Wednesday, June 29, 2022

வேலுமணியை துரத்தும் லஞ்ச ஒழிப்பு துறை: அம்மா ஐ.ஏ.எஸ்., அகாடமியில் தொடர் விசாரணை.

 முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் நல்லறம் அறக்கட்டளை, கோவையில் நடத்தி வரும் அம்மா ஐ.ஏ.எஸ்., அகாடமியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி, வங்கி பரிவர்த்தனை நகல்களை பெற்றுச் சென்றனர்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த வேலுமணி, கோவையில் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் அமைக்க, மாநகராட்சி நிர்வாகத்திடம், 2018ல் வலியுறுத்தினார். அப்போது, ஆர்.எஸ்.புரம் ராமச்சந்திரா சாலையில் செயல்பட்ட சுகாதார ஆய்வாளர் அலுவலகம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டிருந்தது. அவ்வளாகத்தில் பயிற்சி மையம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.

ஆலயம் வெல்பேர் டிரஸ்ட், சாந்தி சோசியல் சர்வீஸ், கான்ட்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா ஆகிய அமைப்புகள் விருப்ப கடிதம் வழங்கின. தகுதியை ஆய்வு செய்து, ஆலயம் அறக்கட்டளையுடன் மாநகராட்சி ஒப்பந்தம் செய்தது. மாத வாடகையாக ரூ. 25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. பின், ஆலயம் அறக்கட்டளையும், முன்னாள் அமைச்சர் வேலுமணி சகோதரர் அன்பரசன் நடத்தும் நல்லறம் அறக்கட்டளையும் ஒப்பந்தம் செய்திருக்கின்றன.

கடந்த, 2019 பிப்., 3ல் இம்மையம் செயல்பட துவங்கியது. மாணவ மாணவியருக்கு இலவசமாக ஐ.ஏ.எஸ்., பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு படித்த இரு மாணவர்கள், சமீபத்தில் நடந்த ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்று, அகில இந்திய அளவில் ரேங்க் பெற்றிருந்தனர்.


latest tamil news




இச்சூழலில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கோவையில் செயல்படும் அம்மா ஐ.ஏ.எஸ்., அகாடமிக்கு சென்று, கடந்த இரு நாட்களாக விசாரித்தனர். பயிற்சி பெறும் மாணவ மாணவியர் பட்டியல், கற்றுத்தரும் பேராசிரியர்கள் யார் யார், வினாத்தாள் நகல்கள் மற்றும் அகாடமி துவங்கியதில் இருந்து இன்று வரை வங்கி பரிவர்த்தனை நகல் ஆகியவற்றை பெற்றுள்ளனர்.

அகாடமியின் வரவு - செலவு விபரங்கள் மற்றும் மாநகராட்சிக்கும், நல்லறம் அறக்கட்டளைக்கும் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்த விபரங்களை சேகரித்து சென்றுள்ளனர். இது, வேலுமணி மற்றும் அ.தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


காரணம் என்ன?


வேலுமணி அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தை பயன்படுத்தி, மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தை தனது சகோதரர் நடத்தும் மையத்துக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இத்தகைய விசாரணை லஞ்ச ஒழிப்பு துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நல்லறம் அறக்கட்டளை சேர்மன் அன்பரசனிடம் கேட்டதற்கு, ''அம்மா ஐ.ஏ.எஸ்., அகாடமியில் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி கொடுக்கிறோம். மையத்தின் செயல்பாடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறை விசாரித்துச் சென்றுள்ளனர்,'' என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...