''காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தல் தொடர்பாக சசி தரூர், தங்களிடம் ஒரு முகத்தையும், மீடியாக்களிடம் வேறு முகத்தையும் காட்டுகிறார்'' என அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் மதுசூதன் மிஸ்திரி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கே அமோக வெற்றி பெற்றார். 7,897 ஓட்டுகள் கார்கேவுக்கு கிடைத்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூருக்கு 1,072 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. கார்கே வரும் 26 ம் தேதி பதவியேற்க உள்ளார்.
ஓட்டு எண்ணிக்கையின் போது, உ.பி.,யில் தேர்தல் நடவடிக்கையில் பிரச்னைகள் உள்ளன. அதனால், ஓட்டை செல்லாததாக்க அறிவிக்க வேண்டும் என சசி தரூர் தரப்பு மதுசூதன் மிஸ்திரிக்கு கடிதம் எழுதியிருந்தது.
இது தொடர்பாக சசி தரூரிடம் கேட்டதற்கு, ''இவை எல்லாம் கட்சியின் உயர்மட்ட விஷயங்கள். தவறுதலாக, 'லீக்' செய்யப்பட்டுள்ளன. இனி, அவை குறித்து பேச வேண்டாம். எதிர்காலத்தை செப்பனிட முன்னோக்க செல்வோம்'' என்றார்.
இந்நிலையில் சசி தரூர் தரப்பு தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து மதுசூதன் மிஸ்திரி அனுப்பியுள்ள கடிதம்: என்னுடன் தொடர்பு கொள்ளும் போது ஒரு முகத்தை காட்டி திருப்தி என சொல்லும் நீங்கள், மீடியாக்களிடம் வேறு முகத்தை காட்டி எங்கள் மீது குற்றம்சாட்டுகிறீர்கள்.
இதனை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டோம். ஆனால், அதனையும் மீறி, உங்களுக்கு எதிராக தேர்தல் குழுவினர் சதி செய்வதாக குற்றம்சாட்டினீர்கள். இவ்வாறு மதுசூதன் மிஸ்திரி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment