Wednesday, February 12, 2020

மெல்ல நெருங்கும் ஆபத்து.....

டெல்லியில் பாஜகவின் தோல்வி மகிழத்தக்கது எனினும் , தனி நபர் ஒருவர் தான் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு ஏதோ ஒன்றைச் செய்து கொடுத்து, வெற்றிக்கு நானே காரணம் என்ற‌ அளவில் வளர்ந்து வருகிறார். பொதுவாக அரசியல் வாதிகள் தாங்கள் பொதுவெளியில் வைக்கும் கருத்துக்களுக்காவது பெறுப்பேற்க வேண்டும்.
ஆனால் எந்தவிதமான சட்ட நடைமுறைகளும், இல்லாத இந்தியாவில், ஐபேக்(IPAC) போன்ற அரசியல் நிறுவனத்தின் வளர்ச்சி என்னை கவலை கொள்ளச் செய்கிறது. இராணுவ அமைச்சகத்தின் அறையில் இருந்தே ரபேல் ஆவணங்கள் காணாமல் போனது. ஆதார் தகவல்கள் தனியாருக்கு கிடைக்கிறது. இன்று NRC தகவல்கள் காணோம் என்று எளிதாக காக்கா வடை எடுத்த கதைபோல் பேசுகிறார்கள்.
இந்த நிலையில், யாரிடமிருந்து என்ன மாதிரியான தகவல்களைப் திரட்டுகிறார்? அவற்றை எப்படி பயன்படுத்துகிறார்? தேர்தல் சந்தையில் விற்பனைக்கு தயாராக இருக்கும் இவரின் சேவைக்கு, வெளிநாடு ஒன்று அதிக‌ விலை கொடுத்தால் என்ன செய்வார் இந்த பிரசாந்த் கிஷோர் போன்ற கேள்விகள் எழாமல் இல்லை.
2016 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது. அது இன்று அமெரிக்காவின் பல அமைப்புகளை சிதைத்துக் கொண்டுள்ளது என்பது நாம் அறியவரும் செய்தி. நம்மூர் பிரசாந்த் கிஷோர் போலவே, அமெரிக்காவில் ரோஜர் ஸ்டோன் ஒரு பெரிய அரசியல் ஆலோசகர் இவர். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்கு ஆலோசகராக இருந்தார்.
இவர் எப்படிப்பட்டவர் என்பதை, இவருக்கு கொடுக்கப்பட்ட அடைமொழிகள் மூலம் அறியலாம். "Self-Proclaimed Dirty Trickster","Renowned Infighter", "Seasoned Practitioner of Hard-Edged Politics", "Mendacious Windbag","Veteran Republican Strategist", Political Fixer. இதெல்லாம் விக்கிப் பீடியாவில் அவருக்கு தரப்பட்ட அடைமொழிகள்.
இவர் வல்லவர். பல சாகசங்களை நிகழ்த்தி 2016 ல் டொனால்டு ட்ரம்பை வெற்றிபெற வைத்தார். ரஷ்ய நாட்டு உதவியுடன் அமெரிக்க அதிபர் தேர்தலில், இவர் விளையாடி , அதன் போக்கை ரிபப்ளிகன் வேட்பாளரான டொனால்டு ட்ரம்பிற்கு சாதகமாக மாற்றினார்.
2016 அதிபர் தேர்தல் முறைகேடுகளை நேரடியாகச் செய்யாமல், டெமாக்ரடிக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனின் மீது சேறு வாரியிறைத்தல். அதாவது இணையத்தில் பொய்ச் செய்திகளை பரப்புவது. அதாவது ஹிலாரியின் மீது சுமத்தப் பட்ட ஈமெயில் மோசடிப் புகார் போன்றவை.
இந்த மோசடிகளால், இன்று ரோஜர் ஸ்டோனுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்ற ஒரு விவாதம் அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து கொண்டுள்ளது. அதுவும் அதிபர் ட்ரம்ப் தலையீட்டால் கேலிக்கூத்தாகிக்கொண்டுள்ளது.
இதே மாதிரி நிலை இங்கும் வரலாம். ஆனால் நமது நீதி பரிபாலன முறைதான் எல்லோருக்கும் தெரியுமே. இருப்பினும் பிராசந்த் கிஷோர் போன்றவர்கள் இந்திய ஜனநாயக தேர்தல் முறைக்கு ஆபத்தானவர்கள். இவர்கள் மெல்ல இறங்கும் விஷம் தோய்ந்த கத்தி போன்றவர்கள்.
வாக்கு என்பது ஒருவரின் உரிமை, அது ஒரு தனிமனிதன் சுயமாக சிந்தித்து எடுக்கவேண்டிய முடிவு, அதனை புறக்காரணிகள் கொண்டு வாக்காளர் மனநிலையை மாற்றச் செய்யும் எந்த தந்திரமும் மோசடிக்கு சமமானது என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்து கொண்டார்கள்..நாம் உணர்வது எப்போது..? 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...