''அ.தி.மு.க., பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் திட்டமிட்டு அவமானப் படுத்தப்பட்டார். பழனிசாமி அதை கண்டிக்கவில்லை,'' என, அ.தி.மு.க., அமைப்பு செயலரும், பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:கடந்த, 14ம் தேதி மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், பொதுக்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க முடியாததன் காரணம் குறித்து விளக்கப்பட்டது. கூட்டம் முடிந்த நிலையில், திடீரென முன்னாள் அமைச்சர் மூர்த்தி எழுந்து நின்றார். அவரிடம் 'மைக்' கொடுக்கும்படி பழனிசாமி கூறினார். அவரிடம் மைக் கொடுக்கப்பட்டதும், 'கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும். ஒற்றைத் தலைமை தான் கட்சியை வழிநடத்த முடியும்' என்றார். அதை கண்டிக்க வேண்டிய பழனிசாமி, 'வேறு யார் பேசுகிறீர்கள்?' எனக் கேட்டார்.அடுத்து பேசிய எல்லாரும், ஏற்கனவே சொல்லிக் கொடுத்ததை ஒப்புவிப்பது போல், ஒற்றைத் தலைமை வேண்டும் என பேசினர்.
நான் எழுந்து, 'இப்பிரச்னையை எல்லாரும் பேசுங்கள் எனக் கூறி, பேச வைப்பது என்ன நியாயம்? இது கட்சியை பேராபத்தில் கொண்டு போய் விடும்' என கூறினேன். தற்போது, கட்சி நிர்வாகிகள் பழனிசாமி பக்கமும், தொண்டர்கள் பன்னீர்செல்வம் பக்கமும் உள்ளனர். தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையிலான போட்டியாக உள்ளது.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது கட்சியின் தாரக மந்திரம். கடமையை செய்ய பொதுக்குழு சென்றோம். கண்ணியமாக எங்களை நடத்த வேண்டியவர்கள், எப்படி நடத்தினர் என்பதை நாடே பார்த்தது. கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டிய கட்சி, கட்டுப்பாடுகளை மீறி இருந்ததையும் அனைவரும் பார்த்தனர்.
பன்னீர்செல்வம் மேடை ஏறியபோது, அவருக்கு எதிராக கோஷமிட்டனர். அவர் தான் கட்சி பொருளாளர். கணக்குகளை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படவில்லை. பேசச் சென்றபோது 'மைக்'கை 'ஆப்' செய்தனர். பன்னீர்செல்வமும், பழனிசாமியும், எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ கிடையாது. அதேபோல், அ.தி.மு.க., அவர்கள் இருவரின் சொத்து கிடையாது. இது, தொண்டர்களின் கட்சி. அவர்கள், கட்சி காப்பாற்றப்பட வேண்டும் என நினைக்கின்றனர். பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் மீது பாட்டில் வீசினர்; தரக்குறைவான வார்த்தைகளால் பேசினர். பழனிசாமி எழுந்து, 'இது தவறு' என்று கண்டித்தாரா? மேடையில் இருந்த யாராவது தடுத்தனரா? இல்லை. திட்டமிட்டு அவமதித்தனர்.
No comments:
Post a Comment