*திருடக்கூடாது*
*பொய் சொல்லக்கூடாது*
*இதில் திருட்டுக்கு பல்வேறு வகையில் ஆட்சேபனை தெரிவிக்கும் நம் சமூகம், பொய் பேசுவதை கண்டு கொள்வதில்லை*
*காரணம்*
*உண்மையை சொல்லப்போனால் பொய் பேசாமல் யாரும் வாழ முடியாது என்ற அவலத்தை நியாயப்படுத்த வேண்டிய காலத்தில் சமூகம் சென்று கொண்டுள்ளது என்பதை யாவரும் அறிவோம்*
*திருட்டை விட மோசமானது ஒன்று உண்டென்றால்..அது தான் வதந்தி!*
*ஆம்!திருடுவதைவிட மோசமானது வதந்தி!*
*வார்த்தைகளின் சக்தியை உணர்த்தும் உண்மையில் நிகழ்ந்த கதை!*
*ஒருவரைப் பற்றிய வதந்தியையோ, எதிர்மறையான கருத்துகளையோ ஒருபோதும் பரப்பாதீர்கள்*
*அது அவர்களின் மரியாதையை மட்டுமல்ல, உங்களின் மரியாதையையும் குறைத்துவிடும்’ என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் பேச்சாளருமான பிரையன் கோஸ்லாவ் (Brian Koslow)* `
*பிரமாண்ட விளம்பரமெல்லாம் இல்லை... வாய்ப்பேச்சுகளாலேயே அது நல்ல படம்னு சேதி பரவி, நல்லா ஓட ஆரம்பிச்சிருச்சு’ என்று ஏதோ ஒரு படத்தைப் பற்றி, யாரோ பேசுவதைக் கேட்டிருப்போம்*.
*நேர்மறையான விமர்சனங்களுக்கே நம் மக்களிடம் இப்படி ஓர் அபாரமான வரவேற்பென்றால்.. எதிர்மறையான விமர்சனம், கருத்துகள், வதந்தி ஒருவரை என்னவெல்லாம் செய்யும்? நினைத்தாலே மனதை என்னவோ செய்கிறது அல்லவா*!
*மோசமான ஒரு வதந்தியால் ஒருவர் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருப்பார்?*
*என்னவிதமான அவஸ்தைகளையெல்லாம் எதிர்கொண்டிருப்பார்?*
*பேசுவதற்கு முன் யாருமே இது குறித்து யோசிப்பதில்லை*.
*உண்மையில், நாம் உதிர்க்கும் வார்த்தைகளைத் திரும்ப அள்ளவே முடியாது என்பதுதான் நிதர்சனம்*.
*அதனால்தான், `வார்த்தைகளை அளந்து, தெரிந்து பேச வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள்*.
*இதை எளிமையாக விளக்குகிறது இந்தக் கதை...*
*அந்த முதியவர், பணி ஓய்வு பெற்றவர்*.
*வீட்டில் தனிமையில் இருந்தார்*.
*மனைவி இல்லை*. *பிள்ளைகளும் இல்லை*.
*படித்தவர், ஒருகாலத்தில் பெரிய பதவியிலிருந்தவர்தான்*. *ஆனால், கொஞ்சம் துடுக்குத்தனம் நிறைந்தவர்*. *மற்றவர்களை எளிதாகக் குறைகூறுபவர்*. *அவருடைய பக்கத்து வீட்டுக்கு ஒருவன் குடிவந்தான்*.
*அவனுக்கு `ஆக்டிங் டிரைவர்’ வேலை*. *யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவான்*.
*மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான்*. *இவருக்கு அவன் மேல் சந்தேகம்*.
*திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்... காலை 8 மணிக்கு வீடு திரும்புகிறான்*.
*சில நாள்களில் மாலையில் போகிறான்... இரவில் வீடு திரும்புகிறான்*.
*நேரம் கெட்ட நேரத்துக்குப் போகிறான்*.
*இவரிடம் முகம் கொடுத்துக்கூடப் பேசுவதில்லை*.
*இது ஒன்றே அவருக்குப் போதுமானதாக இருந்தது*.
*ஒருவேளை அவன் திருடனாக இருப்பானோ..!*
*இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது*.
*காலை, மாலை வேளைகளில் பூங்காவில் உலாவப் போனபோது, தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னார்*.
*காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றிய சந்தேகத்தைச் சொன்னார்*. `
*அந்த ஆள் திருடன்’ என்கிற வதந்தி மெள்ளப் பரவியது*.
*ஒருகட்டத்தில், போலீஸாரே அவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து கொண்டுபோனார்கள்*.
*ஆனால், அவன் அப்பாவி, உண்மையிலேயே அவன் ஒரு டிரைவர்தான் என்பது நிரூபணம் ஆனதும், அவனை விடுவித்துவிட்டார்கள்*.
