தமிழகம் முழுதும் உள்ள அரசு அலுவலகங்களில், தீபாவளி பண்டிகை நேரம் என்பதால், வசூல் வேட்டை நடக்கிறது என, தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தலைமையகத்துக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் கந்தசாமி, ஆங்காங்கே இருக்கும் பிரிவு அலுவலகங்களை முடுக்கி விட்டார்.
வாக்குமூலம்
எந்தந்த அரசு அலுவலகங்கள் புகார்களுக்கு ஆளாகி இருக்கிறதோ, அங்கு உடனடியாக சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், கடந்த வாரம், தமிழகம் முழுதும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ஒரே நேரத்தில், அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தினர். திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், 75 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.
அப்போது உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: பிடிப்பட்ட தொகை, திருவாரூர் உட்கோட்டத்தில் உள்ள ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெறப்பட்டது.
அது, திருவாரூர் தி.மு.க., மாவட்ட செயலர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.,வுக்கு கொடுக்க வைத்திருந்த 5 சதவீத தொகை. பணத்தை வாங்க, மா.செ.,வின் மகன் பூண்டி கலைஅமுதன் வந்திருந்தார். அதற்குள் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், பணத்தை கைப்பற்றி விட்டனர். இவ்வாறு மாரிமுத்து கூறியதை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கிற்கான ஆவணமாக ஆக்கிஉள்ளனர்.
தகவல்
இந்த விவகாரம் அறிந்ததும், 'மாரிமுத்துவிடம் பெற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கிழித்தெறிந்து, மீண்டும் புதிய ஒப்புதல் வாக்குமூலம் வாங்குங்கள்' என, மேலிடத்தில் இருந்து விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் சென்று உள்ளது. இதையடுத்து, வாக்குமூலத்தை மாற்றும் முயற்சியில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் களம் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment