Monday, August 15, 2022

ஆண்டவனுக்கு மேலானவனாலும் முடியாது!

 புறம்போக்கு நிலங்களையும், நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் எல்லாம், அரசியல்வாதிகளாலும், அவர்களின் ஆசீர்வாதத்துடன் கட்சிக்காரர்களாலும் கட்டப்பட்டவை என்றே, நாம் இதுகாறும் கருதிக் கொண்டிருந்தோம்.அதிகாரிகளும், ஆக்கிரமிப்புகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை, திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூரில் உள்ள வெள்ளைக்குட்டையில், ஆறு ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அபூர்வாவின் தாயார் அருணோதயாவின் வீடும் ஒன்று என்பதன் வாயிலாக, வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.சாமானியர்கள் என்றால், ஏதோ தெரியாமல் அரசு நீர் நிலை இடத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்று கருதலாம். ஆனால், ஆக்கிரமிப்பாளரின் மகள் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி. அந்த இடம் நீர்நிலை குட்டைக்கு சொந்தமான இடம் என்று, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அபூர்வாவுக்கு தெளிவாக தெரிந்திருக்கும்.இருந்தும், நீர்நிலை குட்டையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளதோடு, விபரமாக அரசு வருவாய் துறை அதிகாரிகளை மிரட்டியோ அல்லது வருவாய்த்துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அபூர்வாவுக்கு அஞ்சியோ பட்டாவும் போட்டு கொடுத்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்கிரமிப்புக்களை அகற்ற வந்த அதிகாரிகள், கட்டடம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அபூர்வாவின் தாயாருக்கு சொந்தமானது என்பதும், அந்த ஆக்கிரமிப்புக்கு உரிய பட்டா இருந்ததாலும், ஏதோ கொஞ்சம் போல, பேருக்கு இடிப்பது போல பாவ்லா காட்டிவிட்டு
சென்றுள்ளனர். அந்த இடம் குட்டைக்கு சொந்தமானது தான். ஆகவே, அதற்கு பட்டா வழங்கப்பட்டு இருந்தாலும், அந்த, 'டுபாக்கூர்' பட்டா ரத்து செய்யப்படும் என்று, நீதிமன்றம் உறுதியாக தெரிவித்த பின்னரே, மீண்டும் புல்டோசருடன் ஆக்கிரமிப்பை அகற்ற ஆயத்தமாகி இருக்கின்றனர்.



இப்போது, 'புல்டோசர் வேண்டாம்... நாங்களே கொத்தனார்களை வைத்து ஆக்ரமிப்பை இடித்து அகற்றி விடுகிறோம்' என்று, வருவாய்த் துறை அதிகாரிகளிடம், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அபூர்வாவின் தாயார் அருணோதயா கூறியுள்ளார். அதை இடித்து குட்டைக்கு வழி விட, இன்னும் எத்தனை நாட்களாகுமோ? இப்பொழுதெல்லாம், திருட்டு, கொலை, கொள்ளை, பதுக்கல், போதைப்பொருள் விற்பனை, கற்பழிப்பு போன்ற குற்றங்களை தடுத்து, குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து தண்டனை வாங்கித்தர வேண்டிய காவல் துறையினரே, அத்தகைய கொடிய செயல்களில் ஈடுபடுவதை காண்கிறோம்.
அதுபோல, அரசு நிலங்களை ஆக்கிரமிக்காமல் தடுப்பதற்கும், அதை மீறி ஆக்கிரமித்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்ரமிப்புக்களை அகற்ற வேண்டிய உயர் அதிகாரிகளே தப்பு செய்கின்றனர் என்றால், என்ன செய்ய முடியும்?ஜெயலலிதா ஆட்சியின் போது, 'இந்த நாட்டை ஆண்டவனால் கூட, காப்பாற்ற முடியாது' என்று நடிகர் ரஜினி சொன்னது மாதிரி, அந்த ஆண்டவன் அல்ல... அவனுக்கு மேலானவன் வந்தாலும், இந்த நாட்டைக் காப்பாற்றவே முடியாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...