(இது ஒரு நீண்ட பதிவாக இருந்தாலும் தயவு செய்து பொறுமையாக படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்).
இப்போது பல இடங்களிலும் பேசப்படும் ஒரு விவாதம் "நீட் பரீட்சை தமிழ் நாட்டிற்கு வேண்டுமா வேண்டாமா" என்பது தான்.
எனக்கும் இந்த சந்தேகம் நீட் வந்த நாளில் இருந்தே இருக்கிறது. தமிழ் நாட்டில் இதன் எதிர்ப்பு குரல் பலமாக கேட்கிறது. அதே சமயம் ஆதரவாகவும் பலர் பேசுகின்றனர். இது பற்றி நான் பல கட்டுரைகள் படித்தும் நண்பர்களிடம் பேசியும் ஒரு தெளிவான நிலை கிடைக்கவில்லை.
தமிழ் நாடு முழுவதும் எதிர்ப்பு இருப்பதால் புதிதாக ஆட்சிக்கு வருபவர்களால் சட்டம் மூலமாகவோ, வழக்கு மூலமாகவோ நீட் தேர்வு நீக்கப்படும் என்று நினைத்தேன். ஆனால் புது முதல்வரும் இதன் சாதக பாதகங்களை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பதாக தெரிகிறது.
மேலும் தற்போதைய முதல்வர் நீட் தேர்வை கடுமையாக எதிர்ப்பவர். ஏன் இவருடன் சேர்ந்து மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும் எதிர் கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் போராடவில்லை? அவர்கள் நாம் நான்கு வருடங்கள் போராடிக்கொண்டிருக்கும் போதே நீட் தேர்வை ஏற்றுக்கொண்டு மாணவர்கள் நீட்டில் வெற்றி பெற எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார்கள். எனது உறவினர்கள் பலர் கேரளாவில் வசிக்கின்றனர். அவர்களிடம் விசாரித்தபோது பொதுவாக கேரள மக்கள் நீட்டுக்கு ஆதரவாகத்தான் உள்ளனர் . மேலும் தற்பொழுது தனியார் மருத்துவக் கல்லூரி இடங்கள் மாணவர்களுக்கு நீட் மூலம் கிடைப்பதால் பெரிய வரவேற்பு இருக்கிறது. மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்த முடியாமல் அரசிடம் ஏற்று நடத்துமாறு கேட்டுக் கொண்டு இருப்பதாக சொன்னார்கள். ஆதலால் வேறு வழியின்றி அங்குள்ள கட்சிகள்ஏற்றுக் கொண்டுள்ளதாக சொல்கிறார்கள்.
இந்த நீட் சம்பந்தப்பட்ட பல தரப்பட்ட மக்களின் பாதிப்பு என்ன பலன் என்ன என்று நினைத்து பார்த்தேன். கீழே தரப்பட்டுள்ளவை நான் திரட்டிய தகவல்கள்.
1. மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் நாட்டு மாணவர்கள் என்று நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் சொல்கிறார்கள் . ஆனால் மாணவர்களில் பெரும்பாலானோர் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள். அவர்களோ அவர்கள் பெற்றோர்களோ நீட் பற்றி பெரிதாக கவலை படுவதில்லை. ஏன் என்றால் , நீட் தேர்வு வருவதற்கு முன் பத்து வருடங்களில் இந்த பள்ளிகளில் இருந்து மொத்தமே சுமார் முன்னூறு அதாவது வருடத்திற்கு சராசரியாக முப்பது மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மொத்தம் ஒரு ஐம்பது பேருக்கு பத்து வருடங்களில் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் இடம் கிடைத்துள்ளது. பெரும்பாலும் தனியார் கல்லூரியில் அதிக கட்டணம் காரணமாக இந்த மாணவர்கள் சேர்வதில்லை. நீட் தேர்வு வந்த பிறகும் இதே நிலைதான். ஆனால் கடந்த வருடம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் வந்த பிறகு ஒரே வருடத்தில் முன்னூறு மாணவர்களுக்கு மேல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். நீட் தேர்வு நீக்கப்படும் போது இந்த ஒதுக்கீடும் நீக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அதனால் பாதிக்கப்படுபவர்கள் இந்த ஏழை மாணவர்கள் தான்.
