இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மாணவர்கள், மொபைல் போன் என்ற மாயைக்கு அடிமையாகி உள்ளனர். பாடப் புத்தகங்களை மாணவர்கள் வாசிக்கும் நிலைமை மோசமாக உள்ளது.
இந்த நிலைமையை மாற்றுவது குறித்து, பெற்றோரும், ஆசிரியர்களும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் அனைவருக்கும், வாசிப்பு பயிற்சி அளிக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கவில்லை எனில், எளிதான பாடங்களிலேயே அவர்கள் தோல்வி அடையும் சூழல் உருவாகி விடும். கடந்த கல்வியாண்டில் நடந்த பொதுத் தேர்வில், ௪௭ ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்ததற்கு, அவர்களின் வாசிப்புத் திறன் குறைவே முதன்மையான காரணம்.எனவே, மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த, செய்தித்தாள்களை படிக்கும்படி அறிவுறுத்தலாம். பள்ளி வகுப்பறைகளிலோ அல்லது இறைவணக்க நிகழ்ச்சிகளின் போதோ, செய்தித் தாள்களில் உள்ள நல்ல செய்திகளை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவரை வாசிக்கும்படி சொல்லி, மற்றவர்களை அதை கேட்க வைக்கலாம்.
அவ்வாறு வாசிக்கும் போது, போதுமான இடைவெளி விட்டு, நிறுத்தல் குறிகளுடன் வாசிக்கச் செய்தால், மாணவர்களுக்கு அதில் ஒரு இன்பம் தோன்றும். அந்த ஆர்வமே, படிப்பின் மீது மாணவர்களை இழுக்கக்கூடிய ஒரு காந்த மாகும். எந்த சமூகம் வாசிப்பை நேசிக்கிறதோ, அது தான் உயர்ந்த சமூகம். இப்படி நம் மாணவர்களுக்கு, நல்ல செய்திகளை கற்பிக்காமல் போனோமேயானால், எதிர்கால சந்ததியினர் புத்தகத்தை விட்டு வெகு துாரம் சென்று
விடுவர். குழந்தைகளுக்கு நாம் நல்ல புத்தகங்களை கொடுக்க வேண்டும். பள்ளிகளில் நுாலகங்களை ஏற்படுத்த வேண்டும்; அவற்றில் நல்ல செய்தித்தாள்களை வாங்கிப் போட வேண்டும். இவ்வாறு செய்தால், எதிர்கால சந்ததி ஏற்றமிகு சந்ததியாக இருக்கும் என்பதில் கடுகளவும் மாற்றமில்லை.
No comments:
Post a Comment