தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவுவும், துணை சபாநாயகராக பிச்சாண்டியும், இன்று (மே 12) பதவியேற்றனர்.
தமிழக சட்டசபைக்கான சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், நேற்று பகல், 12:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என, சட்டசபை செயலர் சீனிவாசன் அறிவித்து இருந்தார். நேற்று காலை சபாநாயகர் பதவிக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., அப்பாவு; துணை சபாநாயகர் பதவிக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிச்சாண்டி ஆகியோர், சட்டசபை செயலரிடம் மனு தாக்கல் செய்தனர். இருவருடைய மனுக்களையும், முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். சபை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் வழிமொழிந்தார். மனு தாக்கலின் போது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு, வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, இருவரும் போட்டியின்றி தேர்வானார்கள்.

சட்டசபை இன்று காலை, 10:00 மணிக்கு கூடியது. சபை கூடியதும், சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை, தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், சபை முன்னவர் ஆகியோர் அப்பாவுவை அழைத்து சென்று, சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அதன்பின் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சட்டசபை கட்சி தலைவர்கள், சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின், துணை சபாநாயகராக பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
18வது நபராக தேர்வு

தமிழக சட்டசபையில், சிவசண்முகம் பிள்ளை, கோபால மேனன், கிருஷ்ண ராவ், செல்லப்பாண்டியன், சி.பா.ஆதித்தனார், கோவிந்தன், மதியழகன், முனுஆதி, ராஜாராம், பி.எச்.பாண்டியன், தமிழ்குடிமகன், முத்தையா, பிடி.ஆர்.பழனிவேல் ராஜன், காளிமுத்து, ஆவுடையப்பன், ஜெயகுமார், தனபால் ஆகியோர் சபாநாயகர்களாக இருந்துள்ளனர். இவர்களில் கோவிந்தன், தனபால் ஆகியோர், இரு முறை சபாநாயகர்களாக இருந்துள்ளனர். தற்போது, 18வது சபாநாயகராக அப்பாவு இன்று பதவியேற்றார். அதேபோல, 18வது துணை சபாநாயகராக பிச்சாண்டி பதவியேற்றார்.
No comments:
Post a Comment