2. மீதி உள்ள மாணவர்களில் நடுத்தர மற்றும் மேல் தட்டு மாணவர்களும் அவர்கள் பெற்றோர்களும் நீட் பற்றி அதிகம் கவலை படுவதில்லை. ஏனெனில் நீட் இல்லை என்றால் இவர்கள் நாமக்கல் ,ராசிபுரம் போன்ற இடங்களில் உள்ள பள்ளிகளில் சேர்ந்து ஒரு வருட பாடத்தை இரண்டு வருடங்கள் திரும்ப திரும்ப மனப்பாடம் செய்து ஐந்து லட்சம், ஆறு லட்சம் செலவு செய்து 200 க்கு 200 மார்க் வாங்கவேண்டும். அல்லது நீட் இருந்தால் அதே இரண்டு வருடங்கள் அதே பணம் செலவு செய்து பயிற்சி எடுத்து இடம் வாங்க முயற்சி செய்வார்கள்.
3. மீதி உள்ள மிகப் பெரிய பணக்கார மாணவர்கள் தான் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களால் plus two அல்லது நீட் மார்க் மூலம் இடம் வாங்க முடியாது. ஒரே வழி பணம் கொடுத்து வாங்குவது தான். நீட் வந்ததால் அதிகம் பாதிக்க பட்ட மாணவர்கள் இவர்கள் தான்.
4. அடுத்து நீட் தேர்வால் அதிகம் பாதிக்க பட்டவர்கள் தனியார் மருத்துவ கல்லூரி நடத்துபவர்கள். இவர்கள் கல்லூரி இடங்கள் இப்போது நீட் மூலம் நிரப்பப் படுவதால் தமிழ் நாட்டில் மட்டும் இவர்களுக்கு வருடத்திற்கு
300 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் போய் விட்டது. ஆதலால் இவர்கள் முழு வீச்சில் எதிர்க்கின்றனர்.
5. அடுத்து நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல் , ராசிபுரம் போன்ற இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளை நடத்துபவர்கள். இவர்கள் இரண்டு வருடத்தில் ஒரு வருட பாடத்தை திரும்பத் திரும்ப மனப்பாடம் செய்ய வைத்து 200க்கு 200 மார்க் வாங்க வைப்பதில் திறமைசாலிகள். அதற்கு 5/6 லட்சத்தை கறந்து விடுவார்கள். நீட் தேர்வு வந்த பிறகு இந்தப் பள்ளிக்கூடங்களுக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டது. இவர்களும் முடிந்த அளவு நீட் டை எடுப்பதற்கு போராடுகிறார்கள்.
6. அடுத்ததாக நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளை நடத்தும் மருத்துவர்கள். இவர்களது மருத்துவமனையை இவர்களுக்குப் பிறகு நடத்துவதற்கு இவர்கள் வாரிசுகள் மருத்துவராவது கட்டாயம் . ஆனால் துரதிஷ்டவசமாக ஒரு சிலரைத்தவிர இந்த மருத்துவர்களின் வாரிசுகள் மதிப்பெண் மூலம் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்குவது குதிரைக் கொம்பு போன்றதாகும். இவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி பணம் கொடுத்து யு ஜி/ பி ஜி தேவைப்பட்டால் டிகிரியும் வாங்குவதுதான். அவர்கள் படித்து முடித்ததும் மருத்துவ செலவு செய்த பணத்தை எடுப்பதற்கு ஒரே வழி அவர்களிடம் வரும் நோயாளிகளிடம் இருந்தும் மருந்து கம்பெனிகள் பரிசோதனைக் கூடங்களில் இருந்து வரும் கமிஷன் மூலமாகவும் தான். பிறகு நாம் தேவையில்லாத மருந்துகளை எழுதி கொடுக்கிறார்கள் . டெஸ்ட் எடுக்க சொல்லுகிறார்கள் என்று புலம்புவதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கிறதா?
சரி! நீட் தேர்வு இருப்பதால் தமிழ்நாட்டில் யார் யாருக்கு என்ன விதமான பாதிப்புகள் வருகின்றன என்று பார்த்தோம் . இப்பொழுது ஒருவேளை நாம் கடுமையாகப் போராடி தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால் ஏதாவது பாதிப்புகள் வருமா என்று நினைத்துப் பார்க்கிறேன்.
1. நீட் தேர்வு இல்லாவிட்டாலும் 97 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றால்தான் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கும். ஆனால் ஜிப்மர் , AIIMS, A.F.M.C போன்ற இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் மட்டும்தான் மாணவர்கள் சேர்க்கப்படுவதால் தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தக் கல்லூரிகளில் சேர முடியாது.
2. இந்தியாவில் உள்ள எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் 15 சதவிகித இடத்தை மத்திய அரசு PMPD என்ற தேர்வு மூலம் மாணவர்களை சேர்க்கிறது . இந்தத் தேர்வு நீட் மார்க்கின் அடிப்படையில் செய்யப்படுவதால் தமிழ்நாட்டு மாணவர்கள் இந்த இட ஒதுக்கீடு மூலம் படிக்க வாய்ப்பு கிடைக்காது. தற்சமயம் இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள பல மாணவர்கள் மற்ற மாநில கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
3. தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் PG இடங்கள் மிகக் குறைவாகத்தான் உள்ளன. அதிலும் கிட்டத்தட்ட பாதி இடங்கள் அரசு மருத்துவர்கள் மற்றும் சில ஒதுக்கீடுகளுக்கு போய்விடும். ஆதலால் இந்த இடங்கள் கிடைப்பது மிகவும் கடினம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தால் தான் சேர முடியும். எனது உறவினர் மகன் நன்றாக படிக்க கூடியவன் . நீட் தேர்வுக்கு முன்னால் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்தான். ஆனால் அவன் ஆசைப்பட்ட எம்எஸ் (ஆர்தோ) இடம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முழுவதும் தேடியும் குறைந்தது ஒரு கோடி கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. அவர்களால் அந்த அளவு செலவு செய்ய முடியாது என்பதால் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் . ஆனால் நீட் தேர்வு வந்ததும் ஒரு வருடம் கடுமையாக படித்து இப்பொழுது சென்னையில் உள்ள ஒரு மிகச்சிறந்த தனியார் மருத்துவக் கல்லூரியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறான்.
4. தற்பொழுது மதுரையில் AIIMS மருத்துவக் கல்லூரி வர இருக்கிறது . இந்தக் கல்லூரி வந்தால் இடம் முழுவதும் நீட் தேர்வு மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும். தமிழ்நாட்டில் நீட் தேர்வு இல்லை என்றால் இடம் முழுவதையும் மற்ற மாநில மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டியதிருக்கும். பெரிய பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நமது பக்கத்து மாநிலங்கள் இந்தக் கல்லூரியை அவர்கள் மாநிலத்திற்கு கொண்டு செல்ல கடுமையாகப் போராடி வருகின்றன. அவர்கள் சொல்லும் காரணங்களில் முக்கியமான காரணம் தமிழ்நாட்டில் புது அரசு வந்தால் நீட் தேர்வு இருக்காது என்பதுதான். ஒருவேளை இந்த காரணத்தினால் தான் கடந்த ஒரு வருடமாக எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் வேலைகள் மந்த கதியில் நடந்து கொண்டிருக்கின்றனவோ என்னவோ?
எனக்கு இருக்கும் இந்த குழப்பம், அதாவது நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு சாதகமா பாதகமா என்ற குழப்பம் , நமது முதல்வருக்கும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன் . யாரோ அவருக்கு மிக சரியான ஆலோசனையை கூறி இருக்கிறார்கள். அதனால் உடனே ஒரு முடிவு எடுக்காமல் ஒரு குழுவை ஏற்படுத்தி அறிக்கையை தயார் செய்ய சொல்லி இருக்கிறார். இது ஒரு மிகச்சிறந்த முடிவு என்று நினைக்கிறேன். அந்த குழு விருப்பு வெறுப்பின்றி ஒரு நேர்மையான நியாயமான அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யும் என்று நம்புகிறேன்.
படித்ததற்கு நன்றி
No comments:
Post a Comment