Monday, August 1, 2022

ஜானகியின் பாடும் முறையைப் பார்த்துப் பார்த்து வியந்தவர் இளையராஜா.

 எஸ்.ஜானகி அம்மா பற்றி எழுதும் பலரும், 1957 ல் அறிமுகமான அவர், இளையராஜா வந்து 1976ல் வாய்ப்புக் கொடுக்கும் வரை, பி.சுசீலாவைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார் என்பதைப் போலவே எழுதுகிறார்கள். அன்பர்களே, நாம் வெறும் தமிழ் திரையிசை மட்டுமே கேட்பவர்கள். அவரோ தென்னிந்திய திரையிசையின் மகாராணி!

பி.சுசீலா இங்கே கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த அறுபது எழுபதுகளில், எஸ்.ஜானகி கன்னட திரையிசையின் முடிசூடா இராணியாக விளங்கிக் கொண்டிருந்தார். அறுபதுகளின் தொடக்கத்திலிருந்து எண்பதுகளின் பாதி வரை, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் கன்னட திரையிசையின் உச்ச நட்சத்திரப் பாடகி அவர் தான். கன்னட கோகிலே என்ற பட்டத்திற்கு அவரே மிகப் பொருத்தமானவராகத் திகழ்ந்தார் என்றால் மிகையில்லை. திரையிசையின் மிக சவாலான பாடல்களைக் கன்னடத்தில் தான் ஜானகி பாடியிருக்கிறார். ஹேமாவதியில் அவர் பாடிய 'ஷிவ ஷிவ என்னத நாளிகயேகே' பாடல் இன்றளவும் மிகவும் சவாலான பாடலாகக் கருதப்படுகிறது.
நேற்று Devanurpudur DrAnbuSelvan மாப்ஸ் அதியற்புதமான ஒரு பாடலை நினைவூட்டினார். இராகவேந்திரர் கடைசியாக இயற்றிய பாடல் என்று கருதப்படும் 'இந்து எனகே கோவிந்தா நின்னய பாதார விந்தவா தோறோ முகுந்தனே முகுந்தனே' பாடல் தான் அது. ராஜன் நாகேந்த்ரா (நமது விஸ்வநாதன் இராமமூர்த்தியைப் போன்றவர்கள்) இசையில் எஸ்.ஜானகி பாடியிருக்கும் இதே பாடலை பி.பிஸ்ரீநிவாஸ் பாடியிருக்கிறார். பாலமுரளி கிருஷ்ணாவும் பாடியிருக்கிறார். வழக்கமாக பைரவி இராகத்தில் பாடப்படும் இதே பாடலை முகாரி இராகத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும் பாடியிருக்கிறார். ஒவ்வொன்றும் அதனதன் வகையில் அற்புதம் தான். ஆனால் எஸ்.ஜானகி பாடியிருக்கும் விதம் தன்னிகரற்றது. அந்தப் பாடல் கோரி நிற்கும் உணர்ச்சிகளை எல்லாம் உள்ளார்ந்து உணர்ந்து உவந்து பாடி உருக்கியிருக்கிறார் அந்த மதுரக் குரலி!
மாபெரும் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் ஆஸ்தான பாடகியாக விளங்கியவர் ஜானகி. ஜி.கே.வெங்கேடேஷூமே கூட அபூர்வமான குரலுக்குச் சொந்தக்காரர் தான். 'கவிக்குயில்' படத்தில் 'உதயம் வருகின்றதே மலர்கள் மலர்கின்றதே' பாடலில் 'மானத்திலே மீனிருக்க மதுரையிலே நானிருக்க' என்று ஒரு தொகையறா வரும். இளையராஜா, தனது குருநாதரைப் பாட வைத்து மகிழ்ந்த தொகையறா இது.
ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்த காலத்தில் ஜானகியின் பாடும் முறையைப் பார்த்துப் பார்த்து வியந்தவர் இளையராஜா. பாடலுக்கேற்ற உணர்ச்சிகளைக் கச்சிதமாகப் பாடுவதில் மட்டுமல்ல, எந்த வகையான பாடலைக் கொடுத்தாலும் மிகச் சிறப்பாக அதன் தன்மை குறையாது பாடுவதில் அவர் வல்லவராக இருப்பதையும் கண்டு வியந்தவர் அவர். அந்தக் காலகட்டத்தில் தமிழ் திரையிசையைப் பொறுத்தவரை மெலடி என்றால் பி.சுசீலா, டப்பாங்குத்துக்கும் காபரேவுக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி, குழந்தைக் குரலுக்கு எம்.எஸ்.இராஜேஸ்வரி என்று இன்னார் இன்னதைப் பாடினால் தான் இனிக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. அது, சுசீலாவின் இடத்தை வாணி ஜெயராம் நிரப்பிக் கொண்டிருந்த காலகட்டமும் கூட.
இங்கே இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து எண்பத்தைந்து வரை மலையாள திரையிசையிலும் ஜானகி தான் நம்பர் ஒன். அவரை தங்களுடையவராகவே மலையாளிகள் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் அப்போது.
'மச்சானைப் பார்த்தீங்களா' பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி தான் பாட வேண்டும் என்று அடம்பிடித்தாராம் பஞ்சு. ஆனால், இளையராஜாவுக்கு அதில் இஷ்டமில்லை. தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பில் முத்திரை பதிக்க ஜானகியின் குரலே பொருத்தமாக இருக்கும் என்று உறுதியாக நின்றிருக்கிறார். அவரது அந்த உறுதி எப்பேர்ப்பட்ட பொன்மயமான வெற்றியைப் பெற்றுத் தந்தது என்பதை உலகம் அறியும்.
அதற்கப்புறம், மெலடிக்கு இவர், காபரேவுக்கு இவர், கண்ணீர்ப் பாட்டுக்கு இவர், குழந்தைக் குரலுக்கு இவர் என்ற வழக்கமெல்லாம் தமிழ் திரையிசையில் ஒரேயடியாய் உடைந்து போனது. எப்பேர்ப்பட்ட பாணியில் அமைந்த பாடலானாலும் சரி, அதன் தன்மை மாறாமல் ஒற்றை ஆளாய் பாடி அசத்தத் தொடங்கினார் எஸ்.ஜானகி. நேத்து இராத்திரி யம்மாவில் தான் எத்தனை விதமான யம்மாக்கள்!!!!!! அதுவரை மார்க்கெட்டில் இருந்த அத்தனை பெரும்பாடகிகளும் சற்று ஒதுங்கியிருக்கும்படி ஆனது தமிழ் திரையிசையில். ஒரு பதினைந்து ஆண்டுகள் தமிழிலே எஸ்.ஜானகி மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்தார். இளம் குயிலான சித்ராவின் பன்னீர்க் குரல் போட்டியில் இருந்தாலும் ஜானகியின் பன்முகத்தன்மையை அதனால் ஈடுசெய்யவே முடிந்ததில்லை.
முதல் முதலாகத் தொப்புளில் பம்பரம் விட்டது விஜயகாந்த் என்று தான் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவருக்குப் பல காலத்திற்கும் முன்னரே சரிதாவின் தொப்புளில் பம்பரம் விட்ட பெருமை லிப்பாலஜியாரைத் தான் சேரும். கமலஹாசன் இந்தச் சாதனையை நிகழ்த்தியது மரோசரித்தாவின் பதகாரேயிலக்கு பாடலில். அதே பாடலில் ஜானகியும் ஒரு சாதனையை நிகழ்த்தியிருப்பார். பாடலின் இடையே பற்பல வகையான சிரிப்புகளை அலையலையாக மிதக்க விட்டிருப்பார். கேட்டுப் பாருங்கள், அந்தச் சிரிப்புகள் எத்தனை பரவசமானவை என விளங்கும். இதே பாடல் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது பாட அழைக்கப்பட்டவர் சித்ரா. அந்தச் சிரிப்புக்களை ஈடுசெய்ய, தான் எந்த அளவிற்குச் சிரமப்பட வேண்டியிருந்தது என்று சித்ராவே சொல்லியிருக்கிறார்.
பாக்யத லக்ஷ்மீ பாரம்மா புரந்தரதாஸ கீர்த்தனையை ஜானகி பாடுவதைக் கேட்டதும் பண்டிட் பிம் சேன் ஜோஷி இப்படிச் சொன்னாராம், 'என்ன மேடம், நாங்கள் பாடி மெருகேற்ற இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்ட பாடலை அநாயசமாக ஐந்தே நிமிடங்களில் அற்புதமாகப் பாடி அசத்திவிட்டீர்கள்!'. அது தான் ஜானகியின் மேதைமை!
பாடியழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் பாடலைக் காதல் தோல்வியின் காவியச் சோகத்துடன் ஏசுதாஸ் பாடியிருக்கிறார். இதே பாடல் மெட்டு மலையாளத்திலும் உண்டு. தேனும் வயம்பும் நாவில் தூவும் வானம்பாடி என்று தொடங்கும் அந்தப் பாடலை ஏசுதாஸூம் பாடியிருக்கிறார். ஜானகியும் பாடியிருக்கிறார். ஜானகி பாடும் போது 'தாளம் பிடிக்குந்ந வாலாட்டிப் பட்சிகள் தாலிகெட்டிந் நல்லே நீயும் போகுந்நோ?'என்ற வரியில் வரும் 'கெட்டிந்நல்லே' யில் உள்ள ந்ந வுக்கு ஒரு அழுத்தம் தந்திருப்பார். அந்தச் சிற்றழுத்தம் அந்த அழகு மொழியைப் பேரழகாக்கிவிட்டிருக்கும். அப்படிப்பட்டது ஜானகியின் மொழி உச்சரிப்பு. மொழியின் உச்சரிப்பில் அத்தனை துல்லியமும் பிரதேசத் தன்மையும் இருக்கும் அவர் பாடும் பொழுது. ஹிந்தியில் கூட அவரே தென்னகத்திலிருந்து சென்று அதிகமான பாடல்களைப் பாடியவர். அவர் பாடிய ஒடிய மொழிப் பாடல்களும் கூட மிக அழகானவை.
பார்க்கப் போனால், அறுபதுகளிலும் எழுபதுகளின் முதற்பாதி வரையிலும் ஜானகியைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் தமிழ் திரையிசை தான் நிறைய இழந்து கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் அத்தி பூத்தாற் போல கிடைத்த ஒவ்வொரு பாடலையும் அவர் எந்த அளவிற்கு அபாரமாகப் பாடியிருக்கிறார் என்று எண்ணிப் பாருங்கள் விளங்கும். உலகறிந்த சிங்கார வேலனே தேவா, சின்னஞ்சிறிய வண்ணப்பறவை, இந்த மன்றத்தில் ஓடிவரும், பொன்னென்பேன் சிறு பூவென்பேன், மாம்பழத்து வண்டு, ஜல் ஜல் ஜல் எனும் சலங்கையொலி, என் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி இராதா, ஓஹோ எந்தன் பேபி, பொதிகை மலை உச்சியிலே போன்ற பாடல்களை மட்டுமல்ல புன்னகை படத்தில் இடம்பெற்ற ஆணையிட்டேன் நெருங்காதே அன்னையினம் பொறுக்காதே போன்ற பாடல்களையும் கூட மிக அபூர்வமான அழகுகளுடன் பாடியிருக்கிறார்.
பத்மவிபூஷன் விருதை அவர் மறுத்த பொழுது கூட, தன்னை மட்டுமல்ல, எம்.எஸ்.வி யைப் போன்ற மாபெரும் மேதைகளைக் கூட இந்திய அரசு தென்னாட்டவர் என்ற ஒரே காரணத்திற்காக ஓரவஞ்சனையாக நடத்தியதைச் சுட்டிக்காட்டியே மறுத்தார். எண்ணிப் பாருங்கள்.
இங்கே தென்னிந்தியா என்ற ஒன்று இருக்கிறது, இங்கே திறமைக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை, அதை அங்கீகரிக்கவில்லை என்று அழுத்தமாகச் சொன்னார். உலகறியச் சொன்னார்.
நாளைக்குத் தென்னிந்திய மாநிலங்களின் கூட்டமைப்பு அமையும் பொழுது நமது பெருமதிப்பிற்குரிய பழம்பெரும் திரைப்பாடகர்கள் பலரும் தம்மையறியாமல் தென்னாட்டின் ஒற்றுமைக்கு நல்லெண்ணத் தூதுவர்களாக விளங்கியிருப்பதை உணர்வோம். அந்தத் தூதுவர் பட்டியலில் எஸ்.ஜானகியும் வீற்றிருப்பார் இசையரசியாக!
நன்றி !!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...