Friday, October 14, 2022

மடங்கள், கோவில்களில் அரசு தலையீடு கூடாது! தெளிவுபடுத்தும் இரு மாநில நீதிமன்ற தீர்ப்புகள்.

 'மடங்களிலும், மடங்களுக்கு சொந்தமான கோவில்களிலும், அரசு நிர்வாகத்தால் குறுக்கிட முடியாது. செயல் அலுவலர்களையும் நியமிக்க முடியாது. அப்படி நியமித்து இருந்தால் அது செல்லாது' என, ஆந்திரா, கர்நாடா மாநிலங்களின் வெளியான தீர்ப்புகள் வாயிலாக, அறநிலையத் துறைக்கு தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலம், கர்னுால் மாவட்டம், அஹோபிலம் கிராமத்தில், ஸ்ரீ அஹோபில லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை, ஒன்பது நரசிம்மர் சன்னிதிகள் உள்ளன. இந்த கோவில் திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வாரால் பாடப் பெற்ற திவ்யதேசம்.


latest tamil news


கடந்த 2019ம் ஆண்டு, அஹோபிலம் மடம் சார்பாக, இக்கோவிலில், ஆந்திர மாநில அறநிலையத்துறை நியமித்த செயல் அலுவலர் பணியில் உள்ளார். அவரது நியமனத்திற்கான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அவர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவரை நீக்க வேண்டும் என, மடாதிபதிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
வழக்கு தொடுத்ததால், மடாதிபதி பெயரில் இருந்த வங்கி கணக்கில் பணம் செலுத்தாமல், புதிதாக ஒரு கணக்கு துவங்கி, அதில் செயல் அலுவலர் பணம் செலுத்தி வந்தார். இது தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டது. மேலும், கோவில் பக்தரான அஹோபிலம் சேதுராமன் என்பவர், இக்கோவிலில் செயல் அலுவலர் மோசமான நிர்வாகம் செய்கிறார் என, பொது நல வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார்.
இந்த மூன்று வழக்குகளிலும், ஆந்திர மாநிலம் உயர்நீதி மன்றத்தால், இரண்டு மாதங்களுக்கு முன் நீண்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த வழக்கில் நேற்று முன்தினம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு: கோவில், அஹோபிலமடத்தின் கோவில் என அறிவிக்கப்படுகிறது. கோவிலில் செயல் அலுவலர் இருப்பது சட்ட விரோதம். அவர் இனி அங்கு பணியில் தொடரக் கூடாது. கோவில் நிர்வாகத்தின் முழு உரிமை, மடாதிபதியைச் சேர்ந்தது. தனி வங்கிக் கணக்கு துவங்கி, செயல் அலுவலர் செலுத்திய கோவில் பணம் முழுவதையும், மடத்திற்கு திருப்பித் தர வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டது.


கர்நாடகாவில் மற்றொரு வழக்கு


கர்நாடக மாநிலத்தில்,புகழ் பெற்ற மடங்களில் ஸ்ரீராமச்சந்திரபுரா மடமும் ஒன்று. இதில், தற்போது கவேஸ்வர பாரதி சுவாமிகள், மடாதிபதியாக இருந்து வருகிறார். இவர் மடத்தை சரியாக நிர்வாகம் செய்யவில்லை என, மடத்தின் சீடர்கள் சிலர், கர்நாடக உயர்நீதி மன்றத்தில், பொது நல வழக்கு தொடுத்தனர். அதில், ராமச்சந்திர மடத்து நிர்வாகத்தையும், கர்நாடகத்தில் உள்ள மற்ற மடங்களையும் கட்டுப்படுத்த, அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்; மடாதிபதியை பதவி நீக்கம் செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது.


latest tamil news


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமீபத்தில் அளித்த தீர்ப்பு:
கர்நாடக அறநிலையத்துறை சட்டத்தின்படி, மடங்கள் விஷயத்தில் அறநிலையத்துறை குறுக்கிட அதிகாரம் வழங்கப்படவில்லை. 1999ல் நியமிக்கப்பட்ட மடாதிபதியை நீக்க, தொடர்ந்து சிலர் முயன்று வருகின்றனர். மத விஷயங்களில் பொது நல வழக்குகள் தொடுத்தால், நீதிமன்றம் அவற்றை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். இந்த வழக்கில் நாங்கள் மடத்தில் தலையிட எந்த காரணங்களையும் காணவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், மடத்தின் நிர்வாகம் குறித்து, எந்த திட்டத்தையும் கொண்டு வர நீதிமன்றம் மறுத்து விட்டது.


அறநிலையத்துறைதலையீடு கூடாது


இந்த இரு மாநில நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து, ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர். ரமேஷ் கூறியதாவது: இந்த இரு மாநில நீதிமன்ற தீர்ப்புகளும், அரசியல் சாசனம் 26ல் சொல்லப்பட்ட அடிப்படை உரிமைகள் தரும் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டவை. கடந்த, 1954ல் உச்ச நீதிமன்றத்தின் ஏழு பேர் கொண்ட அமர்வு, ஒவ்வொரு மடமும் ஒரு தனி மத சம்பிரதாயம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்திலும், 1959 அறநிலையத்துறை சட்டப்பிரிவு, 107ம் மத சம்பிரதாயங்களை விலக்களித்து, மடங்கள் குறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் எந்த உத்தரவும் போட முடியாது என தெளிவுபடுத்துகிறது. இருப்பினும், தமிழகஅறநிலையத்துறை, மடங்கள் விஷயத்திலும், சிதம்பரம் கோவில் விஷயத்திலும், தொடர்ந்து சட்டத்தை மீறி வருகிறது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...