'மத்தியில் காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், ஹிந்திக்கு முக்கியத்துவம் அளித்து தாக்கல் செய்த அறிக்கையை எதிர்க்காமல் தி.மு.க., வேடிக்கை பார்த்தது ஏன்?' என, புதுடில்லியில் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான பார்லிமென்ட் குழு, தன் 11வது அறிக்கையை, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.
இந்த குழு அளித்த பரிந்துரைகளில் கூறப்பட்டிருந்ததாவது:
பல்வேறு துணைக் குழுக்கள் மற்றும் பார்லிமென்ட் குழுவில் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் பல பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் என்பது அன்னிய மொழி.
ஆங்கில வழிக் கல்வி என்ற காலனியாதிக்க நடைமுறையை கைவிட வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஹிந்தி மற்றும் பிராந்திய மொழிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
அனைத்து உயர்நிலைக் கல்வி நிறுவனங்களிலும் ஹிந்தி மற்றும் பிராந்திய மொழி வழியிலேயே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
ஐ.ஐ.டி., உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பமல்லாத கல்வி நிறுவனங்களிலும், 100 சதவீதம் இதை பின்பற்ற வேண்டும்.
ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தியிலும், மற்ற மாநிலங்களில் அந்தந்த பிராந்திய மொழியிலும் பாடம் கற்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அரசுக்கு கடிதம்
பார்லிமென்ட் குழுவின் இந்த பரிந்துரைகளுக்கு, தி.மு.க., தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. கல்வி விஷயத்தில் ஹிந்தி திணிக்கப்படுவதாக கூறி, அந்தக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
ஆனால், இதேபோல் ஒரு அறிக்கை, காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் ஜனாதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதற்கு, அப்போது தி.மு.க., தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 2011ல் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தைச் சேர்ந்த சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது பார்லிமென்ட் அலுவல் மொழி குழுவின் தலைவராக இருந்த சிதம்பரம், இதுபோன்ற ஒரு அறிக்கையை, ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியிடம் தாக்கல் செய்தார்.
ஆனால், அப்போது தி.மு.க., எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்தது.
சிதம்பரம், தி.மு.க.,வுக்கு வேண்டப்பட்டவர் என்பது, இதற்கு முக்கிய காரணம்.
மேலும், தற்போது அமித் ஷா தாக்கல் செய்த அறிக்கைக்கு, தி.மு.க., உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் இறங்கியதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.
கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க., அளித்த பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் வாக்காளர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், தி.மு.க.,வின் குடும்ப ஆட்சி மீதும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சமீபத்தில் நடந்த தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஸ்டாலினும், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு குறித்து விரக்தியாக பேசினார்.
'இவர்களை நினைத்தால் துாக்கம் கூட வர மறுக்கிறது' என, அவர் பகிரங்கமாக தெரிவித்து இருந்தார்.
கட்சியிலும், ஆட்சியிலும் ஸ்டாலின் தன் பிடியை இழந்து விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
எனவே, இந்த பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே, ஹிந்தி ஒழிக கோஷத்தை தி.மு.க., சற்றும் தாமதிக்காமல் கையில் எடுத்துள்ளது.
தமிழ் புத்தகங்கள்
'ஹிந்தி ஒழிக' என்ற கோஷத்தை, ஆரம்ப காலத்தில் தன் அரசியல் வளர்ச்சிக்காக தி.மு.க., கையில் எடுத்தது. இப்போது நிலைமை மாறி விட்டது. தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.
மத்திய பிரதேசத்தில் மருத்துவ கல்விக்கான பாடப்புத்தகங்கள் ஹிந்தியில் வெளியிடப்பட்டன. தமிழகத்திலும் மருத்துவ கல்வி தொடர்பான தமிழ் புத்தகங்கள் உள்ளன.
இப்போது, ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கோ, வேறு மொழிகளுக்கோ முக்கியமான விஷயங்களை மொழி பெயர்ப்பது, மிகவும் எளிதான விஷயமாகி விட்டது. இந்த 'டிஜிட்டல்' யுகம், அதை மிகவும் சுலபமாக்கி விட்டது.
எந்த ஒரு தகவலையும், 'கூகுள்' தொழில்நுட்பம் வாயிலாக, ஒரு மொழியில் இருந்தும், வேறு மொழிக்கு எளிதில் மொழி பெயர்க்க முடியும்.
எனவே, அரதப் பழசான ஹிந்தி ஒழிப்பு கோஷத்தை தி.மு.க., மீண்டும் துாசு தட்டுவது, அந்த கட்சிக்கு எந்த வகையிலும் கை கொடுக்காது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment