில் எத்தனை நபர்கள் கல்வியிலும் பொருளாதார வசதியிலும் அரசாங்கத்தால் உயர்த்தப் பட்டிருக்கிறார்கள் ? என்பதற்கான பதிலும் தேவை .
அதிர்ச்சியுடன்
அ . வ
*****
இரண்டு கேள்விகளும் ஒன்றுதானே !
சற்று கோபத்துடன்
நீதிபதி
*****
தவறு . . இரண்டு கேள்விகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது . முதல் கேள்வி . . இடஒதுக்கீட்டுக் கொள்கையினால் எத்தனை நபர்கள் இது வரையிலும் பயன் பெற்றார்கள் ? இன்னொன்று . . தீண்டாமையால் பாதிக்கப் பட்டவர்களில் எத்தனை நபர்கள் கல்வியிலும் பொருளாதார வசதியிலும் அரசாங்கத்தால் உயர்த்தப் பட்டிருக்கிறார்கள் ?
அ . வ
*****
புரியவில்லை
ஏளனமாக சிரித்தபடி . . கூண்டில் நிற்கின்ற பெண்ணை காண்பித்து
நீதிபதி
*****
இப்போது இந்தப் பெண்ணிற்கு சரியான நீதி கிடைக்கின்ற கட்டத்தை நெருங்கி விட்டோம் !
நீதிமன்றத்திலுள்ள அனைவரும் நீதிபதியை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் .
நீதிபதி
*****
இடஒதுக்கீட்டுக் கொள்கையால் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை வேண்டுமானால் அரசாங்கத்திடம் இருக்கலாம் . . ஆனால் . . தீண்டாமையால் பாதிக்கப் பட்டவர்களில் எத்தனை நபர்கள் கல்வியிலும் பொருளாதார வசதியிலும் அரசாங்கத்தால் உயர்த்தப் பட்டார்கள் ? என்பதற்கான பதில் அரசாங்கத்திடம் நிச்சயமாகக் கிடையாது என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும் . . !
நீதிமன்றத்திலுள்ள அனைவரின் முகங்களிலும் ஒருவித எதிர்பார்ப்பு தென்படுகிறது . . !
நீதிபதி
*****
நான் . . இடஒதுக்கீட்டுக் கொள்கையால் பயன் பெறுகின்ற ஜாதியை சார்ந்தவன் . எனக்கு கைநிறைய மாத ஊதியம் கிடைக்கிறது . உதவி செய்ய அரசு ஊழியர்கள் , அரசு பங்களா , அரசு வாகன வசதி , இன்னும்பல அரசாங்க சலுகைகள் கிடைக்கின்றன . என்னுடன் பழகுவதற்கு அனைத்து ஜாதியினரும் தயாராக உள்ளனர் . எனது குழந்தைகளுக்குத் தேவையான கல்வியையும் பொருளாதார வசதியையும் என்னால் உருவாக்கித்தர முடியும் . இருந்தபோதிலும் . . எனது குழந்தைகளுக்கு இடஒதுக்கீட்டு சலுகைக் கிடைக்கிறது . நான் தீண்டாமையால் பாதிக்கப் பட்டுள்ளவன் என்று உங்களில் எவருக்காவது கூற முடியுமா ?
அ . வ
*****
தீண்டாமையை விட்டு வெளியே வந்துவிட்டதை நீங்கள் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு ஒரு தலை சிறந்த முன்னுதாரணத்தை ஏற்றுபடுத்தியுள்ளீர்கள் . . ஆனால் . . கல்வியிலும் பொருளாதார வசதியிலும் உயர்ந்த நிலையிலுள்ள கோடிக்கணக்கானவர்களும் இதேப்போல ஒப்புக் கொண்டால் . . கல்வியிலும் பொருளாதார வசதியிலும் மிகவும் கீழ் நிலையிலுள்ள தீண்டாமையினால் பாதிக்கப் பட்ட கோடிக்கணக் கானவர்கள் பயன்பெற மிகக்குறுகிய காலம் போதும் .
நீதிபதி
*****
அது யார் தவறு ? அரசு சலுகையை தொடர்ந்து பெற வேண்டுமென்று நினைப்பவர்கள் உண்மையை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் . அரசு சலுகைள் யாருக்குப் போய் சேர்ந்தால் உண்மையான பலன் கிடைக்கும் ? என்பதை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் ! . . *இல்லாதவனுக்கு இருப்பவன் விட்டுக் கொடுக்கின்ற மனநிலை இயல்பாக வரவேண்டும். அந்த மனநிலை இல்லையென்றால் . . இருப்பவனை அப்புறப்படுத்துகின்ற சக்தி அரசுக்கு இருக்க வேண்டும்*
அ . வ
*****
ஜாதி அமைப்புகளின் போராட்டங்களினை அரசு எதிர் கொள்ள வேண்டிவரும் - என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் . .
நீதிபதி
*****
இங்கே அந்த பேச்சுக்கு இடமேயில்லை . ஜாதிசமய சார்பற்ற அரசியல் சட்டத்தில் . . ஜாதி உணர்வுகளுக்கு இடமளிக்க முடியாது . . !
அனைத்து ஜாதியினருக்கும் உயர்ந்த ஜாதியினரின் தோளில் கை போட மட்டுமே ஆசை உள்ளது . ஆனால் . . தன்னைவிட தாழ்ந்த ஜாதியினரின் தோளில் கை போட எவருக்கும் விருப்பில்லை - என்பதுதான் தற்போதைய உண்மை நிலை . .
கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் உயர் நிலையை அடைந்தவர்களின் குடும்பத்திலுள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் . . அந்த ஜாதிகளினை சார்ந்த ஏழைகள் எடுபிடிகளாக மட்டுமே பயன்படுத்தப் படுகின்றனர் . ஆனால் . . ஏழைகளின் குடும்ப நிகழ்ச்சிகளில் அந்த ஜாதியை சார்ந்த முன்னேறியவர்களினால் எவ்விதமான உடலுழைப்பும் கிடைப்பதில்லை . இப்படிப்பட்ட ஜாதி அமைப்புகளினை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள தேவையில்லை . .
தீண்டாமையும் கல்வியறிவின்மையும் ஏழ்மையும் ஒழிய வேண்டும் - என்பதுதான் அரசின் குறிக்கோளாக இருக்க வேண்டும் . .
அரசு வழக்கறிஞர் மௌனமாக நிற்கிறார் .
கூண்டில் நிற்கின்ற பெண்ணை காண்பித்து
நீதிபதி
*****
இந்தப் பெண்ணின் நிலையை கருத்தில் கொண்டு . . அரசிற்கு சில உத்திரவுகளினை இந்த நீதிமன்றம் பிறப்பிக்கிறது .
நீதிமன்றத்திலுள்ளவர்களிடம் தீர்ப்பைக் கேட்கின்ற ஆவல் தோன்றுகிறது .
நீதிபதி
*****
" ஜாதிமத வேறுபாடு பார்க்காமல் நடைபெறும் கலப்புத் திருமணங்களினை அரசியல் சட்டம் முழுமையாக ஏற்றுக் கொள்கின்ற நிலையில் . . காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து அதை ஏற்றுக் கொள்ள முடியாது - என்று கூறுபவர்களின் மீது - அரசியல் சட்ட அவமதிப்பு வழக்கை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் . அடுத்து :
தீண்டாமையால் பாதிக்கப் பட்டுள்ள ஜாதிகளிலுள்ள ஏழைகளும் வசதியானவர்களும் சரிசமமானவர்களா ? அல்லது . . இரு தரப்பினருக்கும் வித்தியாசம் ஏதாவது உள்ளதா ? என்னும் கேள்விகளுக்கும் . .
தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட எத்தனை நபர்களுக்கு கல்வி மற்றும் பொருளாதார வசதி கிடைத்துள்ளது ?
உயர்ந்த ஜாதியை சார்ந்த பெற்றோரின் குழந்தைகள் தீண்டாமையினால் பாதிக்கப்பட்டால் . . அவர்களினை எந்த ஜாதியில் சேர்க்க வேண்டும் ?
- என்னும் கேள்விகளுக்கும் . . இரண்டு வாரங்களில் அரசு பதில்தர வேண்டும் .
இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வருகின்ற வரையிலும் மனுதாரரின் கணவரின் ஜாதியை . . மனுதாரரின் சொந்த ஜாதியாகக் கருதி . . அதன் அடிப்படையில் மனுதாரருக்கு அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டுமென்று - இந்த நீதிமன்றம் அரசுக்கு ஆணை பிறப்பிக்கிறது "
இருக்கையைவிட்டு எழும்புகின்ற நீதிபதியை நோக்கி . . கண்ணீர் மல்க அந்த பெண் இருகரம் கூப்பி வணங்குகிறாள் . .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...