அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகி விட்டதால், பொதுக்குழு கூடும் வரை, தலைமை நிர்வாகிகள் கட்சியை வழிநடத்துவது என்றும், பொதுக்குழுவை வேறு இடத்தில் நடத்துவது என்றும், நேற்று நடந்த, அக்கட்சி தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் 11ம் தேதி பொதுக்குழு நடக்கும் என, கட்சி அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார். அதை பன்னீர்செல்வம் தரப்பினர் ஏற்க மறுத்தனர். 'பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உண்டு; அவைத் தலைவருக்கு கிடையாது. மேலும் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில், அவைத் தலைவர் தேர்வு செய்ததும் செல்லாது' என, பன்னீர்செல்வம் தரப்பினர் கூறுகின்றனர்.இதற்கு மறுப்பு தெரிவித்த பழனிசாமி தரப்பினர், 23ம் தேதி பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வும் ரத்தாகி விட்டது.
எனவே, பன்னீர்செல்வம் பதவி காலாவதியாகி விட்டதாக அறிவித்தனர். இந்த சூழ்நிலையில், நேற்று சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கும் என, தலைமை நிலையச் செயலர் என்ற முறையில் பழனிசாமி அறிவித்தார். 'இது, விதிமீறிய செயல்; அதில் எடுக்கப்படும் முடிவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது' என, பன்னீர்செல்வம் தெரிவித்தார்.ஆனால், திட்டமிட்டபடி நேற்று காலை 10:00 மணிக்கு, கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பழனிசாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம், 11:30 மணிக்கு நிறைவடைந்தது. ஆலோசனை குறித்து, மாநில நிர்வாகிகள் கூறியதாவது:பொதுக்குழுக் கூட்டத்தை, வரும் 11ம் தேதி சிறப்பாக நடத்துவது; இதுவரை நடந்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்திற்கு பதிலாக, வேறு பகுதியில் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் மற்றும் அவருக்கு ஆதரவு அளித்து வருவோரின் பதவிகளை பறிப்பது குறித்தும், பொதுச் செயலராக பழனிசாமியை தேர்வு செய்வது குறித்தும் முடிவெடுக்கப்பட உள்ளது. பொதுக்குழுவுக்கு பன்னீர்செல்வம் தரப்பினரை, சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதால், பொதுக்குழு கூடும் வரை, தலைமை நிர்வாகிகள் கட்சியை வழிநடத்துவது என்றும், தலைமை நிர்வாகிகள் ஒப்புதலோடு, 11ம் தேதி பொதுக்குழுவை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தை ஏற்றே, ஒற்றைத் தலைமைப் பதவிக்கு வர விரும்புவதாக, பழனிசாமி தெரிவித்தார். மேலும் பன்னீர்செல்வம் தரப்பு, அதற்கு போடும் முட்டுக்கட்டைகள் குறித்தும் விவரித்தார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பழனிசாமி தரப்பினர் கூட்டம் நடத்தியதை தொடர்ந்து, அவசரமாக சென்னை திரும்பினார் பன்னீர்செல்வம்.பொதுக்குழு பரபரப்புக்கு பின் பன்னீர்செல்வம், தன் சொந்த மாவட்டமான தேனிக்கு, நேற்று முன்தினம் சென்றார்.இந்நிலையில், நேற்று திடீரென நிர்வாகிகள் கூட்டத்தை, பழனிசாமி தரப்பினர் கூட்டினர். ஒருங்கிணைப்பாளரான தன் ஒப்புதல் இல்லாமல் கூட்டம் நடத்தப்படுவதை தொடர்ந்து, தேனியில் இருந்து அவசரமாக சென்னை திரும்பினார், பன்னீர்செல்வம்மேலும், பழனிசாமி தரப்பினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலடி தருவது தொடர்பாக, சென்னையில் நேற்று மாலை தன் வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடத்த, மூன்று இடங்களை, நேற்று முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.பழனிசாமி தரப்பினர், வரும் 11ம் தேதி, பொதுக்குழுவை கூட்ட உள்ளனர். கடந்த 23ம் தேதி, சென்னை வானகரத்தில் உள்ள, ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. ஜெயலலிதா காலத்தில் இருந்து, அந்த மண்டபத்தில் தான் பொதுக்குழு நடக்கும். ஆனால், அடுத்த மாதம் 11ம் தேதி நடக்கும் பொதுக்குழுவை, வேறு இடத்தில் நடத்த, பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது.அதற்காக, சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லுாரி மைதானம், கந்தன்சாவடி ஒய்.எம்.சி.ஏ., மைதானம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வி.ஜி.பி., மைதானம் ஆகியவற்றை, பழனிசாமி ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், மூர்த்தி ஆகியோர் ஆதரவாளர்கள் அதிகம் வந்திருந்தனர். சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள், அவரை வாழ்த்தியும், பழனிசாமியை வாழ்த்தியும் கோஷங்கள் எழுப்பினர்.பழனிசாமி வந்தபோது, கட்சி வளாகத்தில் கூடியிருந்தவர்கள், அவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பியபடி முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, தொண்டர் ஒருவர், மகளிர் அணியினர் வைத்திருந்த பேனரில் பன்னீர்செல்வம் படத்தை, கத்தியால் கிழித்தெறிந்தார்.
No comments:
Post a Comment