அ.தி.மு.க., பொதுக்குழுவை எதிர்த்து, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட இருவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு, எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதால், முடிவு எப்படி இருக்குமோ என, பன்னீர்செல்வம் - பழனிசாமி தரப்பினர் 'திக் திக்' மனநிலையில் உள்ளனர்.
அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், ஜூலை 11ல் நடப்பதாக, பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு தடை விதிக்கக் கோரி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றம் விசாரிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, அந்த மனுக்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன. இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் வாதம், 12ம் தேதி நிறைவடைந்தது.
வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதி தள்ளி வைத்துள்ளார். நாளை அல்லது நாளை மறுதினம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. தீர்ப்பை பொறுத்தே, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, பழனிசாமி - பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளது.பன்னீர்செல்வம் தரப்பு, கட்சி தங்கள் வசம் வர, நீதிமன்றத்தை மட்டுமே நம்பியுள்ளனர். கட்சி இடைக்கால பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமி, அந்த மகிழ்ச்சியை கொண்டாட முடியாத நிலையில், வழக்கு தடையாக உள்ளது.
எனவே, தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்தால் மட்டுமே, கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் என்ற நிலையில், அவர் உள்ளார்.இதன் காரணமாக, இரு தரப்பினரும் தீர்ப்பு எப்போது வரும், எப்படி இருக்கும் என, 'திக் திக்' மனதோடு காத்திருக்கின்றனர். யாருக்கு சாதகமாக வந்தாலும், மற்றொரு தரப்பு மேல்முறையீடு செல்லும் என்பதால், பிரச்னை தற்போதைக்கு தீர வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதி.
No comments:
Post a Comment