'மஹாராஷ்டிரா கூட்டணி அரசு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டது செல்லும்' என, உச்ச நீதிமன்றம் நேற்றிரவு தீர்ப்பளித்தது. இதையடுத்து, நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வியை தவிர்க்கும் நோக்கில், உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார்.
மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இக்கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தபோதும், முதல்வர் பதவி தொடர்பாக மோதல் ஏற்பட்டதால், கூட்டணி முறிந்தது.
இதையடுத்து, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து, மஹாராஷ்டிரா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை உருவாக்கி, சிவசேனா ஆட்சி அமைத்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.
பணப்பரிமாற்ற மோசடி
இந்த கூட்டணி சில மாதங்கள் கூட நீடிக்காது என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்தனர். இதற்கு ஏற்ப, இந்த கூட்டணி அரசு தினமும் ஒரு பிரச்னையை எதிர்கொண்டது.மும்பையில் உள்ள 'ரிலையன்ஸ்' அதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே, வெடி குண்டு நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்ட விவகாரத்தில், போலீஸ் அதிகாரி சச்சின் வாஸே என்பவர் கைதானார். இந்த விவகாரத்தில் மும்பை நகர கமிஷனர் பரம்பீர் சிங் பதவி இழந்தார். இந்நிலையில், மும்பை ஹோட்டல்கள் மற்றும் மதுபான விடுதிகளில் இருந்து 100 கோடி ரூபாய் வசூல் செய்து தருமாறு, தேசியவாத காங்.,கை சேர்ந்த அமைச்சர் அனில் தேஷ்முக் அழுத்தம் கொடுத்ததாக, பரம்பீர் சிங் முதல்வரிடம் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் அமைச்சர் அனில் தேஷ்முக் பதவி இழந்ததுடன், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.அதேபோல, தேசியவாத காங்.,கைச் சேர்ந்த அமைச்சர் நவாப் மாலிக் பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் சிக்கி சிறையில் உள்ளார். 'பாலிவுட்' நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் சிக்கிய விவகாரமும், கூட்டணி அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியது.இப்படி தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்து வந்த நிலையில், உத்தவ் தாக்கரே ஹிந்துத்வா கொள்கையில் இருந்து விலகுவதாக கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டது. சமீபத்தில் நடந்த ராஜ்யசபா மற்றும் மேல்சபை தேர்தலில், சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறி ஓட்டு போட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், சிவசேனாவின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் சிலர் திடீரென குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்று, கட்சி தலைமைக்கு
எதிராக போர்க்கொடி துாக்கினர்.
கடும் முயற்சிகள்
ஷிண்டேவுக்கு ஆதரவாக, 40 சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஒன்பது சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதாக கூறப்படுகிறது.பின் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு இடம் மாறிய இவர்களை சமாதானப்படுத்த, சிவசேனா கடும் முயற்சிகளை மேற்கொண்டது.
முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே அறிவித்தார். மேலும், அரசு இல்லத்தில் இருந்து தன் சொந்த வீட்டுக்கு அவர் குடி புகுந்தார்.ஏக்நாத் ஷிண்டே உட்பட அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.
உத்தரவிடக் கூடாது
இது தொடர்பாக பதிலளிக்கும்படி,
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு துணை சபாநாயகர், 'நோட்டீஸ்' அனுப்பினார். இதை எதிர்த்து அதிருப்தியாளர்கள் குழு உச்ச நீதிமன்றத்தை நாடியது. அதிருப்தியாளர்கள் மீது தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையை எடுக்க, ஜூலை 11ம் தேதி வரை தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கூடாது என்ற மாநில அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.இந்நிலையில், 'அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் நேரடியாக வந்து பேச்சு நடத்தினால் அவர்களது குறைகளுக்கு தீர்வு காணப்படும்' என, உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்தார். எவ்வளவு பேசியும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மசியவில்லை. மஹாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டதை அடுத்து, மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ், நேற்று முன்தினம் டில்லி சென்று, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின், மும்பைக்கு திரும்பிய பட்னவிஸ், மஹாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், உடனடியாக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு உத்தரவிடுமாறும், கவர்னரிடம் கடிதம் அளித்தார். இதையடுத்து, இன்றைய தினம் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பார்திவாலா அடங்கிய விடுமுறைகால அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
பலம் இல்லை
அப்போது, சிவசேனாவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ., ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.கே.கவுல் வாதிட்டதாவது:சட்டசபையை விடுங்கள், கட்சிக்குள்ளேயே அவர்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. இது போன்ற நேரத்தில் பெரும்பான்மையை சபையில் நிரூபிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த அடிப்படையில் தான் கவர்னர் உத்தரவிட்டுள்ளார். தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருப்பதால், நம்பிக்கை ஓட்டெடுப்பை தாமதப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் வாதிட்டார்.சிவசேனா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டதாவது:கட்சி மாறுபவர்கள் மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதில்லை. சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தாவிட்டால் வானம் இடிந்து விழுந்துவிடாது.
எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் குறித்து துணை சபாநாயகர் முடிவெடுக்கும் வரை, நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு அனுமதி அளிக்க கூடாது.இவ்வாறு அவர் வாதிட்டார்.
ஒத்துழைப்பு தருவோம்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று மாலை 5:00 மணிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த அனுமதி அளித்ததுடன், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11க்கு ஒத்திவைத்தனர். இதையடுத்து பெரும்பான்மையை இழந்துவிட்டதால், நம்பிக்கை ஓட்டெடுப்பில் கூட்டணி அரசு தோல்வி அடைவது நிச்சயமாகி விட்டது.
இதனால் சட்டசபையில் அவமானப்படுவதை தவிர்க்கும் நோக்கில், முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.''அரசுக்கு ஆதரவு அளித்து வந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து அமையவுள்ள அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்'' என, உத்தவ் தாக்கரே அறிவித்தார்.மஹாராஷ்டிராவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தினமும் தத்தளித்து வந்த கூட்டணி அரசு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.இந்நிலையில், முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்றும், அதில் சிவசேனா அதிருப்தி குழு தலைவர் ஏக்னாத் ஷிண்டே துணை முதல்வர் ஆவார் என்றும் மஹா., - பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.
நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் நடந்த நேரத்தில், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். அதில், இதுநாள் வரை ஒத்துழைப்பு அளித்த அமைச்சரவை சகாக்களுக்கு அவர் நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், 'என் சொந்த கட்சியினரே எனக்கு துரோகம் இழைத்துவிட்டனர். தெரிந்தோ, தெரியாமலோ உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்' என, அவர் கூட்டத்தில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹாராஷ்டிரா சட்டசபை வளாகமான விதான் பவனை சுற்றி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுதும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம் முதல், சட்டசபை வளாகம் வரையிலான சாலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் பஸ்களில் அழைத்து வரப்படும் போது, சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவாவுக்கு இடமாற்றம்! ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் சில சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் கடந்த எட்டு நாட்களாக அசாமின் கவுஹாத்தியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணிக்கு ஹோட்டல் அறைகளை காலி செய்துவிட்டு, கவுஹாத்தி விமான நிலையம் சென்றனர். அங்கிருந்து, 7:00 மணிக்கு தனி விமானத்தில் கோவா புறப்பட்டு சென்றனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த உத்தவ் தாக்கரே, நேற்று இரவு கவர்னர் மாளிகை சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
No comments:
Post a Comment