18 வயதில் காதல் திருமணம் : 19 வயதில் கணவரால் வெளியேற்றம் - கணவரால் கைவிடப்பட்ட ஊரில் காவல் அதிகாரி..
கேரளாவில் காதல் கணவரால் கைவிடப்பட்டு பச்சிளம் குழந்தையுடன் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட இளம் பெண், அதே ஊரில் காவல்துறை அதிகாரியாக பணியில் அமர்ந்திருக்கிறார். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்... ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிப்பாள் என்பார்கள், அந்த கூற்றை சாதித்து காட்டியிருக்கிறார் கேரளாவை சேர்ந்த ஆனி சிவா...
திருவனந்தபுரம் வர்க்கலா பகுதியை சேர்ந்த ஆனி சிவா, தனது 18 வயதில் இளங்கலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த போது, தான் காதலித்தவரை வீட்டின் எதிர்ப்பை தாண்டி கரம்பிடித்தார்.
ஆனால் காதலித்தவனை கரம்பிடித்த மகிழ்ச்சியென்னவோ அவருக்கு கானல் நீராகிவிட்டது.
ஆம், 19 வயதில் 8 மாத பச்சிளம் குழந்தையை கையில் வைத்திருந்த போது கல்நெஞ்சம் கொண்ட கணவனாலும், அவரது குடும்பத்தாலும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
எங்கு செல்வது என அறியாது பரிதவித்த ஆனி சிவா, பச்சிளம் குழந்தையுடன் அடைக்கலம் தேடி தாய் வீடு சென்றிருக்கிறார். அங்கும் வெளியேற்றம்...
யாருடைய நிராகரிப்பாலும் சோர்ந்துபோய் விடக் கூடாது என்ற வைராக்கியத்துடன் நடந்த ஆனி சிவாவுக்கு உறவினரின் குடும்பம் கைக்கொடுத்துள்ளது.
நடந்ததை எண்ணாமல்... வாழ்க்கையில் சாதிக்க விரும்பிய ஆனி சிவா, கல்வியை அணிகலனாக்கிக் கொண்டார்.
வீடு வீடாக சென்று மசாலா பொருட்களையும், சலவை சோப்களையும், டெலிவரி பணியாளராகவும், பாலிசி சேர்ப்பவராகவும் ஒரு நிமிடம் நிற்காது வாழ்கையை வசப்படுத்தும் வீரப்பெண்ணாக உருவெடுத்தார்.
குழந்தை வளர்ப்புடன், கல்வியையும் தொடர்ந்த அவர், திருவிழாக்களில் ஐஸ்கிரீம், குளிர்பானம், கைவினைப் பொருட்களையும் விற்றிருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு கேரள காவல்துறை தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். பணி கிடைத்துவிட்டது என்று எண்ணாமல் அங்கும் தன்னுடைய கல்வியை தொடர்ந்து, உதவி ஆய்வாளர் தேர்விலும் வெற்றிப்பெற்றார்.
தற்போது ஆனி சிவா, எங்கு கணவர் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டாரோ, எங்கு திருவிழாக்களில் ஐஸ்கிரீம் விற்றாரோ அதே ஊரில் கடந்த 25 ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளராகியிருக்கிறார்.
தன்னுடைய 13 வயது மகனுக்கு நண்பராக இருக்க தன்னுடைய சிகை அலங்காரத்தையும் மாற்றியிருக்கும் ஆனி சிவா, இதுதான் உண்மையான வெற்றி என உரக்கச் சொல்கிறார். தடைகள் பல தாண்டி வென்றிருக்கும் ஆனி சிவாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
No comments:
Post a Comment