நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை, வீட்டுக்கு வீடு, கொடியேற்றி கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தோம்.
சும்மா கிடைத்து விடவில்லை சுதந்திரம்... எத்தனை எத்தனை போராட்டங்கள், எவ்வளவு உயிர் பலிகள் என, நெடிய வரலாறு கொண்டது, நம் விடுதலை போர்.சுதந்திரத்துக்கு பின், உலக நாடுகள் மெச்சும்படி, பல்வேறு துறைகளில் வல்லரசுகளுக்கு இணையாக வளர்ச்சி பெற்றுள்ளோம். உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும், இந்தியர்களுக்கு தனி மதிப்பு இருக்கிறது. இதற்கு காரணம்... நம் முன்னோர் வகுத்து கொடுத்த பழக்க வழக்கங்கள், பண்பாடு என்பதில் சந்தேகமில்லை!
கல்வி, அறிவியல், தொழில் புரட்சி போன்றவற்றில், நாம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறோம். ஆனால், தனி மனித ஒழுக்கம் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. வெளிநாட்டு மோகத்தில், நம் தனித்தன்மையை இழந்து வருகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நம்மை விட சிறிய, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் கூட, சுத்தம், சுகாதாரம் பேணுவதிலும், விதிமுறைகளை கடைப்பிடிப்பதிலும் முன்னிலை வகிக்கும் போது, வளர்ந்த நாடான, நாம் ஏன் அதை செய்யக்கூடாது. வீடு திருந்தினால், தெரு மாறும்; தெருக்கள் மாறினால், ஊர் வளப்படும்; ஊர் வளர்ந்தால், நாடு வளரும் என்று சொல்வதை கேட்டுஇருக்கிறோம் அல்லவா!
இது, நம் நாடு; அதை மதித்து, அதன் உயர்வுக்கு நம்மால் இயன்ற சின்ன சின்ன விஷயங்களை கடைப்பிடித்தால் போதுமே! இதற்காக கத்தி, துப்பாக்கி ஏந்தி போர் புரிய வேண்டாம்.
* கண்ட இடத்தில் எச்சில் துப்பாமல் இருப்பது
* தெருவில் குப்பை கொட்டாமல் இருப்பது
* லஞ்சம், ஊழலுக்கு துணை போகாமல் இருப்பது
* தான் வாழ அடுத்தவரை கெடுக்காமல் இருப்பது
* இலவசங்களுக்கு ஆசைப்பட்டு, ஓட்டுரிமையை விட்டுக் கொடுப்பது
* பொது இடத்தை ஆக்கிரமிப்பது
* பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை கட்டவிழ்த்து விடுவது
* சாலை விதிமுறைகளை பின்பற்றாதது
இதுபோன்ற, மனது வைத்தால் செய்யக்கூடிய விஷயங்களை, நம் கடமையாக கொள்வோம் என்று உறுதி எடுத்துக் கொண்டாலே, நாடு சுபிட்சமடையும். அதை விட்டு, 'தண்ணீர் இல்லை, காற்று மாசு, எதிலும் கலப்படம், அரசு சரியில்லை, ஆட்சியர் சரி இல்லை...' என்று குறை கூறுவதால் யாருக்கு என்ன பலன்?
நாம் சரியாக இருப்போம்; மற்றவர்களும் சரியாக இருப்பர். இதைச் செய்தாலே நாட்டுக்கு நாம் செய்த சிறு துளி நன்மையாக அமையும்.சுதந்திர நுாற்றாண்டு விழா கொண்டாடுவதற்குள், இந்த மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துவோம் என்று, இந்த நன்னாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.
வாழ்க சுதந்திரம்; வளரட்டும் பாரதம்!
No comments:
Post a Comment