அப்பா நன்றாகக் குடித்திருந்தார், வரும்
போதே குடித்து விட்டு வரும் அப்பாவை என்ன சொல்லித் திட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை.
அப்பா குடிப்பது வழக்கமான ஒன்றுதான். அவர் எவ்வளவு குடித்தாலும் தன்னிலை மறந்து கீழே விழுந்து கிடந்ததாகவோ, யாரையும் தகாத சொற்களால் திட்டியதாகவோ எனக்கு நினைவில் இல்லை.
ஆனாலும் குடித்து விட்டு வீட்டுக்குள் வருபவர்களை எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை, அது அப்பாவாக இருந்தாலும் சரி!
"காலைலேயே தண்ணி அடிக்கணுமா?, தண்ணி அடிக்கிறதா இருந்தா வீட்டுப் பக்கம் வராதீங்க" என்று சொல்ல நினைத்தேன். பிறகு அந்தச் சொற்கள் அவரது மனதை அதிகம் பாதிக்கலாம் என்று யோசித்து விட்டு அப்படியே விட்டு விட்டேன்.
முருகனும், குழலியும் தாத்தா வாங்கி வந்திருந்த அச்சு முறுக்கையும், பனங்கிழங்கையும் வாங்கிக் கொண்டு பதிலுக்குச் சில முத்தங்களை அவருக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
அம்மாவோடு எத்தனை சண்டை போட்டாலும் அப்பாவை மரியாதைக் குறைவாகவோ, கடுமையாகவோ என் மனைவி ஒரு போதும் பேசி இருக்கவில்லை... அது எனக்கு எப்போதும் ஒரு வியப்பான ரகசியமாகவே இருந்தது!
நான் அவரை ஏதேனும் கடும் சொற்களால் பேசினால் கூட உடனடியாக ஒரு கோப்பைத் தேநீரை அவருக்குக் கொடுத்து, 'நான் இருக்கிறேன்' என்று ஆதரவுக் கொடி பிடிப்பாள்.
"எப்டி இருக்கீங்க... அதிகமா குடிக்காதீங்க மாமா.இன்னும் ரொம்ப நாள் பேரப் புள்ளங்களோட நீங்க நல்லா இருக்கணும்னு தான் நெனைக்கிறோம்" என்றபடி அப்பாவோடு தனது உரையாடலைத் துவங்கி விட்டிருந்தாள் தாமரை. இனி அவர்களின் உரையாடல் மாலை வரை நீடிக்கும்.
சின்ன வயதில் இருந்தே அப்பாவைக் கண்டால் எனக்குப் பிடிப்பதில்லை, அதற்கு நிறையக் காரணங்கள் என்னிடத்தில் இருந்தன, ஒன்று அவர் ஒரு ஏழையாய் இருந்தது. இன்னொன்று அவர் காய்கறிக் கடை வைத்திருந்தது.
ஒரு காய்கறிக் கடைக்காரரின் மகன் என்று பள்ளியில் சொல்லிக் கொள்வதற்கும், கல்லூரியில் நண்பர்களிடத்தில் சொல்லிக் கொள்வதற்கும் எனக்கு இருந்த வெட்கமும், தாழ்வுணர்வுமே அவரை எனக்குப் பிடிக்காமல் போனதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்,
அவர் பெரும்பாலும் கடையிலேயே காலம் கழித்தார். அவருடைய கடை பேருந்து நிலையத்தின் பின்னால் நிலையாக இருந்த காய்கறிச் சந்தையில் இருக்கிறது.
நான் சிறுவனாக இருந்தபோது விடுமுறை நாட்களில் வலுக்கட்டாயமாக என்னை அவர் கடைக்குக் கூட்டிக் கொண்டு போய் விடுவார். கடினமான வேலைகள் எதையும் எனக்குச் வழங்குவதில்லை... என்றால் கூடக் கல்லாவில் உட்கார வைத்து விடுவார்.
