Friday, October 14, 2022

சட்டம் காலாவதியான பிறகும் கிடைக்காத பட்டா! அறியாமையில் நிலம் வாங்கியோருக்கு அரசு உதவுமா?

 நகர்ப்புற உச்ச வரம்பு சட்டம் இல்லாத நிலையிலும், அந்த சட்டத்தின் பாதிப்புகள் இன்னமும் தொடர்வதாக சர்ச்சை எழுந்துள்ளது.


இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குமார் கூறியதாவது:

நகர்ப்புறங்களில் ஒரு சிலர் மட்டுமே நில உரிமையாளர்களாக இருந்தனர். அதனால், அரசுக்கு தேவைப்படும் நிலத்தை, உடனே கையகப்படுத்த முடியாத நிலை இருந்தது. சிலரிடம் நிலம் குவிந்திருந்ததால், பலருக்கும் வீட்டு மனை என்பது கனவாகவே இருந்தது.

இந்நிலையில் தான், நகர்ப்புற நில உச்ச வரம்பு சட்டம், 1978ல் அமலுக்கு வந்தது.


அனுமதி



ஒரு குடும்பத்திற்கு கணவன், மனைவி, இரு குழந்தைகள் என தீர்மானிக்கப்பட்டு, தலா 500 ச.மீ., நிலம் மட்டுமே இருக்க சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வகையில், ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 2,000 ச.மீ., அளவுக்கு மட்டுமே நிலம் இருக்க முடியும் என தீர்மானிக்கப்பட்டது.

கூடுதலாக இருக்கும் நிலம் அனைத்தையும், நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அரசு கையகப்படுத்தியது.

அதன் பின், அரசு தரப்பில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலங்களை, தனியாருக்கு விற்க முடிவு எடுக்கப்பட்டது; ஆனால், அரசு அதை செய்யவில்லை.

நிலங்களை கையகப்படுத்தி அரசிடம் சேர்க்க, வருவாய் துறையில் நகர்ப்புற நில உச்சவரம்பு ஆணையரகம் ஏற்படுத்தப்பட்டது.

அதன் அலுவலகங்கள் பல இடங்களில் ஏற்படுத்தப்பட்டு, சட்டத்தின் வாயிலாக ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தப் பட்டன. ஆனால், கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் அரசு பயன்பாட்டுக்கு உதவவில்லை. இதனால், சட்டத்தின் நோக்கமும் நிறைவேறவில்லை.

எனவே, செயல்பாடு அற்ற அந்த சட்டம் தேவையில்லை என, பலராலும் கூறப்பட்டது.

ஒரு கட்டத்தில், இந்த சட்டத்தை கடுமையாக விமர்சித்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, மத்திய சட்ட அமைச்சரானார். இதையடுத்து, 1999ல் இந்த சட்டத்துக்கு முடிவுரை எழுதினார். சட்டம், முறைப்படி திரும்ப பெறப்பட்டது.

ஆனால், நில உச்சவரம்பு சட்டம் அமலில் இருந்தபோது, அச்சட்டத்தின் கீழ் அரசு கையகப்படுத்தியதே தெரியாமல், நிலம் வாங்கி ஏராளமானோர் வீடு கட்டி குடி போயினர். தற்போதும், வசித்து வருகின்றனர்.

இப்படி வீடு கட்டி குடியிருப்போருக்கு, சட்டம் காலாவதியான பின்பும் சங்கடங்கள் தொடர்கின்றன. நிலத்தை வாங்கி, அங்கே வீடு கட்டியிருப்பவர்களின் வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்படவில்லை.


அரசாணை



எனவே, நிலத்தை வாங்கியவர், அதில் கட்டப்பட்ட வீட்டை அல்லது நிலத்தை விற்க முடியாமல் தடுமாறினர். வங்கிகளில் கடன் வாங்க முடியாத நிலை உருவானது.

இந்த சிக்கலில், தமிழகம் முழுக்க லட்சக்கணக்கானோர் உள்ளனர் என்பதை அறிந்த தமிழக அரசு, ஒரு கட்டத்தில் இப்படிப்பட்ட நிலத்தை வரன்முறைப்படுத்த அரசாணை வெளியிட்டது. அதை வைத்து, பட்டா கொடுத்து வந்தனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அரசாணை புதுப்பிக்கப்பட்டது. ஆனால், 2008க்கு பின், அரசாணை புதுப்பிக்கப்படவில்லை. இதனால், அரசு கையகப்படுத்திய நிலம் என தெரியாமல், அறியாமையில் நிலம் வாங்கி வீடு கட்டியோர் பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர்.

வரன்முறைப்படுத்தும் நிலத்துக்கு, குறிப்பிட்ட நிலம் இருக்கும் இடத்தின் வழிகாட்டு மதிப்பில், 10 சதவீதத்தை அரசுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அந்த அரசாணையை புதுப்பித்து, மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால், சம்பந்தப்பட்டோருக்கு பட்டா கிடைக்கும்.


கவனம் வேண்டும்



கட்டணம் வாயிலாக அரசுக்கு உடனே 200 கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே வருவாய் இன்றி, தமிழக அரசு தவித்து வரும் சூழலில், இவ்விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு, வரன்முறைப்படுத்தும் அரசாணையும் போடப்படாத நிலையில், பெரிய பணிகள் எதுவுமின்றி ஆணையரகம் செயல்படுகிறது.

இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கவனம் செலுத்தினால், நிமிடத்தில் முடிய கூடிய பிரச்னை தான் இது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...