இந்தியா :
5 ட்ரில்லியன் டாலரை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது சிலருக்குச் சாதாரணமான விசயமாகத் தோணலாம். ஆனால், எங்கேயிருந்து இங்கே வந்திருக்கிறோம் என்பது நமக்குத் தெரிந்திருந்தால் நாம் அரசியல் காரணங்களுக்காக உதாசீனப்படுத்திக் கொண்டிருக்க மாட்டோம்.
45 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை பிரிட்டன் நம்மிடமிருந்து களவாடிவிட்டு, நம் மனித வளத்தையும் கிட்டத்தட்ட அழித்து விட்டுச் சென்றது. நாட்டினைத் துண்டாடி விட்டதோடு, அம்மை நோய், காலரா, மலேரியா போலியோ போன்ற நோய்களில் மக்கள் செத்து மடிந்து கொண்டிருந்த காலத்தில் நிர்கதியாக விட்டுச் சென்றது பிரிட்டிஷ் அரசாங்கம். ஒரு மீனின் தலையைத் தவிர்த்து ஒட்டு மொத்த உடலையும் எறும்புகள் அரித்துத் தின்று விட்டுப் போன நிலையில் தான் நேருஜி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் சிதைந்து கிடந்த தேசத்தினை படாத பாடுபட்டு ஒருங்கிணைக்காமல் விட்டிருந்தால்...
அண்ணல் அம்பேத்கர் பல சர்ச்சைகளுக்கு நடுவில் தேசத்திற்கென்று ஒரு பெரிய சட்டவரைவை உருவாக்காமல் விட்டிருந்தால்....
அந்தச் சூழலில் ஆட்சியை ஏற்ற நேருஜி அவர்கள் இந்திய மக்களுக்கு அடிப்படைத் தேவையான வேலை வாய்ப்பினை உருவாக்க பல பொதுத்துறை நிறுவனங்களைத் தொடங்காமல் விட்டிருந்தால்,
இந்திரா அம்மையார், தனிநபர் ஆளுமைப் பிடியிலிருந்து மீட்டு அணைத்து வங்கிகளையும் தேசியமயமாக்காமல் விட்டிருந்தால்....
ராஜீவ் காந்தி, புதிய தொழில்நுட்பத்தை முழு வேகமாக தேசத்தில் ஊடுறுவ அனுமதிக்காமல் விட்டிருந்தால்...
நரசிம்ம ராவ் அவர்கள் மற்றும் மன்மோகன் சிங் கூட்டணி உலகமயமாக்களை உள்வாங்கி அதற்கேற்ப தேசத்தைத் தகவமைத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் விட்டிருந்தால்...
வாஜ்பேயி உற்பத்தித் தொழில், வானியல், அணுவாராய்ச்சி மற்றும் தேசத்தின் உட்கட்டமைப்பை தீவிரமாக மேம்படுத்தாமல் விட்டிருந்தால்....
நரேந்திர மோடி வங்கிச் சீர்திருத்தம், வெளிநாட்டு உறவு, தொழில் வளர்ச்சியில் உலகளாவியச் சந்தையாக மாற்றம் செய்யாமல் விட்டிருந்தால்...
நாம் இப்பொழுது நிலையிலிருந்து மிகவும் பின் தங்கியிருந்திருப்போம். மேலே குறிப்பிட்ட அத்தனை பிரதமர்கள் மீதும் பலதரப்பட்ட அரசியல் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அத்தனை பேரும் ஏதோவொரு வகையில் இந்த தேசத்தை மேம்படுத்தியிருக்கிறார்கள். அல்லது மேம்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
இந்தியர்கள் என்றாலே அழுக்கானவர்கள் நோயாளிகள் என்ற உலகளாவிய பிம்பத்திலிருந்து, இன்று உலகத்திற்கே தடுப்பூசி வழங்கும் உயர்ந்த நிலைக்கு வளர்ந்திருக்கிறோம். உலக அரசியலில் ஊறுகாயாகக் கூட மதிக்காத நிலையிலிருந்து இந்தியா இல்லாமல் உலக அரசியலில் முக்கிய முடிவினை எடுக்க முடியாது என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறோம்.
உலகின் ஐந்தாவது பொருளாதார வல்லரசாக இருக்கிறோம்.
உலகின் தகவல் தொழில்நுட்பத்தின் மூளையாக இருக்கிறோம்.
உலகின் நான்காவது வலிமையான நாடாக இருக்கிறோம்.
மனித வளத்தில் நூறு சதவீதம் வளர்ந்திருக்கிறோம். ( 1947 சராசரி ஆயிட்காலம் 32லிருந்து 70க்கும் மேல் தற்பொழுது)
ராக்கெட் சைன்ஸில் மூன்றாவது இடத்தில் இருக்கிறோம்.
இன்னும்...இன்னும்...இன்னும் ஏராளமான வளர்ச்சி.
அரசியல்த் தலைவர்கள் மாறலாம், அரசியல் கட்சிகள் மாறலாம். ஆனால், தேசத்தின் துரித வளர்ச்சியில் மாற்றம் இருக்கக் கூடாது. அரசியல் காரணங்களுக்காக நாம் நம் தேசத்தினை விமர்சிக்கக் கூடாது. நம் தேசப்பற்றினை வெளிக்காட்டிக் கொள்ளத் தயங்கக் கூடாது.
அரசியல் காரணங்களுக்காக நம் வளர்ச்சியை மறுப்பவர்கள், சுதந்திர தினத்தைக் கொண்டாட மறுப்பவர்கள், உண்மையிலே நெஞ்சில் ஒரேயொரு துளி தைரியம் இருந்தால், நிஃப்டியில் ஷார்ட் போய்விட்டு இப்பொழுது ஆட்சியிலிருக்கும் கட்சி பதவி விலகும் வரை ஹோல்ட் செய்யுங்கள் பார்ப்போம்?
நாம் வளர்கிறோம். நம் வளர்ச்சி நம் பெருமை! அரசியல் - அரசியல் தலைவர்களைத் தாண்டி நாம் நம் சுதந்திர தினத்தினை பெருமையோடு கொண்டாடுவோம்.
அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான “சுதந்திரதின” நல்
வாழ்த்துகள்.
No comments:
Post a Comment