அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, தன் ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததால், ராஜ்யசபாவில் அக்கட்சியின் பலம் குறைந்தது. அதனால், கட்சி குழு அந்தஸ்தை, அ.தி.மு.க., இழக்கிறது.
ராஜ்யசபாவில், அ.தி.மு.க., - எம்.பி.,க்களாக தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன், விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், சந்திரசேகரன், வைத்திலிங்கம், முனுசாமி, புதுச்சேரி கோகுலகிருஷ்ணன் என, எட்டு பேர் இருந்தனர். சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்ற வைத்திலிங்கமும், முனுசாமியும், தங்களின் எம்.பி., பதவியை ராஜினாமா செய்துள்ளதால், எம்.பி.,க்கள் எண்ணிக்கை, ஆறாக குறைந்துள்ளது.
பலம் குறையும்
வரும் அக்டோபரில், கோகுலகிருஷ்ணனின் பதவி காலம் முடிவடைவதால், ஐந்தாக குறையும். பின், 2022ம் ஆண்டு ஜூனில், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய மூவரின் பதவி காலியாகும் பட்சத்தில், இரு எம்.பி.,க்களாக, அ.தி.மு.க.,வின் பலம் குறைந்து விடும். அதே ஆண்டில் ராஜ்யசபாவில், தி.மு.க., - எம்.பி.,க்கள், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகிய இருவரின் பதவி காலியாகிறது. இந்த ஐந்து இடங்களுக்கும் நடக்கிற தேர்தலில், போட்டியின்றி, எம்.எல்.ஏ.,க்கள் பலத்தின் அடிப்படையில், தி.மு.க.,வுக்கு மூன்று; அ.தி.மு.க.,வுக்கு இரண்டு எம்.பி.,க்கள் கிடைப்பர்.எனவே, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில், ராஜ்யசபாவில் அ.தி.மு.க.,விற்கு, நான்கு எம்.பி.,க்கள் தான் இருப்பர்.
ராஜ்யசபாவில், ஒரு கட்சிக்கு குறைந்தபட்சம் ஐந்து எம்.பி.,க்கள் இருந்தால் தான், கட்சிகளின் குழுவில் இடம் பெற முடியும். அப்போது தான், அக்கட்சி எம்.பி.,க்களுக்கு, ராஜ்யசபாவில் நடைபெறும் விவாதங்களில் பேசுவதற்கு, குறிப்பிட்ட நேரத்தை ராஜ்யசபா தலைவர் ஒதுக்குவார்.
குறைந்த நேரம்
ஒரு கட்சியில், ஐந்து எம்.பி.,க்களுக்கு குறைவாக இருந்தால், அக்கட்சி, இதர கட்சிகள் பட்டிலில் தான் சேர்க்கப்படும். அப்படி இதர கட்சிகள் பட்டியலில் இடம் பெறும் எம்.பி.,க்கள் பேசுவதற்கு, குறைந்த நேரமே ஒதுக்கப்படும். அ.தி.மு.க.,வுக்கு நான்கு எம்.பி.,க்கள் என்ற நிலை ஏற்படும் போது, கட்சி குழு என்ற அந்தஸ்தை இழக்க நேரிடும். இது போன்ற பின்னடைவு ஏற்படுவதற்கு, மூத்த தலைவர்களின் பேராசையும், சுயநலமும் தான் காரணம் என்ற சலசலப்பு, அக்கட்சியில் உருவாகி உள்ளது.இது குறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:ராஜ்யசபாவில், வைத்திலிங்கத்திற்கு ஒரு ஆண்டு பதவிக்காலம், முனுசாமிக்கு ஐந்து ஆண்டு பதவிக்காலம் உள்ளது. இதில், ஓராண்டு பதவிக்காலம் உள்ள வைத்திலிங்கத்தின் ராஜினாமா கூட நியாயமானதாக கருதலாம். ஐந்தாண்டு பதவிக்காலம் உள்ள முனுசாமி ராஜினாமாவை தான் ஜீரணிக்க முடியவில்லை.
கிடைக்காது
ஏற்கனவே, அ.தி.மு.க., - எம்.பி., முகமது ஜான், மார்ச்சில் இறந்து விட்டார். அவருக்கு நான்கு ஆண்டு பதவிக்காலம் இருக்கிறது. அவர் இறந்த ஆறு மாதங்களில், தேர்தல் நடத்த வேண்டும். மேலும், வைத்திலிங்கம், முனுசாமியின் எம்.பி., பதவியும் காலியாக இருப்பதால், இந்த மூன்று இடங்களுக்கும், செப்டம்பர் மாதத்தில் தனித்தனியாக தேர்தல் நடக்க உள்ளது. இந்த மூன்று இடங்களுக்கும், தனித்தனி தேர்தல் என்பதால், சட்டசபையில், 159 எம்.எல்.ஏ.,க்களின் பலம் உள்ள தி.மு.க.,வுக்கு தான், மூன்று இடங்களிலும் வெற்றி கிடைக்கும். அ.தி.மு.க., கூட்டணிக்கு, 75 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், ஒரு எம்.பி., கூட கிடைக்காது என்பது தான் வேதனை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment