தி.மு.க., இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியின் காலில், 'டொபுக்'கென விழுந்து வணங்கிய தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்ற பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சமீபத்தில் டெல்டா மாவட்டத்தில் உதயநிதி சுற்றுப்பயணம் சென்றார். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா, பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க, தஞ்சாவூருக்கு சென்ற உதயநிதிக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர். அப்போது தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன், மேயர் அங்கி அணிந்திருந்த நிலையில், திடீரென உதயநிதி காலில் 'டொபுக்'கென விழுந்து வணங்கினார். இந்த வீடியோ பதிவு, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. \மேயர் பதவி மற்றும் மேயர் நாற்காலி, அங்கி உடை, செங்கோல் போன்றவைக்கு பராரம்பரிய மரியாதையும், மரபும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேயர் அங்கி உடை அணிந்த வண்ணம், உதயநிதி காலில் விழுந்து மேயர் வணங்கியதால், வணக்கத்துக்குரிய மேயரின் மாண்புக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியில், மேயர் காலில் விழும் கலாசாராத்தை ஊக்குவிக்கலாமா; இது தான் சமூக நீதியா; சமத்துவமா என்ற கேள்விகளை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பலரும் தி.மு.க.,வை வறுத்தெடுக்கின்றனர்.மேலும், மேயர் ராமநாதன் உடனே தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment