தமிழக சட்டசபையில், மார்ச்சில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு நடந்தது. இந்த நிகழ்வுகள் முடிந்ததும், மே மாதம் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 10:00 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடுகிறது. மறைந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்த பின், முதல் நாள் சபை நிகழ்வுகள் நிறைவு பெறும். பின், சபாநாயகர் அப்பாவு தலைமையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது.
அதில், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் இதர கட்சிகளின் சட்டசபை தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அப்போது, சபையை எத்தனை நாட்கள் நடத்துவது என, இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப் படும்.
சட்டசபை கூட்டத்தொடரை ஐந்து நாட்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். எனவே, இது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்படலாம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி கமிஷன் தாக்கல் செய்த அறிக்கையும், துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான, நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷனின் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்படலாம்.
சட்டம் - ஒழுங்கு, மழைநீர் கால்வாய் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுஉள்ளன. அ.தி.மு.க.,வில் தலைதுாக்கியுள்ள உட்கட்சி பிரச்னையும், சட்டசபையில் வெளிப்பட வாய்ப்புஉள்ளது. இதனால், சட்டசபை கூட்டத்தில், ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.
No comments:
Post a Comment