Saturday, October 22, 2022

ஆட்டம் பாம்!' மாஜி கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வைத்தார்...

தமிழகத்தில் பல்கலை துணைவேந்தர் பதவி, 40 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை விலை பேசி விற்கப்பட்டு வந்ததாக, தமிழகத்தின் முன்னாள் கவர்னரும், தற்போதைய பஞ்சாப் கவர்னருமான பன்வாரிலால் புரோஹித் பற்ற வைத்த அணுகுண்டு, அ.தி.மு.க.,வுக்கு எதிராக வெடிக்கத் துவங்கி உள்ளது.

தமிழகத்தின் கவர்னராக, 2017 - 21 வரை பதவி வகித்தவர் பன்வாரிலால் புரோஹித். தற்போது இவர் பஞ்சாப் மாநில கவர்னராக பதவி வகிக்கிறார். இங்கு, முதல்வர் பகவந்த்சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.


மோதல்



பஞ்சாப் வேளாண் பல்கலைக்கு துணைவேந்தராக, சத்பீர் சிங் கோசல் என்பவரை நியமித்ததில், கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

'பல்கலை மானியக் குழுவின் விதிமுறைப்படி சத்பீர் சிங் கோசல் துணைவேந்தராக நியமிக்கப்படவில்லை. எனவே, அவரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, புரோஹித் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று பன்வாரிலால் புரோகித் கூறியதாவது:

பல்கலைக்கு துணைவேந்தர்களை நியமிப்பதற்கான சட்டம் என்ன என்பது எனக்கு தெரியும். இந்த விஷயத்தில் யாரும் எனக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது.

பஞ்சாப் கவர்னராக பதவியேற்பதற்கு முன், தமிழகத்தின் கவர்னராக நான்கு ஆண்டுகள் பதவி வகித்தேன். அப்போது, அங்கு நிலைமை மோசமாக இருந்தது.

பல்கலைகளில் துணைவேந்தர் பதவி விற்கப்பட்டு வந்தது. 40 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தின் கவர்னராக இருந்தபோது, சட்டத்துக்கு உட்பட்டு, 27 துணைவேந்தர்களை நியமித்தேன். இந்த விஷயத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை, பஞ்சாப் அரசு என்னிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.


அதிர்ச்சி



யார் திறமையானவர், யார் திறமையற்றவர் என்பது கூட பஞ்சாப் அரசுக்கு தெரியவில்லை. பல்கலைகளின் நிலைமை மேம்பட வேண்டும் என்பதே என் எண்ணம்.

அரசியல் சாசனத்தை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துள்ளேன்; என் கடமையை செய்கிறேன்.

மாநில அரசின் தலைவர் என்ற அந்தஸ்தை, அரசியல் சட்டம் எனக்கு அளித்துள்ளது. பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மானுக்கு, நான் தான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தேன் என்பதை, அவர் உணர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் பன்வாரிலால் கவர்னராக இருந்தபோது, நான்கு ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சி நடந்தது.

இவரது பதவிக் காலத்தின் கடைசி நான்கு மாதங்கள், தி.மு.க., ஆட்சியில் இருந்தது. புரோஹித் கூறிய குற்றச்சாட்டால், அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க., அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஏற்கனவே, ஜெயலலிதா மரண விவகாரம், துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான இரு விசாரணை கமிஷன் அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டதால், ஆடிப் போயிருக்கும் அ.தி.மு.க.,வினருக்கு, இது அடுத்த இடியாக வந்து விழுந்துள்ளது.

தவறு நடக்கவில்லை: அ.தி.மு.க., 'மாஜி' மறுப்பு!


அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித் துறை முன்னாள் அமைச்சராக இருந்த அன்பழகன் கூறியதாவது:பன்வாரிலால் புரோஹித் தமிழக கவர்னராக இருந்தபோது, 'துணைவேந்தர் நியமனத்திற்கு கோடிக்கணக்கில் பணம் வாங்கினர்' என, ஒரு விழாவில் பேசினார். நான் அப்போதே, அவரது கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, விளக்கம் கொடுத்தேன். ஒரு துணைவேந்தரை நியமிக்க அறிவிப்பு வெளியானவுடன், தேடுதல் குழு அமைக்கப்படுகிறது. அக்குழு, 10 பேரை தேர்வு செய்து, கவர்னருக்கு அனுப்புகிறது. அதில், மூவரை தேர்வு செய்து, அவர்களிடம் கவர்னர் நேர்காணல் நடத்துகிறார். இதில், அரசுக்கோ, முதல்வர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சருக்கோ தொடர்பு இல்லை.

இந்நிலையில், தமிழகத்தில் துணைவேந்தர் பதவி, 40 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது என பன்வாரிலால் புரோஹித் சொல்வது ஏற்கக்கூடியது அல்ல.தற்போது, பஞ்சாப் மாநிலத்தில் துணைவேந்தர்களை நியமிக்கும் வாய்ப்பு, அங்கு கவர்னராக உள்ள புரோஹித்துக்கு இல்லை என்பதால், தமிழகத்தின் மீது குறை கூறுவதை ஏற்க முடியாது. தமிழகத்தில் தவறுகள் நடந்திருந்தால், அதற்கு கவர்னரே முழு பொறுப்பு.

இதில், ஆளுகிற அரசுக்கோ, முதல்வருக்கோ, கல்வித் துறை அமைச்சருக்கோ எந்தவித தொடர்பும் இல்லை. ஒருவேளை பணம் கைமாறி இருந்தால், அது கவர்னரையே சாரும். மேலும், '22 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்தேன்' என, அவர் சொல்கிறார். இதிலிருந்து, அரசின் தலையீடு ஏதும் இல்லை என்பது தெரிகிறது. அரசு தலையிட்டு பட்டியல் கொடுத்திருந்தால், அவர் சொல்வதை ஏற்கலாம்; அவர் கூறுவது தவறான தகவல். இவ்வாறு அன்பழகன் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...