ஆணாதிக்கம் ஒரே நாளில் நிகழ்வதல்ல. அது ஸ்லோ பாய்சன்.. அது விஷமென்று தெரிந்துகொள்ளும் வேளையில் தன்னம்பிக்கை இழந்து பாதி சிதைவுக்கு பெண்கள் ஆளாகியிருப்பார்கள்.
உணவில் உப்பில்லையென்றால் தட்டை வீசுவது, சொன்னது செய்ய தாமதமானால் வானுக்கும் பூமிக்கும் எகிறுவது, மனைவியின் சிறு தவறை கூட பொறுத்துக் கொள்ளாத நல்லனாக வாழ்வது, அவன் அழுதால் அவளும் அழ வேண்டும் அவன் சிரித்தால் அவளும் சிரிக்க வேண்டும்..அவனது கோபதாபங்களையெல்லாம் கொட்டும் குப்பைதொட்டியாக இருக்க வேண்டும். இப்படி ஒருவனிருந்தால் அவன் அக்மார்க் இந்திய ஆண் என கண்ணை மூடி சொல்லிவிடலாம்.
இந்த மாதிரியான ஆண்களிடம் அகப்படும் பெண்களும், பாதுகாப்பற்ற வெளியுலகத்தை பயந்தெண்ணி, நம்பிக்கை தளர்ந்து, அவன் ஒருத்தனையே பொறுத்துக்கொள்ளலாம் என அனைத்தையும் சகித்து வாழ்வார்கள்.
ஆணாதிக்கமெல்லாம் இக்காலத்தில் இல்லை..பெண்கள் நன்றாகத்தான் கொழுத்து வாழகிறார்கள் என்ற பலரின் நையாண்டி பதிவுகளை பார்க்கும் போது நானுமே நக்கலாக சிரித்துக் கொள்வேன்..ஒன்றை பற்றி எதுவுமே அறிந்திராத… தெரிந்து கொள்ள விரும்பாதவனிடம் நீங்கள் விளக்கம் தர முயற்சித்தால் நேரம்தான் வீண் .. அதனை கடந்துவந்தவர்களுக்கு அல்லது அனுபவிப்பவர்களுக்குதான் அதன் வலி புரியும்..
அந்த வலியை சரியாக சொல்லியிருக்கிறது “அம்மு” திரைப்படம்..தெலுங்கில் வந்திருக்கிறது..பொதுவாக மனைவியை கொடுமைபடுத்தும் கணவன்களை சைக்கோக்களாகத்தான் முந்தைய கால படங்கள் காண்பித்திருக்கின்றன. ஆனால் வெளியுலகில் யோக்கியமானவனாகவும், வீட்டிற்குள் மனைவியை கீழ்த்தரமாகவும் நடத்தும் ஏனைய கணவர்களின் யோக்யதையை ஜெராக்ஸ் காபி போல் அப்படியே காண்பித்திருக்கிறார்கள்..
அதே போல் மனைவியும் நம் கணவன்தானே என ஒவ்வொரு முறையும் சுயசமாதானம் செய்துகொள்வதும் இயலாமையில் தன்னைதானே திட்டி அடித்துக்கொள்வதுமாக அப்பட்டமான உண்மையை காண்பித்திருக்கிறார்கள்..கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு. இறுதியில் லேசான சினிமாடிக் தென்பட்டாலும் படம் நன்றாக இருக்கிறது.. the great Indian kitchen , darlings , thappad லிஸ்டில் இணைந்திருக்கும் இன்னொரு படம் அம்மு..
மற்றபடி இதுமாதிரியான படங்களால் இவ்வகையான ஆண்கள் திருந்துவார்களா என்றால் சத்தியமாக இல்லை..(திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என அன்றே சொல்லிவிட்டார் ப.கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்.) ஆனால் பெண்களின் பார்வை மாறும்.
No comments:
Post a Comment