வருகிற பணத்தை எண்ணி வாங்குவது மீதிச் சில்லறை கொடுப்பது என்று என்னுடைய பல விளையாட்டு நாட்களை நான் இழந்து போனதற்கு அப்பா தான் காரணம் என்று நான் உறுதியாக நம்பினேன். பலமுறை கிரிக்கெட் பந்தயங்கள் நடக்கும் போது நான் கடையில் அமர்ந்திருப்பது சிறையில் அடைக்கப்பட்ட மனநிலையைத் தந்திருக்கிறது.
ஆகவே நான் அவரைக் கடுமையாக வெறுக்கத் துவங்கி இருந்தேன், அவருடைய முகத்தையும், அவருடைய நடவடிக்கைகளையும் என்னையும் அறியாமல் நான் வெறுப்பது எங்கிருந்து தொடங்கியது என்று என்னால் கண்டு
பிடிக்க முடியவில்லை.
அவரது கடையில் வேலை செய்வதற்கு இரண்டு பேர் இருந்தாலும் கூட அவரே பல நேரங்களில் மூட்டைகளை லாரியில் இருந்து இறக்குவார். அந்தக் காட்சியைக் காண்பதற்கு எனக்கு மிகவும் எரிச்சலாகவும், அருவருப்பாகவும் இருக்கும்.
அப்பாவின் மீது நான் வெறுப்புக் கொள்வதற்கு இன்னொரு மிக முக்கியமான காரணமும் இருந்தது, அது அவருடைய உடைகள் பற்றியது.
அப்பா எப்போதும் அழுக்கான முரட்டுத் துணிகளையே ஆடையாக அணிந்திருப்பார். பள்ளியில் பணம் கட்டுவதற்கும், கல்லூரியில் கையெழுத்துப் போடுவதற்கும் கூட அவர் அதே அழுக்கு உடைகளோடு தான் வருவார்.
சில நேரங்களில் அரக்கு நிறத்தில் மாறிப் போயிருக்கும் வெள்ளை வேட்டியில் அவர் என் கூட வருவது வெட்கமானதாகவும், சினம் வரவழைப்பதாகவும் இருந்திருக்கிறது.
கல்லூரி காலத்தில் ஒரு
முறை அவரோடு அப்படி நடந்து சென்று கொண்டிருந்த போது கூடப் படிக்கும் பெண் தோழிகள் சிலர் கூட்டமாக எதிர்ப்பட்டார்கள். அவர்களின் கண்களில் படாமல் ஒளிந்து நடந்து செல்ல வேண்டியிருந்தது.
இருப்பினும் அவர்களில் ஒருத்தி என்னைக் கவனித்து விட்டு, "என்ன கதிரவா? அப்பாவோட வாக்கிங்கா?" என்று நக்கலடித்தாள். அவமானமாக இருந்தது.
அம்மாவிடம் வந்து, "ஏம்மா, அப்பா யாரையும் புரிஞ்சுக்கவே மாட்டேன்கிறாறு? ஏண்டா இப்படி ஒரு ஆளுக்கு மகனாப் பொறந்தோம்னு இருக்கும்மா'' என்றதும், அம்மா ஒன்றும் சொல்லவில்லை,
அப்பாவை யாரும் குறை சொல்வது அம்மாவுக்குப் பிடிக்காது, அது மகனாக இருந்தாலும்.... என்பதை அம்மாவின் பார்வையில் உணர்ந்தவனாக நகர்ந்தேன்.
அம்மா, அப்பாவைப் பற்றி எந்தக் குறையும் எப்போதும் சொன்னதில்லை, அவர் குடிப்பதைப் பற்றி மட்டும் அவர் வருத்தப்படுவாரே தவிர, அவரைப் பற்றிய எந்த ஒரு வெறுப்பான மனநிலையையும் வெளிப்படுத்தியதாக எனக்கு நினைவில்லை.
மாலையில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய போது அப்பா அறைக்குள் படுத்திருந்தார். குழலி அப்பாவுக்கு அருகில் அமர்ந்து ஏதோ கதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
பொதுவாக காலையில் வந்தால் மாலையில் கிளம்பி விடுவது தான் அப்பாவின் வழக்கம். நாங்கள் இருக்கும் நகரத்தில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் தான் ஊர். நினைத்தால் வந்து விடுவது அப்பா, அம்மாவுக்கும் எங்களுக்கும் பழக்கமான ஒன்றுதான்.
இன்று வழக்கத்துக்கு மாறாக அவர் இங்கேயே இருந்தது ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தது. "இந்த மனுஷன் என்ன... இன்னும் கெளம்பாம இருக்காரு" என்று பல்லைக் கடித்தவாறே முருகனைத் தேட ஆரம்பித்தேன்.
"தாமர, அவன எங்கே காணம்? சாய்ங்கால நேரத்துல அவன வெளில விடாதன்னு சொல்லி இருக்கேன்ல" என்று அப்பாவின் மீதுள்ள எரிச்சலை மனைவியிடம் காட்டினேன்.
"அவன் மெடிக்களுக்குப் போயிருக்காங்க, மாமாவுக்கு வயித்து வலின்னு நான்தான் மாத்திரை வாங்க அனுப்பி இருக்கேன்" என்றாள் தாமரை.
"ஆமா, காலைலே குடிக்கச் சொல்லு வயித்த வலி வராது.நம்மள வேற எதுக்கு தொந்தரவு பண்றாருன்னு தெரியல" என்று நான் முனகியது அனேகமாக தாமரையில் காதில் விழுந்திருக்கும் என்பது அவள் கையில் இருந்த பாத்திரத்தை அழுத்தமாகக் கீழே வைத்த விதத்தில் இருந்து தெரிந்தது.
தொலைக்காட்சியில் கழிந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் நான் அப்பாவை மறந்திருந்தேன், திரும்பி அறைக்குள் பார்த்தபோது அப்பா, வலியால் அவதிப்படுவது மாதிரித் தெரிந்தது எனக்கு.
அதிகம் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றால் கூட அவர் மெல்ல முனகுவது மாதிரித் தெரியவும், உள்ளே சென்று "ரொம்ப வலியா இருந்தா ஆஸ்பிட்டலுக்குப் போயிட்டு வரலாம் வாங்கப்பா" என்றேன்.
அவரும் எழுந்து சட்டையை மாட்டிக் கொள்ளத் துவங்கினார், வேறெதுவும் சொல்லாமல் அவர் அப்படிக் கிளம்பியது அவருக்கு வலி மிகுதியாக இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியது.
வண்டியைக் கிளப்பினேன்.அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று காத்திருந்து மருத்துவரைச் சந்தித்த
போது இரவு ஒன்பதுக்கும் மேலாகி விட்டிருந்தது. சில சோதனைகளைச் செய்து விட்டு என்னை மீண்டும் உள்ளே அழைத்தார் மருத்துவர்.
மிக இளவயது மருத்துவராக இருந்ததால் நெருக்கமாகப் பேசினார், "ஏதோ யூரினல் அலர்ஜி மாதிரித் தான் சார் தெரியுது. ஒரு கிட்னிதானே... இது
மாதிரிப் பிரச்சனைகள் அடிக்கடி வரும். எதுக்கும் இன்னைக்கு இரவு இங்கேயே இருந்து பார்த்துக் கொண்டால் நல்லது" என்றார் மருத்துவர்.
"சரி சார், அப்படியே செய்யலாம்" என்று சொல்லி விட்டு அப்பாவை செவிலிப் பெண் காட்டிய படுக்கை அறைக்குள் படுக்க வைத்து விட்டு தாமரைக்கு அழைத்தேன்.
மருத்துவர் ஒரு கிட்னி என்று சொன்னது கொஞ்சம் குழப்பமாக இருந்தது எனக்கு. அடுத்த பத்து நிமிடத்தில் மருத்துவமனை வாசலில் தாமரை நின்று கொண்டிருந்தாள்.
