Monday, October 24, 2022

தி.மு.க.,வினரின் ஒப்பாரி தொடரும்!

 'ஹிந்தியை எதிர்க்கும், தமிழ் தான் எங்கள் உயிர் என்று பேசும், தி.மு.க., நிர்வாகிகளில் யாராவது, தங்கள் பிள்ளைகளை, தமிழ் வழியில் படிக்க வைத்துள்ளனரா? தமிழகத்தில், தி.மு.க.,வினர் நடத்தும் சி.பி.எஸ்.சி., பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது என்பதை வெள்ளை அறிக்கையாக, தி.மு.க., தலைமை வெளியிட வேண்டும்.


'ஹிந்தியில் மருத்துவ படிப்பை துவங்க, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழில் மருத்துவ படிப்பு வரும் போது, அதை தி.மு.க., ஏற்குமா?

தமிழில் மருத்துவ படிப்பு விவகாரத்தில், தி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன என்பதை, முதல்வர் ஸ்டாலின் தெளிவு படுத்த வேண்டும்' என, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தி இருக்கிறார்.

இத்தனை காலமாக, தி.மு.க.,வினர் கையிலெடுத்து கம்பு சுத்திக் கொண்டிருந்த, ஈ.வெ.ரா., மண் மற்றும் அவரது கொள்கை என்ற கருத்துகளே, 'பூமராங்' மாதிரி, அவர்களை திருப்பித் தாக்க துவங்கிஉள்ளது.

அதாவது, எப்போதெல்லாம் தி.மு.க., ஆட்சிக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்து வலுக்கிறதோ, அப்போது எல்லாம், ஹிந்தி எதிர்ப்பை ஒரு கேடயமாக பயன்படுத்த துவங்குவர். இப்போது அந்த ஆயுதமே, அவர்களை திருப்பித் தாக்க துவங்கிஉள்ளது.

ஆட்சியிலுள்ள தி.மு.க.,வுக்கு, மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பு, அ.தி.மு.க., ஆட்சியில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கூட இருந்ததில்லை.

தி.மு.க.,வின், 'டுபாக்கூர்' வாக்குறுதிகளை நம்பி ஓட்டளித்ததன் பயனை, மக்கள் தற்போது தான் உணர துவங்கியுள்ளனர். அந்த எதிர்ப்பை சமாளிக்கவோ, ஹிந்து எதிர்ப்பு விவகாரத்தை, தி.மு.க.,வினர் கையில் எடுத்துள்ளனர்.

ராமாயணத்தில் வரும் ராவணன், தம்பிகளான விபீஷணன், கும்பகர்ணன் ஆகியோரின் அறிவுரையை கேட்காமல், செவி மடுக்காமல் மாண்டு போனான் என்பது, காவியம் சொல்லும் கதை.

அதேபோல, துரியோதனனும், தன் தம்பிகளில் ஒருவரான விகர்ணனின் வேண்டுகோளை ஏற்க மறுத்து, தானும் கெட்டு, தன் உடன் இருந்தவர்களையும் கெடுத்தான். ராவணன், துரியோதனன் போல, தி.மு.க.,வினரும் விரைவில் வீழ்வர் என்பதில் சந்தேகமில்லை.

அதனால், வானதி அவர்களே... நீங்கள் கேட்பது போல, வெள்ளை அறிக்கை எல்லாம் தர மாட்டார்கள். 'ஹிந்தி திணிப்பு... ஹிந்தி திணிப்பு...' என்று ஒப்பாரி வைப்பதை தான் தொடர்ந்து கொண்டிருப்பர் என்பதில் மாற்றமில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...