Wednesday, August 3, 2022

அழியாத கோலங்கள்.

 எட்டு மணிக்கெல்லாம் செய்தி வந்து விட்டது. நான் தவிக்க ஆரம்பித்து விட்டேன். என் மனம் ஒரு நிலையில் இல்லை. எப்படியாவது சென்னைக்கு பறந்து விட வேண்டும். முடியுமா? கல்யாணியிடம் எப்படி சொல்வது? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறாள். என்னவென்று சொல்வது? பரபரவென்று இருந்தது. “அப்பா சீரியஸ்?” ஹூஹும் முடியாது. உடனே ஃபோன் பண்ணிக் கேட்டு விடுவாள். “சம்பூர்ணம் சீரியஸ்னு எப்படி சொல்றது? யாரந்த சம்பூர்ணம்னு கேட்டுட்டா?”

எதையாவது ஒரு காரணத்தைச் சொல்லி எப்படியாவது போயிடணும். ஒரு தடவை சம்புவைப் பாத்தே ஆகணும். “சம்பு, எப்பிடியாவது வந்துடறேன். பிடிவாதமா வந்துடறேன்.” பனிரெண்டு மணி ஃப்ளைட்டைப் பிடிச்சா ரெண்டு மணிக்கெல்லாம் அவளைப் பார்த்துடலாம். ராத்திரி எட்டு மணி ஃஃப்ளைட்டைப் பிடிச்சா கூட ராத்திரியே டில்லி திரும்பிடலாம். சம்பூர்ணத்தோட ஒரு ரெண்டு மணி நேரமாவது இருக்கலாம். ஆனா எந்த பொய்யைச் சொல்லிட்டுக் கிளம்பறது?” “என் அழகான மனைவியே கொஞ்சம் புரிஞ்சிண்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கோயேன்.” மறுபடியும் செய்தியைப் பார்த்தான். மாலதிதான் மெசேஜ் அனுப்பி இருக்கா. டக்குனு ஒரு ஐடியா வந்தது. உடனே அவளைக் கூப்பிட்டேன்.
“மாலதி கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்.”
“இன்னும் நீ கிளம்பலியா? ஃப்ளைட்டே இருப்பேன்னு நினைச்சேன். சொல்லு”
“மாலு, ராமதாஸ் ரொம்ப சீரியஸ்னு ஒரு மெசேஜ் உடனே அனுப்பேன்”
“ஆஹா ஜகதலப்ரதாபனே பொண்டாட்டி கிட்ட அவ்ளோ பயமா? நிஜத்தைச் சொல்லிட்டு வர முடியாதா?”
“மாலு படுத்தாத. சீக்கிரமா மெஸேஜ் கொடு. க்விக்”
“செய்யறேன். ஆனா ஒரு கண்டிஷன்”
“சொல்லித் தொலை. க்விக்”
“திரும்பி டில்லிப் போறதுக்குள்ள ஒரு அரைமணி நேரம்…..என்னோட இருக்கணும்”
“சீ! பிசாசே. முதல்ல மெசேஜை கொடு. உன் நம்பர்ல இருந்து குடுக்காத. கல்யாணிக்குத் தெரிஞ்சிடும். வேற நம்பர்ல இருந்து கொடு. க்விக் ப்ளீஸ்”
“என் கண்டிஷனுக்குச் சரின்னு சொன்னாதான் நான் மெசேஜ் கொடுப்பேன்”
“பைத்தியக்காரி. நிலைமை புரியாம என்னைப் படுத்தாதே. சம்புவை ஒரே ஒரு தடவையாவது பாத்தே ஆகணும். நான் வர வரைக்கும் அவளுக்கு எதுவும் ஆயிடக் கூடாது. சீக்கிரமா செய். பேசாத”
மாலதி உடனே மெஸேஜ் கொடுத்தாள். பழைய மேஸேஜை அழிச்சேன். குளிச்சிட்டு வாசனையா வந்த கல்யாணி கிட்ட என் உலக மகா நடிப்பை ஆரம்பிச்சேன்.
“கல்யா….உனக்கே தெரியும். ராமதாஸ் என்னோட பெஸ்ட் ஃப்ரன்ட். பாவம் ரொம்ப சீரியஸா இருக்கானாம். ஒரே நடை பாத்துட்டு ராத்திரியே வந்துடறேன்”
அவ நேரா என் கண்களைப் பார்த்தாள். கடங்காரி கண்டுபிடிச்சிடுவளோ? சலனமே இல்லாம என்னைப் பார்த்தாள். நான் என்ன செய்யணும்? முகத்தைத் திருப்பிக்கணுமா ? கர்சீஃப்ல கண்களைத் துடைச்சிண்டேன்.
