தமிழக அமைச்சரவையில், இரண்டு மூத்த அமைச்சர்கள் மாற்றப்பட உள்ள தகவல் வெளியாகி உள்ளது. துறை பணிகளை சரியாக கவனிக்காமல், தலைமையை மறைமுகமாக விமர்சிக்கும், அந்த இரண்டு மூத்த அமைச்சர்களுக்கும் எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க, முதல்வர்ஸ்டாலின் தயாராகி வருவதாக, கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின்போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. இந்த ஆண்டு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துவக்கியது.
கடும் அதிருப்தி
இம்மாவட்டங்களில் உள்ள நீர் வழித்தடங்களில் துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு நடப்பாண்டில் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கையாக, பல்வேறு துறைகளின் சார்பில், 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மழைநீர் கால்வாய், வெள்ள நீரேற்று நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை, நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி துறை சார்பில், ஏப்ரல் மாதம் பணிகள் துவக்கப்பட்டன; ஆனால், இன்னமும் நிறைவடையவில்லை. இதனால், முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
இதற்கிடையே மூத்த அமைச்சர் ஒருவர், அரசு மீது வெளிப்படையாக தன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இதை, தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வர் சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்தார். 'அமைச்சர்களை நினைத்தால், துாக்கம் வரவில்லை' என்றும் குமுறினார்.
திடீர் சறுக்கல்
'இது, முதல்வரின் நிர்வாகத் திறமையின்மையை காட்டுகிறது' என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். மறைந்த ஜெயலலிதாவின் தைரியமான நடவடிக்கையையும், ஸ்டாலினின் பேச்சையும் ஒப்பிட்டு, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.
இதனால், ஒன்றரை ஆண்டு கால ஆட்சியால் கிடைத்த செல்வாக்கில், திடீர் சறுக்கல் ஏற்பட்டுள்ளதாக, முதல்வர் ஸ்டாலினிடம், அதிகாரிகளும், ஆதரவாளர்களும் கூறியுள்ளனர்.
'இது, லோக்சபா தேர்தலில் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்' என, கூட்டணி கட்சி தலைவர்களும் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து தடாலடியாக, ஜெயலலிதா பாணியில், இரண்டு மூத்த அமைச்சர்களை மாற்ற, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத் தடுப்பு உள்ளிட்ட பலபணிகளை முறையாக செய்யாததன் காரணமாக, இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
'அதிருப்தியில் உள்ள மூத்த அமைச்சரிடம், எந்த ஆலோசனையும் பெற வேண்டாம். எதுவாக இருந்தாலும், துறை செயலர்களை அணுகுங்கள்' என, அவரது துறை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும், கட்சியினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, 'சென்னை அடையாரில் உள்ள, அந்த அமைச்சருடைய மகன் அலுவலகத்துக்கு, யாரும் செல்லக் கூடாது' என்றும் தடையுத்தரவு போடப்பட்டு உள்ளது.
மற்றொரு அமைச்சர், துறை அலுவலர்களை மரியாதைக் குறைவாக பேசுவதுடன், கடும் சொற்களால் அர்ச்சித்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த அலுவலர்கள், முறையாக பணிகளை கவனிக்காமல், அடக்கி வாசிக்கின்றனர்.
இதன் காரணமாக, இந்த ஆண்டு மழையிலும், சென்னையில் பல பகுதிகள் தத்தளிக்கும் நிலை உள்ளது. இது, முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அதன் காரணமாக, அவரை மாற்றி விட்டு, பணிகளை துரிதப்படுத்த, முதல்வர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இது தவிர, சில அமைச்சர்கள் தங்கள் துறைகளை மாற்றித் தரும்படி, முதல்வரிடம் நேரடியாக கேட்டுள்ளனர். சிலர் தங்கள் துறை செயலர்களை மாற்றும்படியும் கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே, விரைவில் அமைச்சரவையிலும், அதிகாரிகள் மட்டத்திலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவி பறிக்கப்படும் மூத்த அமைச்சர்கள் இருவரிடமும், லோக்சபா தேர்தல் தொடர்பான கட்சி பணிகள் ஒப்படைக்கப்படும் என, ஆளும் கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment