நாட்டின் முதல் ஜனாதிபதியாக ராஜேந்திர பிரசாத் பதவி வகித்த போது, பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் கருத்தை துணிச்சலாக மறுத்து, தன்னை யாரும் ஆட்டிப் படைக்க முடியாது என, தனி முத்திரை பதித்தார்.
அதற்கு மாறாக, பிரதமராக இருந்த இந்திராவின், 'ரப்பர் ஸ்டாம்ப்'பாக, அவர் நீட்டிய ஆவணத்தில் கையெழுத்திட்டதால், ஜனாதிபதியாக இருந்த பக்ருதீன் அலி அகமதுவால், நாடு அவசரநிலை பிரகடனத்தை சந்தித்தது. ஒரு ஜனாதிபதி எப்படி எல்லாம் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்பதற்கு உதாரணமாக, பதவிக் காலத்தில் கொடுத்த பரிசுப் பொருட்களை லாரியில் அள்ளிச் சென்ற, பிரதிபா பாட்டீலையும் பார்த்து விட்டோம்.
அதேநேரத்தில், தன் பதவியின் வாயிலாக, எப்படி எல்லாம், நாட்டில் உள்ள இளைய சமுதாயத்தை தேசப்பற்று மிக்கவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும், நல்ல குடிமக்களாகவும் மாற்ற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர், தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம். அதனால் தான், இன்று வரை நம் அனைவராலும், 'மக்கள் ஜனாதிபதி' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
வேறு எந்த ஜனாதிபதியின் நினைவிடத்தையும், தினமும் பல நுாறு பேர் சென்று பார்வையிடுவதாக தெரியவில்லை. ஆனால், தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தை, தினமும் பல ஆயிரம் பேர் பார்வையிடுவதுடன், அங்கு அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். இதெல்லாம், ஜனாதிபதி பதவிக் காலத்தில் அவர் கடைப்பிடித்த எளிமை, நேர்மை மற்றும் புத்தி கூர்மைக்கு கிடைத்து வரும் பரிசு!
தன் பதவிக் காலத்தில் பெரும் பகுதியை, பள்ளி, கல்லுாரி மாணவர்களை சந்திப்பதில் செலவிட்டதுடன், அவர்களால் ஊழல் இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என விழிப்புணர்வும் செய்தார் கலாம். கடந்த ஐந்தாண்டுகளாக ஜனாதிபதி பதவியில் இருந்த ராம்நாத் கோவிந்த் பெயரை, நாட்டில் பலருக்கும் தெரியாது; அந்த வரிசையில் திரவுபதி முர்முவும் சேர்ந்து விடக்கூடாது. அப்துல் கலாம் வழியில் பயணித்து, மற்றொரு மக்கள் ஜனாதிபதி என்று பெயர் எடுக்க வேண்டும்.
பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரான திரவுபதி முர்மு, தங்கள் இன மக்களின் வாழ்க்கை தரம் உயரவும், தன்னால் இயன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். 'நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்; ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்' என்ற கலாமின் பொன்மொழிகளுக்கு ஏற்றவாறு, இந்திய மக்களின் மனதில் நீங்கா இடம் பெற வேண்டும்; சரித்திர சாதனை படைக்க வேண்டும் என்பதே எல்லாரின் எதிர்பார்ப்பு. புதிய ஜனாதிபதிக்கு மனமார்ந்த
வாழ்த்துகள்.
No comments:
Post a Comment