மூத்த அரசியல்வாதியும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனிடம், 'அ.தி.மு.க., ஆட்சியின் போது, வைகை அணையை துார் வார வேண்டும்' என, விவசாயிகள் முன்வைத்த கோரிக்கை பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, 'வெளிநாடுகளில் அணைகளை துார் வாருவது கிடையாது' என காரணம் கூறி, விவசாயிகளின் கோரிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
அணைகளை துார்வார வெளிநாடுகளை உதாரண மாக காட்டும் துரைமுருகன், தமிழகத்தில் அரசு நிர்வாக விஷயங்கள் அனைத்தும், வெளிநாடுகளை போல இருக்கிறது என்று சொல்வாரா... அதற்கு உதாரணம் காட்டுவாரா?சில நாட்களுக்கு முன், முல்லை பெரியாறு அணை நீரை, கேரள பகுதிக்கு அதிகமாக திறந்தது பற்றி கேட்ட போதும், ஏதோ சாக்குபோக்கு சொல்லி சமாளித்தார்.நீர் சேமிப்பு மற்றும் விவசாயிகள் நலன் சார்ந்த விஷயங்களில், இவர் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போடுவதால், தென்மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த தமிழக மக்களும், இவர் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். இது ஒரு புறமிருக்க, 'முல்லை பெரியாறு அணையிலிருந்து கேரளா செல்லும் நீரை தடுக்க, மேலும் ஒரு சுரங்கப் பாதை அமைப்பது மிகவும் அவசியம்' என, தமிழக அரசுக்கு, 'தினமலர்' நாளிதழ் வாயிலாக, பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துரைமுருகன் இதற்கும் ஏதாவது காரணம் சொல்லி முட்டுக்கட்டை போடாமல் இருக்க வேண்டும். சிலைகள், நினைவிடங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வதில், தீவிர ஆர்வம் காட்டும் முதல்வர் ஸ்டாலின், விவசாயிகள், பொதுமக்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்யும், அத்தியாவசியமான திட்டங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். வைகை அணை உள்ளிட்ட தமிழக அணைகளை துார் வாருவது, முல்லை பெரியாறு அணையில் மேலும் ஒரு சுரங்கப் பாதை அமைப்பது உள்ளிட்ட தண்ணீர் சேமிப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்து, உடனடியாக அவற்றை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment