தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி தன்னை அறிவிப்பார் என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடைசி நிமிடம் வரை எதிர்பார்த்ததாகவும், அவர் எதிர்பார்ப்பு பொய்யானதை அடுத்து, அவர் மிகுந்த விரக்தியில் இருப்பதாகவும் டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளையும், மத்திய அமைச்சரவை பதவிகளையும் வகித்த பா.ஜ., மூத்த தலைவரான வெங்கையா நாயுடு, இப்போது ஓரங்கட்டப்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.தென் மாநிலமான ஆந்திராவில் இருந்து, பா.ஜ.,வின் முக்கிய தலைவராக வளர்ந்து வந்தவர் வெங்கையா நாயுடு. அத்வானியின் ரத யாத்திரை காலத்தில் இருந்து, முதன்மையான கட்சிப் பதவிகளை வகித்து வந்தார்.
நம்பிக்கை
ஆந்திர எம்.எல்.ஏ., வாக துவங்கி, ராஜ்யசபா எம்.பி.,யாக உயர்ந்து, பின், பா.ஜ., பொதுச் செயலர், தேசிய தலைவர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை பிடித்தார்; மத்திய அமைச்சரவையிலும் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்துள்ளார். கடந்த 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைத்தபோது, பார்லிமென்ட் விவகாரத் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, தகவல் ஒலிபரப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதன் பின், 2017ல் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இவரது ஐந்தாண்டு பதவி காலம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், தே.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக தன் பெயர் அறிவிக்கப்படும் என, வெங்கையா நாயுடு பெரிய நம்பிக்கையில் இருந்ததாக கூறப்படுகிறது.ஆனால், ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியின பெண் திரவுபதி முர்மு, தே.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத வெங்கையா நாயுடு, கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கையா நாயுடுவுக்கு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியுடன் நெருக்கம் இருந்தது. கடந்த 2013ல் கோவாவில் நடந்த பா.ஜ., பொதுக்குழு கூட்டத்தில், நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், வெங்கையாவுக்கான முக்கியத்துவம் கட்சியில் குறையத் துவங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், அதையும் தாண்டி வேறு சில காரணங்களையும் அரசியல் பார்வையாளர்கள் வரிசைப் படுத்துகின்றனர்.துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபா தலைவராகவும் பொறுப்பு வகித்த வெங்கையாவின் நடவடிக்கைகள், பல சந்தர்ப்பங்களில் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பார்லி.,யில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. ராஜ்யசபா தலைவரின் மைக் உடைக்கப்பட்டது; ஆவணங்கள் கிழித்தெறியப்பட்டன. சபை மாண்பை காக்குமாறு வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
கடும் வாக்குவாதம்
அமளியில் ஈடுபட்ட 12 எம்.பி.,க்களை, 'சஸ்பெண்ட்' செய்யுமாறு பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கேட்டுக் கொண்டார். 'கடும் நடவடிக்கை தேவையில்லை' என வெங்கையா மறுத்தார். இது தொடர்பாக, இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில், 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவம், வெங்கையா மீது அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், வெங்கையா நாயுடுவுக்கு ஜனாதிபதி பதவி வழங்கப்பட வேண்டும் என, தி.மு.க.,வின் கட்சி பத்திரிகையான, 'முரசொலி'யில் கட்டுரை வெளியானது. இது, வெங்கையா மீது பா.ஜ., தலைவர்களுக்கு எதிர்மறையான அபிப்ராயத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.'துணை ஜனாதிபதி பதவி காலம் முடிவடைந்த பின், டில்லியில் உள்ள மூன்று அரசு பங்க ளாக்களில் எதில் தங்க விரும்புகிறீர்கள்' என, மத்திய அமைச்சர் ஒருவரை அனுப்பி வெங்கையாவிடம் அரசு தரப்பில் கருத்து கேட்கப்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வெங்கையா, 'ஜனாதிபதி பதவி எனக்கு இல்லை என்பதை நேரடியாக சொல்ல வேண்டியது தானே' என, கடுமையாக பதில் சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வெங்கையா நாயுடு பெரும்பாலான நேரத்தை தன் சொந்த மாநிலத்திலேயே செலவிடுவதாகவும் சில மூத்த தலைவர்கள் அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.அவருக்கு ஜனாதிபதி வாய்ப்பு வழங்கப்படாததற்கு, இது போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துணை ஜனாதிபதி என்ற உயர்ந்த பதவியை வகித்துவிட்ட வெங்கையா நாயுடு, இனி அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அவர் டில்லியிலேயே வசிக்கப் போகிறாரா அல்லது சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு குடிபெயர்வாரா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.
ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ஐந்து ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு, வெங்கையா நாயுடு நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்., காங்.,கைச் சேர்ந்த நிரஞ்சன் ரெட்டி, யாகா கிருஷ்ணய்யா, தெலுங்கானாவின் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியைச் சேர்ந்த தாமோதர் ராவ் திவாகொண்டா, பார்த்தசாரதி ரெட்டி, ஒடிசாவின் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த நிரஞ்சன் பிஷி ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
No comments:
Post a Comment