ஆயிரம் பொய் சொல்லி பத்து நிமிஷம் நடிச்சி எப்பிடியோ கிளம்பிட்டேன். ஹரியானா ராட்சசன், என் டிரைவர், என்னை ஏர்போர்ட்ல டிராப் செஞ்சான். வழியெல்லாம் சம்பு நினைப்புதான். அழியாத கோலங்களாய் எத்தனை எத்தனை விளையாட்டுகள்? எத்தனை எத்தனை திருட்டு முத்தங்கள். உடம்பெல்லாம் இனித்தது. “வந்துண்டே இருக்கேன் சம்பு. ஒரே ஒரு தடவையாவது உன்னைப் பாத்துடணும். இரு. கெட்டியா உயிரைப் பிடிச்சுக்கோ. இரு. இதோ பறந்து வந்துண்டே இருக்கேன்.” கண்களை மூடினால் சம்புவே வந்தாள். எலிமென்டரி ஸ்கூல் கிரவுன்ட்டில், இரவு எட்டு மணிக்கு மேல், அவளுக்கு சைக்கிள் பழகிக் கொடுத்தது பாரதிராஜா படம் மாதிரி ஸ்லோ மோஷனில் வந்து வந்து போனது. காளிங்கராயன் வாய்க்காலில் நான் விவசாயி மாதிரி முண்டாசு கட்டிக் கொண்டு, கரையில் இருந்த அவள் மேல் தண்ணீரை வீசி அடிக்க, அவள் வெட்கத்துடன் சிரித்தது பளீர் என அகக் கண்களில் மின்னியது. “சம்பு, சம்பு” என் மனம் விடாமல் அரற்றிக் கொண்டெ இருந்தது.
எப்போ ஃப்ளைட் சென்னை வந்தது, எப்பிடி இறங்கினேன்? எப்பிடி டாக்ஸி பிடிச்சேன். ஒண்ணுமே நினைவில்லை. மதியம் மூணு மணிக்கு ஹாஸ்பிடலில் இருந்தேன். ஐ.சி.யு என்றார்கள். கண்ணாடி வழியாகப் பார்த்தேன். பனிப்பிரதேசத்திற்குள் ஏராளமான வயர்களின் நடுவே குன்றிப் போய் படுத்திருந்தாள் சம்பூர்ணம். மூச்சு காற்று மட்டும் இழைந்து இழைந்துப் போய் கொண்டிருந்தது. உடனே அவள் அருகே செல்ல வேண்டும். அவள் கைகளை மென்மையாக அழுத்த வேண்டும். “சம்பு, என் கண்ணம்மா. நான் ஓடி வந்துட்டேன். என்னைப் பாரேன் ஃப்ளீஸ். நீ இன்னும் ரொம்ப நாள் இருக்கணும். அவசரப் படாதே ஃப்ளீஸ்.” நிஜமாகவே கர்சீஃப் எனக்குத் தேவையாக ஆனது.
யார் வந்திருக்கிறார்கள்? அவள் அண்ணனா? அந்த ஆஜானுபாகனா? யார் இருந்தா என்ன? எனக்குக் கவலை இல்லை. கூடப் படிச்சவங்கன்னு சொல்லிட்டு நானும் மாலதியும் போய் பாத்துடலாம். பார்த்தோம். சம்புவால் பேச முடியலை. உதடுகளை அசைச்சா. இப்பவும் சிரிக்கும் கண்கள்தான் அவளுக்கு.
தைரியமாக மெல்ல அவள் விரல்களைப் பற்றினேன். சில்லிட்டுப் போயிருந்தாள். வயசு காலத்தில் பல விற்பனைப் பெண்களைப் பெருமூச்சு விடச் செய்திருந்த என் சம்புவா இவள்? வாடியிருந்தாள். இருக்கட்டுமே! என் இளமையை வளமாக்கியவள். விரட்டப் படும் வரையில் அங்கேயே இருந்தேன். கண்களால் மட்டுமே நாங்கள் பேசிக் கொண்டோம். ஒரே ஒரு தடவை மட்டும் அவள் உதடுகளுக்கருகில் குனிந்து கேட்டேன். “தாங்க்ஸ்” என்று முணுமுணுத்தாள் போல இருந்தது. அது மட்டுமே முடிந்தது. கண்களால் நிறைய பரிமாறிக் கொண்டோம். பள்ளிப்பாளயம் வரை நடந்தே போனதை குறும்பாக நினைவு படுத்தினாள் போல இருந்தது. நேரத்தைப் பிடிச்சி நிறுத்த என்னால் இயலவில்லை.
மாலதி என்னை அநேகமாக இழுத்துக் கொண்டு வர வேண்டியிருந்து. என் சம்புவைப் பிரிந்து வெளியே வந்தேன். உயிரற்ற உடலாக வந்தேன். என் ஒவ்வொரு செல்லும் அழுதன. என்ன செய்வது? என்ன செய்ய முடியும்? திரும்ப டில்லி ஃப்ளைட் ஏறினதும் கல்யாணியைப் பற்றிய பயம் வந்து உட்கார்ந்தது. எதையாவது சொல்லி கல்யாணியிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது. நிறைய பொய்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். என் முகத்தைப் பார்த்தோ, என் வார்த்தைகளைக் கேட்டோ அவள் எதையும் கண்டு பிடித்து விடக் கூடாது. கடவுளே என்னைக் காப்பாற்று. மாட்டி விட்டு விடாதே….
இருண்ட முகத்தோடும், மனம் நிறைய கவலையோடும் நான் வீட்டுக் கதவைத் தட்டியபோது மணி இரவு பனிரெண்டு. கல்யாணி கதவைத் திறந்தாள். என்னை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து விட்டு கேட்டாள்
“எப்பிடி இருக்கா உங்க சம்பூர்ணம்?’
May be an illustration of one or more people and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...