முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ- - ஜியோ' போராட்டத்தை கையாண்ட விதம், ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த செய்த தாமதம், எட்டு ஆண்டுகளாக தொடக்க கல்வித் துறையில் ஆசிரியர்கள் நியமனமே இல்லாத நிலை.
ஆசிரியர்கள் பெற்று வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியத்தை நிறுத்தியது போன்றவை, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதன் விளைவு தி.மு.க., ஆதரவு நிலை உருவானது. எதிர்பார்த்தது போல, தி.மு.க.,வும் ஆட்சிக்கு வந்தது.'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அ.தி.மு.க., ஆட்சியில் இழந்த உரிமைகள், ஏற்பட்ட பாதிப்புகள் நீக்கப்படும்' என, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், ௧௦௦ சதவீதம் நம்பினர். ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை. 'ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம்' என்றனர். தற்போது, 'அதற்கு வாய்ப்பே இல்லை'
என்கின்றனர். அரசு பள்ளிகளில், ஐந்து லட்சம் மாணவர்களுக்கு மேல் கூடுதலாக சேர்ந்துள்ளனர். அவர்களின் கல்வியை மேம்படுத்த போதுமான ஆசிரியர்களை புதிதாக நியமித்திருக்க வேண்டும். கடந்த கல்வியாண்டு முழுதும் ஆசிரியர் நியமனத்தை பற்றியே சிந்திக்காமல், தற்போது, 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க உள்ளனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை, அ.தி.மு.க., அரசு ஓராண்டிற்கு மட்டுமே நிறுத்தி வைத்தது; தி.மு.க., அரசோ நிரந்தரமாக நிறுத்தி விட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசும், அகவிலைப்படியை உயர்த்துவது நடைமுறை; ஆனால், இப்போது அதற்கு மாறாக, மவுனம் காக்கிறது. மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அறிவித்து,
ஆறு மாதங்களாகியும், தமிழக அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. மொத்தத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் தவிடு பொடியாகி விட்டன. தி.மு.க., ஆட்சியின் மீதான நம்பிக்கை சிதறடிக்கப்பட்டு உள்ளது; அவர்களின் குமுறல், அடுத்த தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுவர்.
No comments:
Post a Comment