உலகில் ஜனநாயக நாடு, ராணுவ ஆட்சி நடக்கும் நாடு, முடியாட்சி நாடு என, எந்த நாடாக இருந்தாலும், அரசியல் கொலைகள் நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. சில தினங்களுக்கு முன், ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே
சுட்டுக் கொல்லப்பட்டார். உலகிலேயே துப்பாக்கி வைத்திருப்பதற்கு, மிக கடுமையான சட்டங்கள் உள்ள நாடு ஜப்பான். முன்னாள் பிரதமர் என்ற அடிப்படையில், ஷின்சோ அபேக்கு கடுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. அதையும் மீறி, அவரை படுகொலை செய்துள்ளனர். நம் நாட்டிலும் மஹாத்மா காந்தி, இந்திரா, ராஜிவ் உட்பட சிலர், அரசியல் அடிப்படையில் கொலை செய்யப்பட்டு உள்ளனர். எந்த பிரச்னைக்கும் கொலை ஒரு தீர்வாகாது. சமீப காலமாக, நம் நாட்டின் பிரதமர் மோடிக்கும், அச்சுறுத்தல் வந்த வண்ணம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, பல கோடி ரூபாய் செலவில், பாதுகாப்பு வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில், பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.வெடிகுண்டு தாக்குதல், கண்ணிவெடி தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். ஏ.கே.47 துப்பாக்கியால் சுட்டாலும் குண்டுகள் வாகனத்தை துளைத்து விட முடியாது. இருந்தாலும், எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று கணிக்க முடியாது. இதைத்தான், ராஜிவ் படுகொலையிலும், இந்திரா கொலையிலும் நாம் பார்க்க நேரிட்டது. எனவே, பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குறைகள் இல்லாமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment