#அன்றைக்கு எனக்குகிடைத்த #இசை #இன்றைக்கு எனக்கு கிடைக்கும் என்பது #சந்தேகமே..
தனது #இசைப்பயணம் குறித்து இசைஞானி #இளையராஜா #சுவாரஸ்யமான நினைவுகள்..
பஞ்சு அருணாசலம் சார் அடுத்து "#பிரியா'' படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.
பஞ்சு சார் கதை வசனம் எழுத, சுஜாதா திரைக்கதை அமைக்க எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்வதாக ஏற்பாடு. ரஜினி, ஸ்ரீதேவி இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்கள்.
இந்தப் படத்துக்கான பாடல்கள் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று பஞ்சு சார் விரும்பினார். அவர் விருப்பத்தில் எனக்கும் உடன்பாடுதான். எனவே யோசித்தேன். அப்போது ஜேசுதாஸ் தனது தரங்கிணி ஸ்டூடியோவிற்காக, "ஸ்டீரியோ'' முறையில் பாடல் பதிவு செய்வதற்கான கருவிகளை புதிதாக வாங்கியிருந்தார்.
அவருடைய மெல்லிசை நிகழ்ச்சிகளில் இந்த புதிய கருவிகளைப் பயன்படுத்தி ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் விதத்தில் `சவுண்ட் சிஸ்டம்' அமைத்தார்.
"பிரியா'' படத்தின் பாடல்களை இந்த `ஸ்டீரியோ' முறையில் பதிவு செய்ய முயன்று பார்த்தால் என்ன என்று தோன்றியது. "கம்போசிங்கிற்கு, பெங்களூர் போகலாம்'' என்றார், பஞ்சு அருணாசலம். போனோம்.
முதல் நாள் ஓட்டலில் உட்கார்ந்தோம். கம்போசிங்கில் திருப்தி வரவில்லை. நான் பஞ்சு சாரிடம் "அண்ணே! பெங்களூர் வந்து ரூமிற்குள் அடைந்து கிடப்பதா? லால்பாக், கம்பன்பாக் போன்ற இடங்களுக்கே போய் கம்போஸ் செய்வோம்'' என்றேன்.
பஞ்சு சாரும் சிரித்துக்கொண்டே, "சரி, அங்கேயே போவோம்'' என்றார்.
காரில் வாத்தியங்களை ஏற்றிக்கொண்டு கிளம்பினோம்.
லால்பாக்கில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியை தேர்ந்தெடுத்து அங்கே ஒரு பெட்ஷீட் விரித்து உட்கார்ந்து கம்போஸ் செய்ய ஆரம்பித்தோம். கூட்டம் நாங்கள் இருந்த பக்கமாக வரவில்லை என்பதால் `இசை'க்கு இடையூறு இல்லாதிருந்தது.
இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இடத்தில் கம்போசிங் நடந்ததில் 6 பாடல்களும் முடிந்தன.
சென்னைக்கு திரும்பியதும், ஜேசுதாசிடம் எங்கள் புதிய இசை முயற்சி பற்றி தெரிவித்தேன். இது விஷயத்தில் எங்கள் ஆர்வத்துக்கு இணையாக ஜேசுதாஸ் உற்சாகமாகி விட்டார். "இன்னும் சில புதிய மெஷின்கள் வாங்கி விடுகிறேன்'' என்று சொன்னவர் கையோடு அப்போதே ஆர்டர் கொடுத்துவிடடார். புதிய மெஷின்களும் வந்து சேர்ந்தன.
பரணி ஸ்டூடியோவில் அத்தனை மெஷின்களையும் செட்டப் செய்து, மைக், வயரிங், ஹெட்போன்ஸ் எல்லாம் அமைத்து முதன் முதலாக "என்னுயிர் நீதானே'' என்ற பாடலை பதிவு செய்தோம்.
நம்பவே முடியவில்லை. இசை மிகத் தெளிவாக இருந்தது. தனியாகக் கேட்டபோதும் சரி, மொத்தமாக கேட்டபோதும் சரி துல்லியமாக ஒலித்தது பாட்டு. அளவு கடந்த மகிழ்ச்சியைத் தரும் இசையாக அது இருந்தது.
தமிழ்த்திரை உலகில், உலகத் தரத்துக்கு ஒப்பாக ஒரு இசையைக் கேட்பது அதுதான் முதல் தடவை.
இசைக் கலைஞர்கள் எல்லா ரெக்கார்டிங்குகளிலும் இதுபற்றியே பேசினார்கள். அப்போது ஒரு மலையாளப் படத்துக்கு இசையமைக்க சென்னை வந்திருந்த பிரபல இந்தி இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி காதுக்கும் இந்த செய்தி சென்று விட்டது. அவர் ரெக்கார்டிங்கை பார்க்க பரணி ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டார். அவருடன் அவரது மகள், உதவியாளர் நேபு ஆகியோரும் வந்திருந்தார்கள்.
அன்றைக்கு, பி.சுசீலா பாடிய "டார்லிங் டார்லிங்'' பாடல் பதிவாகியிருந்தது.
சலீல் சவுத்ரி வந்தவுடன், அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினோம். அவர் முகம் பிரகாசம் அடைந்தது. பாடல் முழுவதையும் கேட்டுவிட்டு, "இதுபோன்ற சினிமா இசையை இதுவரை கேட்டதில்லை'' என்றார், பரவசக் குரலில். ஒரு உண்மைக் கலைஞரின் உயர்ந்த மனோபாவத்தை அது எடுத்துக்காட்டியது.
இந்த வகையில் முதல் "ஸ்டீரியோ'' இந்தப் படத்தின் பாடல்கள்தான். ஜேசுதாஸ் அவர்களின் ஒத்துழைப்பால்தான் இதை சாதிக்க முடிந்தது.
இந்த ரெக்கார்டிங் முடிவதற்குள், ரெக்கார்டு செய்த பாடல்களைக் கேட்கும் உற்சாகத்தில் சவுண்டு என்ஜினீயர் வால்யூமை ஏற்ற, ஒரு `ஸ்பீக்கர்' போய்விட்டது.
ஜேசுதாஸ் அதையும் பொருட்படுத்தாமல், உடனடியாக வேறு ஸ்பீக்கருக்கு ஏற்பாடு செய்தார்.
"பிரியா'' படம் முழுக்க முழுக்க மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் படமானது. சண்டைக் காட்சிகளும், சேஸிங் காட்சிகளும் பாடல்களுமாக "பிரியா'' ஜனரஞ்சகமான படமாக வெளிவந்தது.
இந்தப் படத்தின் ஒரு ரீலில் தொடர்ந்து 10 நிமிடம் வசனம் எதுவும் வராது. `சைலன்ட் மூவி' போல இருக்கும் இந்த இடத்தில் மியூசிக் 10 நிமிடமும் வந்தாக வேண்டும்.
ரஜினியும், ஸ்ரீதேவியும் சிங்கப்பூரில் உள்ள டூரிஸ இடங்களையெல்லாம் ஜாலியாக பார்த்துத் திரிவது போன்ற காட்சிகள், டால்பின் ஷோ, கிளிகள் விளையாட்டு இதுபோல பலப்பல காட்சிகள் இடம் பெற்ற இந்த ரீலுக்கு இசையமைப்பது என்பது ஒரு சவாலாகவே இருந்தது. சரியான தாள கதியில் மியூசிக்கை கண்டக்ட் செய்யாவிட்டால் கிளி விளையாட்டுக்கு வரவேண்டிய மியூசிக் வேறு இடத்துக்கு போய்விடும்! அந்த காலகட்டத்தில் எந்த வசதியும் இல்லாமல் ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒவ்வொரு மியூசிக் வரவைப்பதென்பது எவ்வளவு கடினம் என்பது இப்போதுதான் தெரிகிறது. அன்றைக்கு நான் ஏதோ விளையாட்டுப் போல அதை செய்துவிட்டேன். அன்று அரை மணி நேரத்தில் முடிந்த அந்த ரீலுக்கு, இன்று மியூசிக் செய்தால் மூன்று நாட்களாவது ஆகும். அதிலும் அன்றைக்கு கிடைத்த அந்த இசை கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்.
No comments:
Post a Comment