Friday, June 24, 2022

தொண்டர்கள் எண்ணத்திற்கு செவி சாய்ப்பரா?

 எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட அ.தி.மு.க., பல்வேறு இடையூறுகளுக்குப் பின், தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. அவரது மறைவுக்குப் பின், ஜெயலலிதா பல சவால்களை எதிர்கொண்டு, மக்களின் பெரும்பான்மையை பெற்று முதல்வரானதுடன், கட்சியையும் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.



ஜெயலலிதா சிறை செல்ல நேரிட்டதால் பன்னீர்செல்வமும், சசிகலா சிறை செல்ல நேரிட்டதால், பழனிசாமியும், திடீரென முதல்வராக மகுடம் சூடினர்; இது, நாடறிந்த உண்மை. வெளிப்படையாக சொல்வதானால், அவர்கள் இருவருக்கும் அடித்தது குருட்டு அதிர்ஷ்டமே. உண்மை நிலை இவ்வாறு இருக்க, தற்போது பன்னீர்செல்வமும், பழனிசாமியும், பதவி மோகத்தில் ஒருவருக்கொருவர், எதிரும் புதிருமாக மோதிக்கொள்ளும் காட்சியை கண்டு, அரசியல் சார்பற்ற நடுநிலையாளர்களுக்கு சிரிப்பு வருகிறது. இது, அ.தி.மு.க.,வின் உட்கட்சி பிரச்னை என்றாலும், இந்த மோதலை ரசிக்க, கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் முட்டாள்கள் அல்ல என்பதை, சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.



குருட்டு அதிர்ஷ்டத்தால் பதவி பெற்ற இருவரும், தாங்கள் வந்த அதிர்ஷ்ட பாதையிலேயே பயணித்து, சீட்டு குலுக்கல் முறையில், தங்கள் இருவரில் ஒருவரை, ஒற்றை தலைமையாக தேர்வு செய்து, இலகுவாக பிரச்னைக்கு முடிவு கட்டலாம் என்பதே, அ.தி.மு.க.,வில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களின் எதிர்பார்ப்பு.அ.தி.மு.க., மீண்டும் ஒரு முறை பிளவுபட்டால், அது, 'அண்ணன் எப்போது ஒழிவான்; திண்ணை எப்போது காலியாகும்' என, காத்துக் கொண்டிருக்கும் சசிகலா, தினகரன் போன்ற வர்களுக்கும், மற்ற சில கட்சிகளுக்கும் தான்சாதகமாகுமே அன்றி, கட்சியின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் எந்த வகையிலும் உதவாது. தொண்டர்களின் இந்த எண்ணத்திற்கு இருவரும் செவி சாய்ப்பரா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...