Wednesday, August 17, 2022

பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது!: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு.

 ஜூலை 11 அ.தி.மு.க., பொதுக்குழுவும், பழனிசாமி பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால், பன்னீர்செல்வம் கை ஓங்கியுள்ளது. தீர்ப்பை வரவேற்று, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அ.தி.மு.க., நிர்வாகம், பழனிசாமி, பன்னீர்செல்வம்,

அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி இருந்தனர். ஆட்சியில் இருந்த வரை, பிரச்னை இல்லாமல் சென்றது.சட்டசபை தேர்தலுக்கு பின், பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே அதிகார மோதல் உருவானது.

கட்சி அதிகாரத்தை முழுமையாக கைப்பற்ற நினைத்த பழனிசாமி தரப்பு, பொதுக்குழுக் கூட்டத்தை, ஜூலை 11ல் கூட்டியது. அதற்கு தடை விதிக்கக் கோரி, பன்னீர்செல்வமும், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.ஆனால், திட்டமிட்டபடி பொதுக்குழுவை கூட்டிய பழனிசாமி அணியினர், கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமியை தேர்வு செய்தனர். ஒருங்கிணைப்பாளராக இருந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களையும், கட்சியில் இருந்து நீக்கினர்.அதற்கு பதிலடியாக பன்னீர்செல்வம் தரப்பும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.

ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்குவதாக பன்னீர்செல்வம் அறிவித்தார். புதிய இணை ஒருங்கிணைப்பாளராக, தன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை நியமித்தார். மேலும், பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலர்களை நீக்கி விட்டு, புதிய மாவட்ட செயலர்களையும் நியமித்தார்.


இருவருக்கும் இடையே இந்த சண்டை நீடித்த நிலையில், பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய பன்னீர்செல்வம் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அதை எதிர்த்து, பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றம் சென்றார். விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றமே விசாரிக்கும் என கூறி திருப்பி அனுப்பியது. இதன் தொடர்ச்சியாக, அந்த மனுக்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தன.பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், அ.தி.மு.க., நிர்வாகிகள் சார்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத், பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் வாதம், 11ம் தேதி நிறைவடைந்தது. வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதி தள்ளி வைத்திருந்தார். நீதிமன்ற வழக்கு காரணமாக, கட்சி இடைக்கால பொதுச் செயலராக, தன் ஆதரவாளர்களால் தேர்வு செய்யப்பட்டாலும், அதை முழுமையாக ஏற்று செயல்பட முடியாத நிலையில் பழனிசாமி இருந்தார்.அதேபோல், பன்னீர்செல்வமும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருந்தார். இரு தரப்பினரும், நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடர முடியும் என்ற நிலை இருந்ததால், தீர்ப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.


எதிர்பார்ப்பு


இந்த சூழ்நிலையில், இன்று காலை 11:30 மணிக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியதாவது:ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அ.தி.மு.க.,வில் ஜூன் 23க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும். தனித்தனியே பொதுக்குழு, செயற்குழுவை கூட்டக்கூடாது. பொதுக்குழுவை கூட்ட தனி ஆணையரை நியமிக்க வேண்டும். ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் செல்லாது. பழனிசாமியை பொது செயலாளராக தேர்வு செய்தது செல்லாது. என தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பை வரவேற்று பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பன்னீர்செல்வம், ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளார்.

இந்த முடிவுகளை அடுத்து எடப்பாடி பழனிசாமி, இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...