பொதுவாகவே மருத்துவமனை செல்வது தாமரைக்குப் பிடிக்காது. அதிலும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மருத்துவமனையில் இருந்தால் அவள் வருவதே இல்லை.
மருத்துவமனைகளில் நிலவும் ஒருவிதமான கலவையான மருந்துகளின் மணம் தனக்கு வயிற்றுக் குமட்டலைத் தரும் என்றும், அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு உணவு சாப்பிட முடியாது என்றும் அடிக்கடி அவள் என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பாள்,
ஆனால் அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை என்றவுடன் அவள் ஓடி வந்தது போலிருந்தது எனக்கு.இந்த குடிகார மனுஷன் மேலே மட்டும் அப்படி என்ன கரிசனையோ என்று மனதுக்குள் திட்டியபடி நான் அவளை உள்ளே அழைத்துச் செல்ல.... அப்பா இப்போது படுக்கையில் அமர்ந்திருந்தார்.
"மாமா, டாக்டர் என்ன சொன்னாரு?" என்று அப்பாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு அனேகமாக வீட்டில் இடைநிறுத்தப்பட்டிருந்த உரையாடலை இருவரும் துவக்கியது போலிருந்தது எனக்கு.
பத்து மணிக்குத் தம்பி, அம்மாவைக் கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து விட்டான். அநேகமாகத் தாமரை தான் அம்மாவுக்குச் சொல்லி இருப்பாள். அம்மா நேராக அப்பாவிடம் சென்று அவரது படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.
''ஏங்க, காலைல ரொம்பக் குடிச்சீங்களா? ஏன் வயித்த வலிக்குது? மத்தியானம் என்னம்மா சாப்டாரு? ஏண்டா டாக்டர் என்ன சொன்னார்? ஊசி போட்டாங்களா? மாத்திரை எழுதிக் கொடுத்தாங்களா?'' என்று ஒரு சி.பி.ஐ அதிகாரி அளவுக்குக் கேள்வி கேட்ட அம்மாவை முறைத்தேன் நான்.
"போடா, தாமரையையும் கூட்டிட்டுப் போய் படுங்க, காலைல வரலாம்" என்று அம்மா சொல்லத் துவங்கியதும் அதற்காகவே காத்திருந்தவன் போல தாமரையைப் பார்த்தேன். அவளும் கிளம்புவதற்குத் தயாரானாள்.
முருகன் மருத்துவமனையில் வைத்திருந்த மீன் தொட்டியின் அருகே நின்று கொண்டு மீன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். வாடா கிளம்பலாம் என்று நான் அவனை வீட்டுக்குக் கூப்பிடவும்,
"அப்பா, இதுல இருக்குற Black Tiger" தாம்பா நான் கேட்டுக் கிட்டே இருக்கேன். எப்பப்பா வாங்கித் தருவீங்க? தாத்தா கூட்டிட்டுப் போய் வங்கித் தாரேன்னு சொன்னாருப்பா. அவரு எப்போ வீட்டுக்கு வருவாரு?" என்றான்.
நள்ளிரவில் ஒரு முறை அலைபேசியில் அம்மாவோடு உரையாடிக் கொண்டிருந்தாள் தாமரை. பேசி முடித்ததும் "என்ன எப்படி இருக்காராம்" என்றேன் நான்.
இப்போ வலி எதுவும் இல்லையாம், மாமா நல்லாத் தூங்கிக்கிட்டு இருக்காராம்" என்று சொல்லி விட்டு ஒரு பெருமூச்சு விட்டுப் படுத்துக் கொண்டாள் தாமரை.,
காலையில் கொஞ்சம் விரைவாகவே எழுந்து மருத்துவமனைக்குச் சென்றேன் நான். அதிக நடமாட்டம் இல்லாத அதிகாலைத் தெருவுக்குள் சூரியக் கதிர்கள் மட்டும் சுதந்திரமாய் படிந்திருந்தன. இளநீரை மிதிவண்டியில் கட்டி வீடிருக்கும் தெருவுக்குள் வருகிற அழுக்கு உடையணிந்த முதியவர் சாலையின் சந்திப்பில் நின்று இளநீரைக் கட்டிக் கொண்டிருந்தார்.
மருத்துவமனைக்குள் நுழைந்து அப்பா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு முன்னால் சென்ற போது.... அப்பாவின் குரல் காதில் விழுந்தது.
"இல்ல, மாரி, அவன் கிட்ட கடைசி வரைக்கும் அதச் சொல்லவே கூடாது, ஏன்னா, அது ஒரு பெரிய கொறையாவே போயிரும், தேவை இல்லாம அவனுக்குப் பயம் வரும், இது வரைக்கும் அவனுக்கு கிட்னி பிரச்சனை எதுவும் வரவே இல்லை, ஒரு வேளை அவனுக்கு இந்த ஆபரேஷன் பண்ணின விஷயம் இப்போத் தெரிஞ்சாக் கூட மனசளவுல எம்புள்ள உடைஞ்சு போயிருவான். நமக்கு ஏதோ கொறை இருக்குன்னு அவனுக்குத் மனசுல படக் கூடாதுன்னு தானே இந்த விஷயத்த நாம இவ்வளவு காலமா மறச்சோம்,. இப்போ திடுதிப்புன்னு அவன்கிட்டச் சொல்லப் போறேன்னு சொல்றியே...?!".
"இல்லங்க, உங்க மேலே அவனுக்கு வரவரப் பாசமே இல்லாமப் போகுது, நீங்க அந்தப் பய மேல எம்புட்டுப் பாசம் வச்சிருக்கீங்கன்னு இப்பவாவது அந்தப் பயலுக்குத் தெரியட்டும், ஒத்தக் கிட்னிய அந்தப் பயலுக்குக் குடுத்திட்டு நீங்க பட்ட பாடு எனக்குத் தானங்க தெரியும், அந்த வலி வேதனைலையும், நகண்டு நகண்டு போய் டாக்டர் கிட்ட நின்னு எம்புள்ளைக்கு ஒன்னும் ஆகாதுல்ல சார்னு நீங்க அழுத கண்ணீர் இந்தப் பயலுக்கு என்னங்க தெரியும், இந்தப் பய வளந்து செழிச்சது எல்லாம் நீங்க போட்ட பிச்ச தானங்க, நீங்க சொல்லக் கூடாதுன்னு சொன்ன சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு இவ்வளவு காலம் நான் பொறுமையா இருந்தது போதும்" என்று அம்மா விசும்பத் துவங்கி இருந்தாள்.
இந்த உரையாடலின் மையப் புள்ளியை நான் உணர்ந்து கொண்ட
போது மருத்துவர் சொன்ன ஒற்றைக் கிட்னி குழப்பம் என்னிடம் இல்லை, எனக்குள் அப்பாவைக் குறித்த இனம் புரியாத உணர்வுகள் சுற்றி அலையத் துவங்கி இருந்தன.
எனக்கு பள்ளிக் காலம் வரையில் நடந்த தொடர் சோதனைகளும், மருந்து மாத்திரைகளும் நினைவுக்கு வந்து போயின. என்னைச் சுற்றி அந்த அதிகாலையில் இருள் சூழத் தொடங்கி இருந்தது... எனக்குக் கீழே இருந்த மருத்துவமனைக் கட்டிடம் இன்னும் சிறிது நேரத்தில் இடிந்து விழும் போலிருந்தது....
எனக்கு அழ வேண்டும் போலிருந்தது, சத்தம் போட்டு அழுது விடுவேனோ என்று நான் அஞ்சினேன். மெல்ல அங்கிருந்து நகர்ந்து வெளியில் வந்தேன். விரைவாக வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனபோது தாமரை பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் செய்து கொண்டிருந்தாள்.
தாமரை என் முகத்தைப் பார்த்தாள். ''என்னங்க மாமா எப்டி இருக்காங்க? டாக்டர் எதுவும் பயப்படுற மாதிரி இல்லைன்னு சொன்னாராம், இன்னைக்கு மத்தியானம் வீட்டுக்குக் கூட்டிப் போகலாம்னு அத்தை சொன்னாங்க" என்றாள்.
