Monday, August 15, 2022

வங்கி கொள்ளையில் முக்கிய குற்றவாளி கைது- மீட்கப்பட்ட நகைகள் கண்காட்சி போல வைக்கப்பட்டிருந்தன .

 சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வங்கியின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து அடமானமாக பெற்றிருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதனால் வங்கி கிளை முன்பு வாடிக்கையாளர்கள் திரண்டனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இதே வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. முருகன், தனது 'ஜிம்' நண்பர்கள் சிலருடன் சேர்ந்து திட்டம் போட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது கண்டு பிடிக்கப்பட்டது. பெடரல் வங்கியில் கொள்ளை அடிப்பதற்கு முருகன் மூளையாக செயல்பட்டதும், கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து முருகனின் செல்போன் எண்ணை வைத்து துப்புதுலங்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அண்ணா நகர் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் முருகனையும் அவரது கூட்டாளிகளையும் பிடிக்க வலை விரித்தனர். இதில் முருகனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 20 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. பெடரல் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளில் இவர்கள் 3 பேரும் 20 கிலோ நகைகளை பங்கு போட்டு பிரித்து எடுத்துக்கொண்டது தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முருகனுடன் சேர்ந்து பல நாட்கள் திட்டம் போட்டதாகவும், பின்னரே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கைதான 3 பேரிடம் முருகன் பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்டி உள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கொள்ளை கும்பல் தலைவன் முருகன் தப்பி ஓடி தலைமறைவாக இருந்தார். அவரை பிடிக்க 4 தனிப்படைகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருந்தன. தப்பி ஓடிய முருகன் வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிக்கப்பட்டது. பக்கத்து மாநிலமான ஆந்திராவில் உள்ள தனது நண்பர்கள் வீட்டில் முருகன் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசாரில் ஒரு பிரிவினர் அங்கு விரைந்து சென்றனர். பெங்களூரு மற்றும் கொல்கத்தாவுக்கும் தனிப்படையினர் விரைந்தனர். இந்த நிலையில கும்பல் தலைவர் முருகன் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் அனைத்தும் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கொள்ளை வழக்கில் துப்பு துலக்கியது தொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்தார். கொள்ளையர்கள் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்றும், 10 நாட்களாக கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கொள்ளை சம்பவத்தில் 7 பேர் வரை ஈடுபட்டிருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நகைகளை பார்க்கும்போது நகை கண்காட்சி போல காட்சி அளித்தது. கொள்ளை கும்பல் தலைவன் முருகன், கூட்டாளிகளை போலீசார் விரைந்து செயல்பட்டு கைது செய்து உள்ளனர். கொள்ளை வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்த துணை கமிஷனர் விஜயகுமார் மற்றும் தனிப்படை போலீசாருக்கும் கமிஷனர் பாராட்டுக்களையும் தெரிவித்தார். நகைகள் கோர்ட்டு நடைமுறைக்கு பின்னர் வங்கியில் ஒப்படைக்கப்பட உள்ளது. கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து அடகு வைத்த நகைகள் உடனடியாக மீட்டு விட வேண்டும் என்பதில் வாடிக்கையாளர்கள் தீவிரமாக உள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...