ரஷ்யாவில் மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர் விழாவில் தமிழகக் கலையான பரதத்தை நடிகை பத்மினியும், ராகினியும் ஆடிமுடித்த போது பெரும் வரவேற்பு.
முதல்பரிசும் கிடைத்து அவர்கள் தமிழகம் திரும்பியதும் அவர்களுக்குப் பாராட்டு விழாவை நடத்தியது தென்னிந்திய நடிகர் சஙகம்.
விழா நடைபெற்றது சென்னை வாணி மஹாலில். நடந்த தினம் 22.10.1957.
அமைச்சர் சி.சுப்பிரமணியம், மு.வரதராசன், ஜெமினி எஸ்.எஸ்.வாசன், இயக்குநர் கே.சுப்பிரமணியம், டி.கே.சண்முகம் என்று பலர் கலந்து கொண்ட விழாவில் நடிகர் சங்கச் செயலாளராக இருந்த எம்.ஜி.ஆரின் பேச்சு பெரிதும் கவனிக்கப்பட்டது.
“சில பத்திரிகைகள் கலைஞர்களைப் பற்றித் தவறான செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு, அதன் விளைவாக மக்களிடையே வேறுபட்ட கருத்துக்களைப் பரப்புவது அடியோடு தவிர்க்கப்பட வேண்டும்’’ என்றார் எம்.ஜி.ஆர்.
நன்றியுரை சொல்ல வந்த பத்மினி பணிவுடன் சொன்னார்.
“கலையுலகில் பல்லாண்டுகளாத் தொண்டாற்றிய பெரியோர்கள் பலர் ஒன்று திரண்ட உன்னதமான அமைப்பு தென்னிந்திய நடிகர் சங்கம். அந்தப் பெருமை படைத்த நடிகர் சங்கத்தின் சாதாரண அங்கத்தினர் நாங்கள்.
எங்களை விட அனுபவமும் ஆற்றலும் மிகுந்த பல கலைச்செல்வர்களின் ஒன்றுபட்ட சக்தியான நடிகர் சங்கம் தன் சிறு குழந்தைகளை இன்று பாராட்டியது. போற்றிப் புகழ்ந்தது.
உலகமே ஒன்று சேர்ந்து புகழ்ந்தபோதிலும் தாயின் புகழுக்கும், பாராட்டுக்கும் தனிப்பட்ட மதிப்பும், சிறப்பும் உண்டு அல்லவா? சங்கத்தாய் தன் இளங்குழந்தைகளுக்கு இன்று தானே மாலைசூட்டிப் போற்றிப் புகழ்ந்து பூரித்திருக்கிறாள்.
குழந்தைகள் தாயின் முக மலர்ச்சியைக் கண்டும், தங்களுக்குக் கிடைத்த சிறப்பைக் கண்டும் உள்ளம் பூரித்து நிற்கின்றன’’ என்று பேசிய பத்மினி நிறைவாக இன்னொன்றையும் சொன்னார்.
“சில பத்திரிகைகளில் நான் பேசியதாக வெளிவந்துள்ள ஆதாரமற்ற செய்திகளைப் பற்றிப் பொது மக்களிடையே வீண் விவாதம் நடந்து வருவதைக் குறிப்பிட்டு, சில விளக்கங்களைக் கூற விரும்புகிறேன்.
‘நாங்கள் மலையாளத்துக்குச் சொந்தமா? தமிழ்நாட்டுக்குச் சொந்தமா? எங்களுக்குக் கிடைத்த வெற்றி கேரளத்தைச் சேர்ந்ததா? தமிழகத்திற்குச் சேர்ந்ததா? என்பவை போன்ற தேவையற்ற விவாதங்களை பத்திரிகைகள் மக்களிடையே எழுப்பியுள்ளன.
எங்களைப் பொருத்தவரை “கேரளத் தாயால் ஈன்றெடுக்கப்பட்டு, தமிழ்த் தாயால் வளர்க்கப்பட்டு, கலைத் தாயினிடத்தில் ஒப்படைக்கப்பட்டவர்கள் நாங்கள்” என்றே கூற விரும்புகிறேன்.’’
பத்மினியின் அன்றையப் பேச்சுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. பத்மினியும், ராகினியும் பாராட்டுப் பெற்றபோது உடனிருந்தவர் அவர்களுடைய தாயாரான சரஸ்வதி அம்மாள்.
‘நடிகன் குரல்’- நவம்பர் 1957 இதழிலிருந்து…
#
இன்னும் அரசியல், சமூகம், திரைப்படம், இலக்கியம், பண்பாடு என்று தமிழ் மக்களுக்கான பார்வையோடு நம்மைச் சுற்றி நிகழும் பதிவுகளைக் காண,
கீழுள்ள இணைய வாசலைச் சொடுக்குங்கள்
தாய் – உலகத் தமிழர் மனதின் குரல்.
No comments:
Post a Comment