நான் அமைதியாகவே இருந்தேன். பிறகு முருகனைப் பார்த்து, "முருகா இன்னைக்கு லீவு போட்ரலாம், தாத்தா கூட ஆஸ்பத்திரில இருந்துட்டு அப்புறமா நீ போய் அவர் கூட Black Tiger வாங்கிட்டு வா" என்றதும் என்னை முருகன் விநோதமாகப் பார்த்தான்.
நாங்கள் மீண்டும் மருத்துவமனைக்குள் நுழைந்து அப்பாவிடம் சென்ற போது சுவற்றில் யாரையோ..., ''இவர் நல்ல மேய்ப்பன்'' என்று எழுதிப் போட்டிருந்தார்கள்! எனக்கு அவர் கீழே நின்று கொண்டிருந்தது மாதிரித் தெரிந்தது,
"குடிக்கிறத விட்டிருங்க பெரியவரே" என்று அந்த இளம் மருத்துவர் அப்பாவுக்கு அறிவுரை சொல்லி விட்டு எங்களைப் பணம் கட்டுவதற்காகக் கீழ்த் தளத்திற்கு போகச் சொன்னார்.
அப்பா, படுக்கையில் இருந்து எழுந்து நின்றார். கீழே வைக்கப்பட்டிருந்த மருந்துக் குப்பி ஒன்று அவர் காலில் தட்டவும் கொஞ்சம் தடுமாறினார் அப்பா. எனது கைகளால் அப்பாவை அணைத்துப் பிடித்துக் கொண்டேன் நான்.
"மெதுவாப்பா" என்று சொல்லி விட்டுக் கீழே குனிந்தேன். அப்பா எனது கண்களில் இருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரைப் பார்த்து விட்டார்.
"ஏண்டா ஐயா, அதான் ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொன்னாரே" என்று சொல்லி விட்டு "இவன் என்ன சின்னப் புள்ள மாதிரி அழுதுகிட்டு…….., சொல்லு மாரி" என்றார்.
எதற்காகவோ ''அப்பா....'' என்று கத்தினான் முருகன். அந்தச் சொல் உலகில் உச்சரிக்கப்படும் மிக உன்னதமான சொற்களைப் போல என் காதுகளில் ஒலிக்கத் துவங்கியது.
அழுக்கு வேட்டியாலும், காய்கறிக் கூடைகளாலும் இத்தனை காலம் மறைக்கப்பட்டிருந்த எனக்கே எனக்கான அப்பாவை நான் கண்டு பிடித்துக் கொண்டேன்! அவரது காய்த்துப் போயிருந்த கைகளை நான் கொஞ்சம் இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்தேன்.
அப்பாவின் உடலில் மிக இன்றியமையாத பணியாற்றும் ஒரு பகுதி எனக்குள் பொருத்தப்பட்டிருப்பதை என் வாழ்க்கையின் மிகப் பெரிய வரமாக அந்தக் கணங்களில் நான் நம்பத் துவங்கினேன்.
தெரிந்து கொள்ள முடியாத பல தியாக வரலாறுகளைச் சுமந்து கொண்டு நம் கண் முன்னே நடமாடித் திரியும் நல்ல மேய்ப்பர்களை விடுத்து நாம் தான் பல நேரங்களில் கோவில்களுக்குள்ளே போய்க் கடவுளரைத் தேடித் திரிகிறோமோ... என்று தோன்றியது.
''எனக்கான உலகம் அப்பாவினால் எனக்கு வழங்கப்பட்ட ஒற்றைக் சிறுநீரகத்தின் அச்சில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது'' என்பதை நான் அறிவதற்குள் வீடு வந்து விட்டிருந்தது.
வாசித்ததில் ;
சுவாசித்தது... கண்களை குளமாக்கியது...
No comments:
Post a Comment