*ஆனால், அந்த டிரைவருக்கு மன உளைச்சல் அதிகமானது*. `
*நான் என்ன திருடனா?*... *என்னைப் போய் கைதுசெய்துவிட்டார்களே...*
*எல்லாம் இந்தப் பக்கத்து வீட்டு பெரியவரால்தானே நடந்தது’ என்கிற கோபமும் ஆற்றாமையும் எழுந்தது*.
*அவன், முதியவரின் மேல் மானநஷ்ட வழக்குத் தொடுத்தான்*. *வழக்கு விசாரணைக்கு வந்தது*.
*நீதிபதி விசாரித்தபோது முதியவர் இப்படிச் சொன்னார்*... ``
*நான் யாரையும் காயப்படுத்தவில்லை. வாய் வார்த்தையாக எதையோ சொன்னேன்*...
*அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.*
*டிரைவரோ, தன் தரப்பு நியாயத்தையும், தான் எப்படியெல்லாம் போலீஸால் அழைக்கப்பட்டான் என்பதையும், தனக்கு நேர்ந்த அவமானம் மனதை எப்படியெல்லாம் பாதித்தது என்பதையும், எல்லாம் பெரியவர் பரப்பிய வதந்தியாலும் தான் நடந்தது என்பதையும் எடுத்துச் சொன்னான்*.
*அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கொஞ்சம் விவரமானவர்*.
*டிரைவரின் நிலையும், பெரியவரின் வீம்பும் அவருக்குப் புரிந்தது*. *சரி... இந்த வழக்குக்கான தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைக்கிறேன்’* *என்றவர், முதியவரை அழைத்தார்*.
*நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள்*.
*உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்*. *உங்கள் வீட்டுக்கு நீங்கள் காரில்போகும்போது, அந்த பேப்பரை கிழித்துத் துண்டு துண்டாக்குங்கள்*.
*போகிற வழியெல்லாம் ஒவ்வொரு துண்டாகப் போட்டுக்கொண்டே செல்லுங்கள்*.
*நாளை காலையில் வாருங்கள்’’ என்றார்*.
*அடுத்த நாள் அந்த முதியவர், டிரைவர் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள்*.
*நீதிபதி, முதியவரை அழைத்தார்*.
*நான் சொன்னதுபோலச் செய்தீர்களா?*
*ஆமாம் ஐயா*
*நேற்று நீங்கள் வீசியெறிந்த காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்துக்கொண்டு வாருங்கள்*.
*அதன் பிறகு தீர்ப்பு சொல்கிறேன்.*
*அது எப்படி ஐயா முடியும்?*
*அந்தக் காகிதத் துண்டுகளையெல்லாம் காற்று எங்காவது கொண்டுபோய் போட்டிருக்கும்*.
*அதைப் போய் எப்படிக் கண்டுபிடிப்பது?*
*முடியாதில்லையா?*...
*அப்படித்தான் நீங்கள் சொன்ன வார்த்தைகளும்*.
*திரும்பப் பெற முடியாதவை*.
*ஒருவரின் வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டவை*.
*ஒருவரைப் பற்றி நல்லவிதமாக உங்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லையென்றால், அவரைப் பற்றி எதையுமே சொல்லாதீர்கள்*.
*நம் வாய்க்கு நாம்தான் எஜமானனாக இருக்க வேண்டும்*. *அப்போதுதான் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு நாம் அடிமைகளாக மாறாமல் இருப்போம்*.
*உண்மையில், வதந்தி என்பது ஒரு திருடனைவிட மோசமானது*
*ஏனென்றால், அது ஒரு மனிதனின் மதிப்பு, மரியாதை, கண்ணியம், நல்ல குணம் அனைத்தையும் களவாடிவிடுகிறது*.
*அவற்றை அந்த மனிதருக்கு யாராலும் திரும்பத் தர முடியாது*.
*ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்*
*உங்கள் நடை தடுமாறினால், எப்படியாவது சமநிலை செய்து சரிசெய்துவிடலாம்*
*உங்கள் நாக்குத் தடுமாறினால், உங்கள் வார்த்தைகளை திரும்ப மீட்கவே முடியாது.*
*இந்த வழக்கின் தீர்ப்பு எப்படியும் இருக்கட்டும்*...
*நீதிபதி முதியவருக்குச் சொன்ன அறிவுரை மிக முக்கியமானது இல்லையா?*...
*ஆம்! நண்பர்களே!*
*நாம் அனைவரும் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் வதந்தியால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்போம்*
*பிறருடைய தனிப்பட்ட அந்தரங்க கருத்துகளை அனைத்தும் அறிந்தது போன்று பேசித்திரிபவர்களை கண்டறிந்து புறந்தள்ளுங்கள்*
*வதந்தி பேசுபவர்கள் தாங்களும் சீரழிந்து தங்களை சேர்ந்தவர்களையும் சீரழிப்பவர்கள்*
*விழிப்புடன் இருப்போம்*
*வாழ்க!வையகம்!*
*வாழ்க!வளமுடன்!*
*வளர்க!நலமுடன்!!*
No comments:
Post a Comment