Monday, August 22, 2022

வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு.

 வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.

வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு
கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.
சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.
அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்கும். வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்தபின் அதனால் மங்கள ஸ்நானம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி விடும்.
சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தோறும் தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்துவிடும்.
அதிகக் கடன்பட்டவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்துவர உடனே கடன் தீரும். சுத்தமான, உண்மையான வலம்புரிச் சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறமுடியும்.
பூஜை அறையில் ஒரு தட்டில் அரிசி பரப்பி அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வந்தால் உணவுப் பஞ்சமே வராது. புதுமனை செல்பவர்கள் சிறப்பாய் வாழ்ந்திட, கண் திருஷ்டி, வியாபார சரிவு, கடன்கள், கல்வியில் கவனமின்மை, தொழில் கூடங்களில் தொய்வு, எதிரிகளால் தொல்லை, திருமணத்தடை போன்ற எண்ணற்ற பிரச்னைகளை தீர்க்க வல்லது வலம்புரிச் சங்கு. வாஸ்து குறைகள் முற்றிலும் நீங்க, நினைத்த காரியம் வெற்றி உண்டாக, ஆவி பிரச்சனைகள் தீர வலம்புரிச் சங்கு வழிபாடு உதவும்.
இதை இல்லத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும். குடும்பம் சுபிட்சம் பெற வலம்புரிச் சங்கை வாங்கி பயன்பெற விரும்புவோர் அவரவர் சக்திக்கேற்ப அளவுகள் கொண்ட வலம்புரிச் சங்கினை தேர்வு செய்து கொள்ளலாம்,
வலம்புரிச் சங்கு இருக்கும் இடத்தில், எந்தத் தீய சக்தியும் நம்மை அணுகாது! பிரபஞ்சமே நாதத்தால் எழுந்ததுதான். ஓம்கார பிரணவ மந்திரத்தால்தான் சகல லோகங்களும் இயங்குகிறது என்பதே வேதத்தின் சாரம். பிரணவ மந்திரத்தின் அடையாளமாகப் புனிதப்பொருளாக வலம்புரிச் சங்கு கருதப்படுகிறது. பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் வெளியே வந்தபோது கூடவே தோன்றியது இந்தச் சங்கு. இதை எடுத்து தமது கரத்தில் தாங்கிக்கொண்டார் திருமால்.
‘பாஞ்சஜன்யம்’ என்னும் அந்தச் சங்கு உயிர்களின் சலனங்களை எடுத்துக்கூறும் சின்னமாக இருந்து வருகிறது. கடலில் தோன்றும் சங்கு கிளிஞ்சலின் பாதுகாப்புக் கவசமாக விளங்குகிறது. சாதாரணமாக இடப்புறமாக வளைந்திருக்கும் சங்குகளே அதிகம் விளையும். ஆயிரம் இடம்புரிச் சங்கில் ஒரே ஒரு வலம்புரிச் சங்குதான் இருக்கும். ஆயிரம் வலம்புரிச் சங்கில் ஒரே ஒரு ‘சலஞ்சலம்’ என்னும் விசேஷ சங்கு தோன்றும். ஆயிரமாயிரம் சலஞ்சலம் சங்குகளுக்கு இடையேதான் ஒரே ஒரு ‘பாஞ்சஜன்யம் சங்கு’ தோன்றும் என்பார்கள்.
வலம்புரிச் சங்கு
கடலில் பிறக்கும் ஒரு சங்கில் சுருண்டிருக்கும் வரிகள் வாய்ப் பகுதியில் ஆரம்பித்து வலதுபுறமாக சுழன்று முடிந்தால், அது வலம்புரிச் சங்கு. காதில் வைத்துக் கேட்டால் அது ‘ஓம்’ என்ற சப்தத்தை எழுப்பும். இதுவே அந்தச் சங்கு வழிபாட்டுக்குரியது என்பதைத் தெரிவித்து விடும். வலம்புரிச் சங்கு, ‘தட்சிணாவர்த்த சங்கம்’ என்றும் இடம்புரிச் சங்கு ‘வாமாவர்த்த சங்கம்’ என்றும் சொல்லப்படுகிறது.
தமக்கு வில்வித்தை கற்றுத்தந்த ‘சாந்தீபனி’ முனிவரின் மகனை மீட்க கடலில் வாழ்ந்த ‘பாஞ்சஜன்யன்’ என்ற அசுரனை ஸ்ரீகிருஷ்ணர் கொன்றார். சாகும் தருவாயில் கிருஷ்ணரைப் பணிந்த அந்த அரக்கனின் வேண்டுகோளின்படி, அவனது சாம்பலைத் திரட்டி சங்காக மாற்றி அவனது பெயராலேயே ஏந்திக்கொண்டார் என்று பாகவத புராணம் கூறுகிறது.
பூஜையில் ஒலிக்கவும், போரைத் தொடங்கவும், வெற்றியைப் பறைச்சாற்றவும், நல்லனவற்றின் வருகையை அறிவிக்கவும் ஆதிகாலம் தொட்டே சங்கு முழங்கப்பட்டு வந்துள்ளது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் ஐந்து விதமான சங்குகளைத் தாங்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
யுதிஷ்டிரர் (தர்மர்) ‘அனந்த விஜயம்’ எனும் ஒளிபொருந்திய சங்கையும், அர்ஜுனன் ‘தேவதத்தம்’ எனும் தேவ சங்கையும், பலவான் பீமன் ‘மகாசங்கம்’ எனும் பெரிய சங்கையும், நகுலன் ‘சுகோஷம்’ எனும் அதிர்ஷ்ட சங்கையும் சகாதேவன் ‘மணிபுஷ்பகம்’ எனும் சூட்சும சங்கையும் தாங்கி இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
திருமால்
சங்கு எப்போதுமே புனிதப்பொருளாக இருந்து வந்துள்ளதைத் தமிழ் இலக்கியங்களும் சொல்லி வந்துள்ளன. இது மகாலக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இது இருக்கும் இடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே இருக்காது. கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும். கடன் பிரச்சினை நீங்கும். வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.
சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம் என்பது ஐதீகம். இது இருக்கும் இடத்தில் உணவு பஞ்சமே வராது. வலம்புரிச் சங்கு பூஜை செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும்.
வளர்பிறை நாளில் வாங்கி வந்த வலம்புரிச் சங்கை, புனித நதி நீர் இருந்தால், அதில் நீராட்டி சுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் கலந்த தூய நீரில் கழுவலாம். பின்னர் மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் கொண்டு அலங்கரித்து ஒரு பீடத்தின் மீது வைக்க வேண்டும்.
வலம்புரிச் சங்கு
வலம்புரிச் சங்கை ஒருபோதும் கீழே வைக்கவே கூடாது. தூப தீபம் காட்டி, நெய் தீபமேற்றி, மந்திரங்கள் கூறி வணங்க வேண்டும். சங்குக்கு வெள்ளியாலான பூண் இடுவது விசேஷமானது. வலம்புரிச் சங்கை வணங்கும் எந்த இடத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள் என்பது நிச்சயம். தொழில் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடத்தில் இந்த சங்கு இருப்பது இன்னும் விஷேசமானது. சங்கு வைத்து செய்யப்படும் எந்தப் பூஜையும் நிறைவாகிறது. கணபதி, வலம்புரிச் சங்கு, சாளக்கிராமம், ருத்ராட்சம் இந்த நான்கும் இருக்கும் இடம் தெய்வ சந்நிதிக்கு நிகரானது என்பது ஆன்றோர்கள் வாக்கு.
ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தன்னஸ் சங்க ப்ரஜோதயாத்
என்பது சங்கின் காயத்ரி மந்திரம்.
நாம் தினமும் வழிபடும் பல கடவுளர்களின் கைகளில் ஓம்காரத்தை வெளிப்படுத்தும் சங்கு இருப்பதை நாம் காணலாம்.
பூவுலகம் தோன்றிய நாள் முதல் ஏற்பட்ட ஒலி அலைகளும், ஒளி அலைகளும், பஞ்ச பூதங்களின் மூலமாக தமது அதிர்வுகளை வெளிப்படுத்தியவாறு இருக்கின்றன. சாதாரணமாக நமக்கிருக்கும் கேட்கும் சக்தி மற்றும் பார்க்கும் திறம் ஆகியவற்றால் மட்டுமே அவற்றை அறிவது சிரமமான ஒன்று. இயற்கையில் உள்ள பல பொருட்களில், ஒலி அலைகளின் மூலாதாரமாக இருக்கும் ஓம்கார ஸ்வரூபம் தாமாக வெளிப்படுவதாக பல ஆன்மிக பெரியோர்கள் கண்டறிந்துள்ளார்கள். குறிப்பாக சங்கின் மூலம் ஓம்காரம் வெளிப்படுவதை பலரும் அறிந்துள்ளனர்.
பாற்கடலில் தோன்றியது
தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அந்த சங்குதான் மகாவிஷ்ணுவின் இடக்கையில் இருக்கிறது. அதுமட்டு மல்லாமல், ஒவ்வொரு தெய்வமும் தங்களுக்கென்று தனித்தனியாக சங்குகளை வைத் திருப்பதாக ஆகமங்களும், புராணங்களும் விளக்குகின்றன. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என்ற எட்டு வகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாக கூறப்படுகிறது. அதில் வலம்புரி சங்குக்கு மட்டும் விசேஷ சக்தி இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.
சங்கின் வகைகள்
வைணவ ஆகமங்களில் ஒன்றான வைகானஸ (விகனஸ) ஆகமத்தில், ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரிய சங்குகள் பற்றி குறிப்புகள் இருக்கின்றன. திருமலை வேங்கடவன் கை களில் மணி சங்கும், ரங்கநாத சுவாமியின் கைகளில் துவரி சங்கும், அனந்த பத்மநாப சுவாமியின் கைகளில் பாருத சங்கும், பார்த்த சாரதி பெருமாளின் கைகளில் வைபவ சங்கும், சுதர்ஸன ஆழ்வாரது கைகளில் பார் சங்கும், சவுரி ராஜ பெருமாள் கையில் துயிலா சங்கும், கலிய பெருமாளின் கரங்களில் வெண் சங்கும், ஸ்ரீநாராயண மூர்த்தியிடம் பூமா சங்கும் இருப்பதாக வைகானஸ ஆகமம் குறிப்பிடுகிறது.
வாஸ்து பரிகாரம்
பொதுவாக வீடுகளில் அமைந்திருக்கும் வாஸ்து குறைகளை நீக்குவதற்கு, மஞ்சள் கலந்த நீரில் துளசியை இட்டு சங்கு தீர்த்தமாக காலை நேரங்களில் தெளித்து விட்டால் அந்த குறைகள் நீங்குவதாக ஐதீகம். பழங்காலத்தில் மக்கள், செல்வ செழிப்போடு இருக்க வீடுகளின் தலை வாசலில் சங்கு பதித்து வைப்பது வழக்கம். அதாவது, ஐந்து வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு உரிய வசிய பூஜை செய்த வலம்புரி சங்கை, வீட்டின் கதவு நிலைக்கருகில் வாசல் படியில் பதித்து விடுவார்கள். அதன் மூலம் குறைகள் இல்லாத வாழ்க்கை அமைவதாக அவர்கள் நம்பினார்கள்.
கோவில் மணி
பெரும்பாலான கோவில்களில் மணி அடிப்பது மற்றும் சங்கு ஊதுவது போன்ற நடைமுறைகள் இருப்பதை கவனித்திருப்போம். சங்கு ஊதுவது என்பது தற்போதைய சூழலில், அபசகுனம் போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியிருக்கிறது. வேதங்களின் உட்பொருளான ஓம்கார மந்திரத்தை நினைவுபடுத்துவதாகவும், ‘அர்த்தம்’ எனப்படும் பொருள் வளத்தை தருவதாலும் கடவுளுக்கு முன்பு வைத்து வணங்கப் படும் தன்மையை சங்கு பெற்றிருக்கிறது. மேலும், மங்களகரமான பூஜை வேளைகளில் தேவையற்ற பேச்சுகள் காதில் விழுந்து பக்தி மனோபாவத்தை குறைத்து விடாதிருக்க சங்கநாதம் உதவி செய்கிறது. கோவில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது சங்கு ஊதுவது பலகாலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. மகாகவி பாரதியும் ‘சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே..’ என்று வெற்றியை பறை சாற்றும் பொருளான சங்கு பற்றி பாடுகிறார்.
கிருமிகளைக் கொல்லும்
சங்கிற்கு உடலை பாதிக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது என்று நம் முன்னோர் நம்பினார்கள். அதனால்தான் தீர்த்தம் சங்கில் தரப்படுவது விசேஷமாக கருதப்பட்டது. குழந்தைகளுக்கு அக்காலத்தில் மருந்தையும், பாலையும் சங்கில் ஊற்றி தரும் வழக்கம் நம் வீடுகளில் இருந்தது. சங்கநாதம் கேட்கும் இடங் களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். மேலும் பெண்கள் வளையல்கள் அணிவதை பார்த்திருப்போம். ‘வளை’ என்பது சங்கு என பொருள்படும். ஆரம்ப காலங்களில் சங்கின் மூலமாகத்தான் இது தயாரிக்கப்பட்டது. பின்னர் கண்ணாடி, தங்கம், வெள்ளி என உபயோக முறைகள் மாற்றப்பட்டுவிட்டன. சங்கு ஆபரணமாக பயன்படுத்தப்பட்டதோடு, ஆயுர்வேத வைத்தியத்தில் பஸ்பமாகவும் பயன்படுகிறது.
அட்சய திருதியை
மக்களிடையே பிரபலமாக இருக்கும் அட்சய திருதியை நாளன்று, வலம்புரி சங்குடன் தங்கம் வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்தால் ஐஸ்வர்ய வளம் நாளும் வளரும் என்பது வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாகும். வலம்புரி சங்கை வெறுமனே ஒரு தட்டில் வைக்கக்கூடாது என்பதால், அதற்கு பொருத்தமான அளவில் வெள்ளிக் கவசம் செய்து பொருத்திய பின்னர் வீட்டுக்கு கொண்டு வந்து, அதற்கான ‘ஸ்டாண்டில்’ வைப்பது அவசியம். அதற்கு தினமும் பசும்பால் அபிஷேகம் செய்து, பூஜை செய்து வந்தால் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தரமாக தங்கியிருப்பாள் என்பது உறுதி.
வீடுகளில் செய்யப்படும் வலம்புரிச்சங்கு பூஜையும், அதன் பலன்களும்..
* வீட்டில் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் வலம்புரி சங்கானது, குபேரனது அருளை பெற்றுத் தருவதோடு, மகாலட்சுமியின் நித்திய வாசத்தையும் அருளக்கூடியது.
* வலம்புரி சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்வது, சகல தோஷ நிவாரணம் ஆகும். வலம்புரி தீர்த்தம் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தாலும் கடும் தோஷங்கள் விலகும்.
* கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று இறைவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படும். அப்போது 108 சங்கு அபிஷேக பூஜைக்கு நடுவில் வலம்புரிச்சங்கு உருவத்தில் குபேரன் எழுந்தருளுவதாக ஐதீகம்.
* கண்களுக்கு புலப்படாத வாஸ்து தோஷம் இருக்கும் வீட்டில், துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில் வீடுகளில் தெளித்து வந்தால் நன்மை உண்டாகும்.
* ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள், செவ்வாய் தோறும் வலம்புரி சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்து வந்தால் திருமண பாக்கியம் கைகூடும்.
* கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வலம்புரி சங்குக்கு, பவுர்ணமி தோறும் குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பு. 16 எண்ணிக்கையில் வலம்புரி சங்கு கோலமிட்டு, நடுவில் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்வது நல்லது.
* சுத்தமாகவும், கச்சிதமாகவும் பூஜிக்கப்படும் வலம்புரி சங்கு உள்ள வீட்டிற்கு, பில்லி சூனிய பாதிப்புகள் நெருங்காது.
* வீட்டில் உள்ள பூஜை அறையில், சிறு தட்டில் பச்சரிசி, அதில் சங்கை வைத்து, பூ சூட்டி பொட்டு வைத்து வணங்கி வந்தால் உணவு பஞ்சம் இருக்காது.
முச்சங்கு ஒலி
பழங்காலங்களில் ஒரு மனிதருடைய வாழ்வில், மூன்று முறை சங்கநாதம் ஒலிக்கப்பட்டது. அதன் மூலமாக எழக்கூடிய சுப நாதமானது, சம்பந்தப்பட்ட மனிதருக்கு நற்பலன்களை உண்டாக்குவதாக நம்பப்பட்டது. தற்போது நடைமுறையில் அவ்வளவாக இல்லாத அந்த பழக்கத்தில் பல்வேறு உள்ளர்த்தங்கள் இருக்கின்றன. ஒரு மனிதரின் வாழ்வில் ஒலிக்கப்பட்ட மூன்று சங்கநாதங்கள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
முதல் சங்கு
‘முதற்சங்கம் அமுதூட்டும், நடுச்சங்கம் நல்வழி காட்டும், கடைச்சங்கம் காதவழிபோம்’ என்று நமது முன்னோர்களால் குறிப்பிடப்பட்டது. முதல் சங்கு என்பது ஒரு குழந்தை பிறந்தவுடன் ஒலிக்கப்படுவதோடு, முதன்முதலாக சங்கில் பாலூட்டுவதும் மரபாக இருந்து வந்தது. அதிலும் வலம்புரி சங்கு மூலம் பாலூட்டப் படும் ஆண் குழந்தை வீரமும், நன்னெறியும் கொண்டதாக வளருவதாக கருதப்பட்டது.
இரண்டாவது சங்கு
இரண்டாவது சங்கு என்பது ஒருவரது திருமணத்தின்போது ஒலிக்கப்படும். அதாவது இரண்டு உள்ளங்களை ஒருங்கிணைக்கும் சம்பிரதாய நெறிமுறையாக இருந்து வந்தது. காதில் சங்கை வைத்து கேட்டால் மட்டுமே ஓம்கார ஓசை கேட்கும். அதேபோல ஒருவருக்கு ஒருவர் அவரவர்களுடைய கருத்துக்கு மதிப்பு கொடுத்து கேட்பதன் வாயிலாக, பிரச்சினைகளை காதோடு காது வைத்ததுபோல சரி செய்து கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில் சங்கநாதம் ஒலிக்கப்பட்டது.
மூன்றாவது சங்கு
இது ஒருவரது மரணத்தின் பின்பு ஒலிக்கப்படுவதாகும். இறந்தவர், இறைவனுக்கு சமமாக சொல்லப்பட்டது. இனம், மதம், உயர்வு, தாழ்வு, ஜாதி வேற்றுமைகள் ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்டு எல்லோரும் கூடும் இடங்கள் மூன்று உண்டு. அவை ஆலயம், பள்ளிக்கூடம், மயானம் ஆகியவை. ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் இறுதியில் அனைவரும் ஒன்றுகூடும் மயான பூமிக்கு அவர் கொண்டுவரப் படும்போது, புனிதம் பெற்றவராக வரவேண்டும் என்ற கருத்தில் ஒலிக்கப்படுவது மூன்றாவது சங்கநாதம் ஆகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...