பொதுக் குழுவில் நடந்த களேபரங்களுக்கு பின், புதுடில்லி வந்த பன்னீர்செல்வத்திடம், அ.தி.மு.க.,வின் ஆதரவை கோரி, சென்னைக்கு வரப் போவதாக, ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு கூறியுள்ளதால், எதிர்பார்ப்பும் பரபரப்பும் எகிறியுள்ளது.மகனும், தேனி எம்.பி.,யுமான ரவீந்திரநாத், முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன், மனோஜ்பாண்டியன் ஆகியோருடன், டில்லி வந்து சேர்ந்த பன்னீர்செல்வம், தமிழ்நாடு இல்லத்தில் தங்குவதை தவிர்த்து விட்டார்; தனியார் ஹோட்டலில் தங்கினார்.
முயற்சி
காலையில், தே.ஜ., கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிக்கு கிளம்பினார். பார்லிமென்டில் நடந்த அந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடி உட்பட பல தலைவர்களும், தீவிர கவனமாக இருந்தனர். பிரதமரின் கவனத்தை ஈர்க்கும்
வகையில், பன்னீர்செல்வம் வணக்கம் செய்தார். பழனிசாமியின் பிரதிநிதியாக கலந்து கொண்ட தம்பிதுரை, அருகிலேயே இருந்தாலும், அவரை பன்னீர்செல்வம் கண்டுகொள்ளவில்லை. பின்னர் தன் மதிய உணவை முடித்துக் கொண்டு, பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றை தொடர்பு கொள்ளும் முயற்சிகளில் இறங்கினார், பன்னீர்செல்வம்.
அரசியல் திருப்பங்கள்
பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கான ஆயத்தப் பணிகளில் இருப்பதாக அவரது அலுவலகம் தரப்பில் கூறப்பட்டு விட்டது.உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மட்டுமாவது சந்திக்க வேண்டுமென்று கூறி, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, அமைச்சர் பியுஷ் கோயல் தரப்பு மூலமாக தீவிரமாக முயன்றாலும், பணிச்சுமை காரணமாக, உள்துறை அமைச்சரையும் சந்திக்க முடியாமல் போனது.
மேலும், மஹாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் திருப்பங்களை, டில்லியில் உள்ள பா.ஜ., தலைவர்கள் கவனித்தபடி உள்ளனர். இதனால், பன்னீர்செல்வம் தரப்பால், தனக்கான பிரச்னைகளை விளக்க முடியாமல் போய் விட்டது.இதற்கிடையில், தலைமைத் தேர்தல் ஆணையத்தை அணுகி, புகார் மனு அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அது உண்மை அல்ல என தெரிய வந்துள்ளது.
தம்பிதுரை தடாலடி; பன்னீர் தரப்பு பதிலடி!
டில்லிக்கு பன்னீர்செல்வம் கிளம்பிய உடனே, பழனிசாமியின் பிரதிநிதியாக தம்பி துரையும் அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று முன்தினமே திரவுபதி முர்முவை சந்தித்தார். அப்போதே, அ.தி.மு.க.,வின் ஆதரவை தருவதாக பழனிசாமி தம்மிடம் கூறியனுப்பியதாக தம்பிதுரை உறுதியளித்துள்ளார்.மேலும், நேற்று வேட்புமனு தாக்கலுக்கு பின் பேட்டியளித்த தம்பித்துரை, ''அ.தி.மு.க.,வின் பிரதிநிதியாக, இந்த நிகழ்வில் பங்கேற்றது நான் தான்,'' என அழுத்தம் திருத்தமாக கூறினார்.
இதை அறிந்த பன்னீர்செல்வம் தரப்பும் தயாரானது. உடனடியாக சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டு, திரவுபதி முர்முவுக்கு தகவல் தரப்பட்டது. ஆனால், தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள பன்னீர்செல்வத்தை சந்திக்க, திரவுபதி முர்மு தரப்பு தயக்கம் காட்டியது.இதை, அதிரடியாக மாற்று யோசனை செய்யப்பட்டு, நார்த் அவென்யூவில் உள்ள ரவீந்திரநாத் வீட்டில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு பன்னீர்செல்வம் போய் சேர்ந்தவுடன், நேரில் வந்த ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு சந்தித்து, ஆதரவளிக்கும்படி கோரினார். இந்த சந்திப்பின்போது, மத்திய இணை அமைச்சர்கள் முருகன், அர்ஜுன் ராம் மெஹ்வால் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஜனாதிபதி தேர்தலில், தே.ஜ., கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். வேட்புமனு நிகழ்வில் பங்கேற்ற என்னை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். அ.தி.மு.க., சார்பில் திரவுபதி முர்முவுக்கு முழு அளவில் மனப்பூர்வமான ஆதரவு தரப்படும். அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அனைவருமே, இவரை ஆதரிப்பர். மேலும், ஆதரவு கோரி, விரைவில் சென்னைக்கு வருவதாக கூறியுள்ளார். - டில்லி நிருபர்களிடம் பன்னீர்செல்வம்
No comments:
Post a Comment