அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை கோஷம் ஓங்கி ஒலித்து வருகிறது. அதனால், சில வரலாற்றுச் செய்திகளை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்... 'முதல்வராக, நிதி அமைச்சராக பதவி வகித்தேன்' என்கிறார் பன்னீர்செல்வம். அதை நான் மறுக்கவும் இல்லை; மறக்கவும் இல்லை. ஆனால், இந்தப் பதவிகளில் பன்னீர் இருந்த போது, ஜெயலலிதா கட்சியிலும், ஆட்சியிலும் கோலோச்சிக் கொண்டிருந்தார் என்பதை, அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஜெயலலிதா மறைவுக்குப்பின், முதல்வராக பதவியேற்ற பழனிசாமி சந்தித்த பிரச்னைகள் ஏராளம். ஏன்... பன்னீராலும், அவருக்கு ஆரம்பத்தில் குடைச்சல் இருந்ததை யாராலும் மறுக்க முடியுமா? அதன்பின், ஆட்சியை கலைக்க, தி.மு.க.,வினரும், தினகரனும் போட்ட திட்டங்களை எல்லாம் முறியடித்து, நான்காண்டு ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பெருமை பழனிசாமியையே சாரும்.
பன்னீர்செல்வத்திற்கு, பழைய வரலாற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்... கடந்த, 1947ல் ராபின்சன்பூங்காவில், தி.மு.க., ஆரம்பிக்கப்பட்ட போது, ஐம்பெரும் தலைவர்களில் கருணாநிதி இல்லை. அண்ணாதுரை முதல்வரான போது, அவரது அமைச்சரவையில் கருணாநிதிக்கு போக்குவரத்து மற்றும் பொதுப்பணித் துறை தான் ஒதுக்கப்பட்டது; நிதி அமைச்சராக நெடுஞ்செழியன் தான் பதவி வகித்தார். அண்ணாதுரை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றபோது, முதல்வர் பொறுப்பை நெடுஞ்செழியனிடம் தான் கொடுத்துச்சென்றார்.
மொத்தத்தில், அண்ணாதுரை பதவிக்காலத்தில், அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் நெடுஞ்செழியன். அப்படிப்பட்ட நெடுஞ்செழியனால், அண்ணாதுரை மறைவுக்கு பின், தி.மு.க.,வையும், தி.மு.க., அரசையும் கைப்பற்ற முடியவில்லை. ஆளுமை திறன் அதிகமாக இருந்ததால், கருணாநிதி தான் கட்சியையும், ஆட்சியையும் தன் வசப்படுத்தினார்.
இதே நிலையில் தான் தற்போது பழனிசாமியும் உள்ளார். ஜெயலலிதா இருந்த போது, பன்னீர்செல்வத்திற்கு பல முக்கியமான பதவிகள் கொடுத்தாலும், இரண்டாம் இடத்தில் அவர் இருந்தாலும், அவரது மறைவுக்குப் பின் ஆளுமைதிறன் அதிகமாக பெற்ற பழனிசாமியே, கட்சியையும், ஆட்சியையும் நல்லமுறையில் வழிநடத்தி சென்றுள்ளார்.
தி.மு.க.,வின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த அன்பழகன், எப்படி கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்தாரோ, அதேபோல பழனிசாமிக்கு வழிவிட்டு, இரண்டாம் கட்ட தலைவராக பொறுப்பேற்று, கட்சி நல்ல முறையில் செயல்பட பன்னீர்செல்வம் உதவ வேண்டும். இல்லையேல், கட்சியில் குழப்பங்கள் அதிகரித்து, அதை பா.ஜ., கட்சி தங்களுக்கு சாதகமாக்கி விடும். மக்களும் பா.ஜ.,விற்கு தங்களின் ஆதரவை வழங்கி விடுவர். உஷாராகுங்க... அ.தி.மு.க., தலைவர்களே!
No comments:
Post a Comment