Wednesday, June 29, 2022

சைக்கிள்...

 *மிதிவண்டி ஐம்பது வருடங்களுக்கு முன் கனவில் வலம் வரும் வண்டி இது. எவ்வளவு ஆசைகள் கனவுகள் லட்சியங்கள். மிதிவண்டி வைத்திருந்தாலே அவ்வளவு மதிப்பு. மலரும் நினைவலைகளுடன் உங்கள் கணேசன் உஷா*

மலரும் நினைவுகள்...
சைக்கிள்...
1985 ஆண்டுக்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில் தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.
கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA... அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில் தான் போகும். எப்பவாவது கடந்து செல்லும் Rajdoot Jawa மற்றும் Yazdi.. எங்கேயோ கேட்கும் புல்லட் சத்தம்...
இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள்.
ராலி, ஹெர்குலஸ், அட்லஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" .
அடுத்து... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் சைக்கிள் ஹெர்குலஸ் வைத்திருப்பார்கள்.
மளிகை கடையில் லோடு அடிக்க பெரும்பாலும் ஹெர்குலஸ் தான்
குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுதுப் பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு.
இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு"விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுதுப் பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள்.
நாம் மன்னார்குடியில் படிக்கும் காலத்தில் வெள்ளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் பேருந்து போக்குவரத்து தடைபடும் கட்டுமாவடி வரை ( ஓலா ) சைக்கிள் சேவைக்கு ஐந்து ரூபாய் கொடுத்து சென்ற வரலாறும் உண்டு,
அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்..
இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வது போல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள்.
1979 ஆண்டுக்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும். ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BARக்கு கீழே நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.
முதலில் குரங்கு பெடலில் ஓட்டக் கற்று பிறகு பாரில் அமர்ந்து ஓட்டி சீட்டில் அமர்ந்து செல்லும் சுகமே தனி தான்,
சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும் போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.
சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் பிற்காலத்தில் ஒழிக்கப்பட்டது.
அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது. மட்கார்டுகளில் பின்புறம் வெள்ளை பெயிண்ட் அடித்து பெயர் எழுத தனியே ஆட்கள் வருவார்கள்.. அதில் வித விதமாக படங்கள் இயற்கை காட்சிகளை வரைந்து வைத்திருப்பார்கள்..
ஹேண்டில் பார்களில் ஸ்பிரிங் வைத்த கலர் கலர் கைகள் மாட்டி பந்தா காட்டி செல்வார்கள்..
குழந்தைகளை கூட்டி செல்ல ஒயர் கூடைகள் எக்ஸ்ட்ராவா மாட்டியிருப்பார்கள்.. அதை வாங்க வசதி இல்லாதவர்கள் பாரில் துண்டை மொத்தமாக சுற்றி உட்கார வைத்துச் செல்வார்கள்...
இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள்களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி... இன்னும் அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம்.
எப்படி ஆயினும் பழைய நினைவுகள் மட்டும் தான் நமக்கு ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தருகின்றன...
*இது தான் அப்பட்டமான உண்மை.
May be an image of text that says 'சைக்கிள். ஒருமணி நேரத்துக்கு ஒரு ரூபாய் வாடகைக்கெடுத்து ஒட்டியிருக்கீங்களா.'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...