Wednesday, August 3, 2022

இலவசங்கள் தேவையா? பொருளாதார பிரச்னை என நீதிபதிகள் கருத்து.

தேர்தல்களின்போது மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதாக அரசியல் கட்சிகள் அறிவிப்பது, 'நாட்டின் தீவிர பொருளாதார பிரச்னை' என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கும்படி,

மத்திய அரசு, நிடி ஆயோக் உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது. இந்தப் பிரச்னையில் அரசுக்கு ஆலோசனை வழங்க, ஒரு குழு அமைக்கப்படும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இலவசங்கள் தேவையா?

தேர்தல்களின்போது ஓட்டு வாங்குவதற்காக, அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவச அறிவிப்புகளை வெளியிடுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார். உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடந்தபோது, இந்த வழக்கை அவர் தாக்கல் செய்தார்.
மனுவில் அவர் கூறியுள்ளதாவது:தேர்தலின்போது மக்களுக்கு பல்வேறு இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன. இது, ஓட்டு போடுவதற்காக மக்களுக்கு தரப்படும் லஞ்சமாகவே பார்க்க வேண்டும். இது, நம் ஜனநாயக தேர்தல் நடைமுறையை சீர்குலைப்பதாக உள்ளது.


மிகப் பெரும் பிரச்னை



மேலும், இந்த இலவசங்கள் பொது நிதியில் இருந்தே தரப்படுகின்றன. இதனால், மக்களின் தலையில் அதிக சுமை ஏறுகிறது.இவ்வாறு இலவச அறிவிப்புகளை வெளியிடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, கட்சி சின்னத்தை முடக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இதற்கு தேவையான சட்டத்தை உருவாக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹீமா கோஹ்லி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. முன்னர் நடந்த விசாரணைகளின்போது, இது மிகப் பெரும் பிரச்னை என அமர்வு பலமுறை கூறியுள்ளது.
'கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை' என தேர்தல் கமிஷன் கூறியது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என அமர்வு கேட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''இலவச அறிவிப்புகள், இலவச பொருட்கள் வினியோகம் ஆகியவை, நாட்டின் எதிர்கால பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை
ஏற்படுத்தி விடும். ''மேலும் தங்களுடைய தேர்வை சுயமாக முடிவு செய்யும் வாக்காளர்களின் உரிமையும் பறிக்கப்படுகிறது,'' என குறிப்பிட்டார்.இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியதாவது:பல மாநிலங்கள் கடும் கடனில் உள்ள நிலையிலும், ஆட்சியை பிடிக்க அல்லது தக்கவைக்க இலவசங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதற்காகும் செலவு மக்கள் மீதே சுமத்தப்படுகிறது என்று இங்கு தெரிவிக்கப்பட்டது.


சரியான முடிவு



கட்சிகள் இலவசப் பொருட்களை அறிவிப்பது, மிகப் பெரிய பொருளாதார பிரச்னை என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பிரச்னை குறித்து, எந்த அரசியல் கட்சியும் பார்லிமென்டில் பேசாது. அனைவருக்கும் இலவசங்கள் தேவை.
இந்த விவகாரத்தில் ஒரு சரியான முடிவு எடுக்க வேண்டியது அவசியமாகும். இலவசங்களை எப்படி தவிர்ப்பது, தடுப்பது என்பது குறித்து, மத்திய அரசு, நிடி ஆயோக், நிதி கமிஷன் ஆகியவை ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும். அவை, பரிந்துரைகளை அளிக்க வேண்டும்.
இதில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷனும், மத்திய அரசும் ஒதுங்கி கொள்ளக் கூடாது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, ஆலோசனைகளை வழங்க வேண்டும்.இந்த விவகாரத்தில், மத்திய அரசு, நிடி ஆயோக், தேர்தல் கமிஷன், நிதி கமிஷன், ரிசர்வ் வங்கி, எதிர்க்கட்சிகள் என அனைவரும் தங்களுடைய கருத்தை, ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும்.அவற்றின் அடிப்படையில், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்க, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு ஒன்றை உருவாக்க உத்தரவிடப்படும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.விசாரணை இன்றும் தொடர்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...