காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் புதிய தலைவருடன், பிரியங்கா, சிதம்பரம், முகுல் வாஸ்னிக், சச்சின் பைலட் ஆகியோர் செயல் தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல், வரும் 17ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில், அக்கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் நேரடியாக மோதுகின்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர்கள், செயலர்கள், மாநில தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் என, 9,000க்கும் மேற்பட்டோர் ஓட்டு அளிக்க உள்ளனர்.
இதில் 7,000 ஓட்டுக்கள் பதிவாகும் வாய்ப்புகள் உள்ளன. கார்கேவுக்கு, 5,000 ஓட்டுக்களும், சசிதரூருக்கு 2,000 ஓட்டுக்களும் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 710 ஓட்டுக்கள் உள்ளன. அதில் 200 ஓட்டுக்கள் வரை சசிதரூருக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த தேர்தலில் சோனியா, ராகுல் மறைமுக ஆதரவு பெற்றுள்ள கார்கே வெற்றி பெறுவார் என, கட்சி வட்டாரத்தில் நம்பப்படுகிறது.தேர்தல் முடிந்து, வரும் 19ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.
வரும் 19ம் தேதி, டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், புதிய தலைவர் பொறுப்பேற்க உள்ளார். பின், நாடு முழுதும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என, நான்கு மண்டலங்களாக பிரித்து, தலா ஒரு செயல் தலைவரை நியமிக்க, சோனியா முடிவு செய்துள்ளார்.
அதன் அடிப்படையில், கிழக்கு மண்டலத்திற்கு பிரியங்கா, மேற்குக்கு சச்சின் பைலட், வடக்குக்கு முகுல் வாஸ்னிக், தெற்கு மண்டலத்திற்கு சிதம்பரம் ஆகியோரை நியமிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நால்வரை தவிர்த்து, வேறு மூத்த தலைவர்களும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், புதியதாக நியமிக்கப்படும் செயல் தலைவர்கள் நால்வரும், கார்கே தலைமையில் கட்சி பணிகளை, மாநிலங்கள் வாரியாக பிரித்து பணியாற்றுவர் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment